சாவடித் தலைவர் ஈழவரையரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பத்திரையின் புரவித் தேரானது அடர்ந்த சம்பாபதி வனத்தை நோக்கி மெல்ல விரைந்துகொண்டிருந்தது. புரவித் தேரின் வேகமானது வண்டியினுள் அமர்ந்திருப்பவர்களுக்கு புரவித் தேரைக் குலுக்கி எந்தவொரு இடையூறும் அளிக்காத வண்ணம் அதே நேரம் வண்டியை விரைவாகவும் செலுத்திக்கொண்டிருந்தார் புரவித் தேரின் சாரதி.
வானவல்லியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் பத்திரை. அவளது மடியின் மெது மெதுப்பு, வானவல்லியும் வண்டியில் சாய்ந்திருந்ததால் அவளது கருங்கூந்தலை முன்புறம் எடுத்து விட்டிருந்தாள். அவளது கூந்தலிலிருந்து வெளிவந்த வாசமும், மடியின் மெது மெதுப்பும் பத்திரைக்கு தான் எங்கே தாழை மடலில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருக்கிறோமோ என மயங்கிக் கொண்டிருந்தாள். புரவித் தேர் விரைவாக செல்லும் போது ஏற்பட்ட குலுங்கல் வானவல்லிக்கு இதமாக ஊஞ்சலாடுவது போல இருந்தது. புரவித் தேரில் விலக்கியிருந்த திரை வழியே வானத்தில் தோன்றிய அழகிய காட்சிகளில் தன் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் பத்திரை.
தன் தலைவன் திங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆடைகள் அனைத்தையும் இழந்து பூத்துக் குலுங்குவது போல நட்சத்திரங்களைத் தன் நீல மேனியில் பிரகாசமாய் பளபளக்கும் படி மின்னிக் கொண்டிருந்தாள் வானத்து மங்கை . மேகக்கூட்டங்களில் பட்டு எதிரொளிக்கும் நிலவொளியானது நீலநிற வானுக்கு புது அழகை வழங்கிக்கொண்டிருந்தது. இப்படி வானத்து மங்கை தன் தலைவன் நிலவுக்கு வாரி இறைத்திருந்த பேரழகினைக் காண விரும்பாதது போல நிலவோ வண்டியினுள் அமர்ந்திருந்த வானவல்லியையும் பத்திரையையும் காண விரும்பி தன் வெண்கதிர்களை செலுத்தி வண்டியில் விலகியிருந்த திரைச் சீலை வழியே திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்துவிட்ட வானத்து மங்கை இதனை விரும்பாதது போல நிலவுக்கும் இவர்களுக்கும் இடையில் தன் மேகச் சீலையை செலுத்தி நிலவை தனியாக மறைத்துக் கொண்டாள். வானமங்கை நிலவினை மறைத்துவிட்டதால் ஒளி மறைந்து பாதையெங்கும் இருள் கவ்வ ஆரம்பித்தது.
வண்டியினுள் படுத்திருந்த பத்திரை இத்தகைய அற்புதமான காட்சிகளை தன்னை மறந்த நிலையில் ரசித்துக்கொண்டிருந்தாள்.
இத்தகைய சூழ்நிலையில் புரவித் தேரும் காவல் வீரர்களும் சம்பாபதி வனத்தினுள் நுழைந்துகொண்டிருந்தனர்.
இதுவரை அவர்களுக்கு வெளிச்சத்தைத் தந்து அவர்களுடன் துணையாக வந்த பங்குனி பௌர்ணமி நிலவோ, தான் மேகங்களுக்கிடையில் மறைந்து விளையாடியது போல இவர்களும் இப்படி வனத்தினுள் மரங்களுக்கிடையே சென்று மறைந்துவிட்டார்களே? என வருந்துமளவிற்கு நிலவொளியும் புக இயலாத அடர்ந்த மரங்களை உடையது சம்பாபதி வனம்.
நிலவொளியும் அற்ற சம்பாபதி வனமானது இருள் சூழ்ந்து, ஆங்காகே தோன்றிய சிறு சிறு மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சமும் அவர்களின் புரவித் தேருக்கு அடியில் தொங்கவிடப்பட்ட சிறு விளக்கு மட்டுமே அவர்களுக்கு வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருந்தது.
வானவல்லியும், அவளது மடியில் தலை சாய்த்திருந்த பத்திரையும் வனத்தின் இருள் சூழ்ந்த ரம்மியமான அழகிய காட்சிகளையும், அவ்வப்போது தோன்றும் பறவைகளின் சத்தங்களையும் கேட்டும், ரசித்துக்கொண்டும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இத்தகைய இன்பங்கள் அனைத்தையும் விலகச் செய்து பயத்தை ஏற்படுத்தும் படி தூரத்தில் ஒரு ஓநாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது இவர்களுக்கு கேட்டது.
திடீரென ஏற்பட்ட ஊளைச்சத்தம் பத்திரைக்கு பயத்தை அளித்தது. முதலில் கேட்ட ஒரேயொரு ஓநாயின் ஊளைச் சத்தமானது இப்போது அவர்களை நெருங்கி பன்மடங்கு பெருகி தொடர்ந்து கொண்டு இவர்களை நோக்கி வருவது போல ஊளைச் சத்தத்தின் சுருதியானது அதிகமாகிக் கொண்டிருந்தது.
இதுவரைக்கும் அமைதியாய் இருந்த வனம் சிறிது சிறிதாகத் தனது பயங்கரமான மற்றொரு முகத்தைக் காட்ட ஆரம்பித்தது.
இந்த பயங்கரமான நெருங்கி வரும் ஊளைச் சத்தத்தை கேட்ட பத்திரைக்கு பயத்தில் சற்று வியர்க்க ஆரம்பித்தது.
உடனே பத்திரை, வானவல்லி உனக்கு இந்த சத்தங்களைக் கேட்கும் போது அச்சமாக இல்லையா என்று கேட்டாள்.
அதற்கு வானவல்லி இந்த சத்தங்கள் அனைத்தும் எனக்கு பழகியது பத்திரை, எனக்கு அச்சம் எல்லாம் ஏற்படவில்லை. தாங்கள் தான் பட்டினப்பாக்கத்து மாபெரும் வணிகனின் மகள், தங்களுக்கு இக்காட்சிகள் அனைத்தும் புதிது, இரவுப் பயணமும் புதிது. ஆனால் எனக்கு அப்படியில்லை இவையனைத்தும் எனக்கு பழகிய ஒன்று. இந்த இருள் எனக்கு மிகவும் பிடித்ததும் கூட என்றாள்.
இதைக் கேட்ட பத்திரை பதிலேதும் கூறாமல், எழுந்து வானவல்லியின் கொடி போன்ற விரல்களைப் பற்றிக்கொண்டு புரவித் தேரில் தோய்க்கப்பட்ட பட்டுத் துணியின் மேல் சாய்ந்து கொண்டாள்.
நெருங்கிக் கொண்டே வந்த ஊளைச் சத்தம் திடீரென நின்று போனதால் பத்திரை சற்று நிம்மதி அடைந்தாள், ஆனால் நரிகளின் ஊளைச் சத்தம் அறவே நின்று போனதைக் கண்ட வானவல்லி பெரும் எச்சரிக்கையுடன் காணப்பட்டவளாய் பார்வையையும் காதுகளையும் தீட்டிக்கொண்டு பாதி திறந்திருந்த திரைச் சீலையை முற்றிலும் விலக்கினாள். முன்னால் சென்ற வீரர்கள் அப்படியே நின்றனர். வண்டியின் அடியில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தங்களது பந்தத்தை அனைவரும் கொளுத்திக் கொண்டனர்.
நடக்கும் நிகழ்வுகள் யாவற்றையும் கண்ட பத்திரை யாதும் புரியாதவளாய் வானவல்லியை நோக்கி பார்வையை செலுத்தினாள்.
ஓநாய்களும், நரிகளும் தூரத்தில் இருக்கும் வேளைகளில் மனித நடமாட்டங்களைக் கண்டால் மற்றவைகளுக்குத் தெரியப்படுத்த இப்படி ஊளையிட்டு தெரியப்படுத்திக் கொள்ளும், அப்படி நாம் பயணிப்பதை அறிந்து கொண்ட சில ஓநாய்கள் ஊளையிட்டு மற்றவைகளுக்குத் தெரியப்படுத்தின, மேலும் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்த ஊளைச் சத்தமானது ஓநாய்கள் நம்மை நோக்கி வந்ததைக் குறித்தது என்றாள்.
உடனே பத்திரை, ஊளையிடுவது ஓநாயா அல்லது நரிகளா என்று வினவினாள்.
இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாள் வானவல்லி.
பிறகு பத்திரை நம்மை எத்தனை ஓநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று கேட்டாள்.
இதற்கு வானவல்லி நான் வேண்டுமானால் கீழே இறங்கி எண்ணிவிட்டு வரட்டுமா என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.
இத்தகைய சூழ்நிலையிலும் வானவல்லியின் நகைப்பைக் கேட்டு காவல் வீரர்களும் சேர்ந்து சிரித்தனர்.
இதைக் கேட்ட பத்திரை எப்போதுமே உனக்கு என்னிடம் விளையாட்டுதான் என்று சிணுங்கினாள். கோபப்படாதே பத்திரை, விளையாட்டிற்குத் தானே என்று அவள் பூப்போன்ற தோள் மீது கைவைத்து வருடி ஆறுதல் படுத்தினாள்.
உடனே பத்திரை இதுவரை வண்டியின் விளக்கோடு மட்டுமே வந்த அனைவரும் இப்போது பந்தத்தை ஏற்றிக்கொண்டனரே இது காட்டு விலங்குகளை விரட்டத்தானே என்றாள்.
ஆம், இதுவே காட்டு விலங்குகளை விரட்டப் பயன்படும் உபாயம். ஆனால்...... என்றபடியே வானவல்லி அமைதியடைந்து விட்டாள்.
ஆனால் என்று ஏதோ கூற வந்தாயே வானவல்லி தொடர்ந்து கூறு என்று அவசரப்படுத்தினாள் பத்திரை.
பந்தங்களைக் கொளுத்திக் கொண்டே சென்றால் ஓநாய், நரி போன்ற காட்டு விலங்குகளை சிறிது இடைவெளியில் நம்மிடமிருந்து பிரித்து வைக்கும். ஆனால் நாம் ஏற்றியுள்ள இந்த பந்தத்தால் இன்னும் ஒரு நன்மையையும் உண்டு, ஆனால் இதில் நாம் எதிர்பாராத மாபெரும் மற்றொரு அபாயமும் உள்ளது என்று வானவல்லி கூறிக்கொண்டிருந்த போது பின்னால் வந்த புரவி வீரர்கள் அருகில் உள்ள புதரில் ஏற்பட்ட அசைவினைத் தொடர்ந்து பனை ஓலையிலும் மூங்கில் கட்டையாலும் செய்யப்பட்ட ஒருவித கருவியைத் தட்டி வினோதமான ஒலியை எழுப்பினர். வீரர்களில் சிலர் பந்தத்தை முன்னும் பின்னும் வலது இடமாக நான்கு புறமும் ஆட்டினார்கள்.
புரவித் தேரைச் செலுத்தாமல் சிறிது நேரம் அங்கேயே அனைவரும் நின்று கொண்டிருந்தனர். பின்பு தூரத்தில் நரியின் ஊளைச்சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட அனைவரும் வந்த அபாயம் அனைத்தும் விலகிவிட்டதை எண்ணி பெருமூச்சு விட்டனர்.
அச்சத்தோடு இருந்த பத்திரையைத் தழுவி, இனி அச்சம் கொள்ள அவசியம் ஏதும் இல்லை என்று ஆறுதல் கூறினாள் வானவல்லி.
சிறிது நேரம் அவர்களது பயணம் அமைதியாய் போய்கொண்டிருந்தது, பெரும் புயலுக்குப் பின் ஏற்படும் அமைதியைப் போல அங்கும் அமைதியே நிலவியது. திடீரென விழிப்புற்றவளாய் பத்திரை ஏதோ ஒரு நன்மையும் பெரும் அபாயமும் உள்ளது என்று கூறினாயே, அது என்ன? என்று வினவினாள்.
நன்மை என்றால் நம் ஒளிப் பந்தத்தினைப் பார்த்து வனத்தின் பிற பகுதிகளில் உள்ள நம் சோழ வீரர்களின் உதவிகள் நமக்கு கிடைக்கலாம் என்றாள் வானவல்லி.
இராக் காவல் காக்கும் வீரர்களா? என்றாள் பத்திரை.
ஆமாம் என்றாள் வானவல்லி.
அவர்களின் படைத் தலைவரும் வருவாரா? என்று தன் முல்லைப் பற்கள் ஒளிரும் படி சிரித்துக் கொண்டே கேட்டாள் பத்திரை.
வந்தாலும் வரலாம், யாம் அறியேன் என்று மறுமொழி கூறினாள் வானவல்லி.
புகார் நகரத்தைக் காவல் காக்கும் படை வீரர்களின் தலைவரான செங்குவீரரும் வருவாரா? என்று மீண்டும் கேள்வியெழுப்பினாள் பத்திரை.
செங்குவீரன் என்ற பெயரைக் கேட்டதும் வானவல்லியின் மனதில் ஆயிரம் மின்னல் கீற்றுகள் தோன்றியது. அது அவளுக்கு வலியை கொடுத்ததா அல்லது மகிழ்ச்சியைக் கொடுத்ததா என்று அறிய அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் பத்திரை. இருப்பினும் அந்தப் பெயர் அவளது முக மலர்ச்சியை அதிகமாக்கியது. அனைத்தையும் நொடிப்பொழுதில் மறைத்துக் கொண்டு அதுதான் காவல் தலைவரும் வந்தாலும் வரலாம் என்றேனே, அதென்ன செங்கு வீரன் வருவாரா என்று என்னை கிண்டல் புரிகிறாயா? இனி அந்தப் பெயரை என் முன் ஒலிக்காதே என்று எரிந்து விழுந்தால் வானவல்லி.
வானவல்லியை தன்னால் புரிந்து கொள்ள இயலாததை எண்ணி இனி அப்படிக் கூற மாட்டேன் என்று கூறிவிட்டு, பின்பு பேச்சை மாற்ற விரும்பியவளாய் இந்த பந்தத்தினால் மற்றுமொரு பெரும் தீங்கும் நேரலாம் என்றாயே அது என்ன என்றாள் பத்திரை.
நாம் ஏற்றிய இந்த பந்தத்தின் ஒளியைக் கொண்டு வீரர்கள் அல்லாது இராக் கள்வர்கள், ஆறலைக் கள்வர்கள், எயினர் கள்வர்கள், உயிர் பலி வாங்கும் கபாலிகர்கள் என யாரும் நம்மை எளிதில் நாம் வருவதை அடையாளம் கண்டுபிடித்து விட இயலும் என்று பதிலளித்தாள் வானவல்லி.
அது என்ன கள்வர்கள் என்றால் பொதுமை தானே! ஏன் இப்படி தனித் தனியாக இத்தனைப் பெயர்களில் கூறுகிறாய் என்று கேட்டாள் பத்திரை.
இவர்களின் பெயர்களுக்கு ஏற்பவே இவர்களின் குணங்களும் உண்டு. இராக் கள்வர்கள் என்பவர்கள் அவர்களின் தலைவர் காளனின் தலைமையில் செயல்படும் கூட்டத்தினர். இவர்கள் இரவு நேரங்களில் அதிகமாக செயல்படுவர். நகை, பொன், முதலான பொருள்களை பறித்துக் கொள்வது மட்டுமல்லாது கொலைப் பழிக்கும் அஞ்சாதவர்கள். நாம் சம்பாபதி வனத்தினுள் நுழைவதற்கு முன் சாவடித் தலைவர் ஈழவாவிரயர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறினாரே அந்த கள்வர் கூட்டத்தினர் இவர்கள் தான் என்றாள் வானவல்லி.
செங்குவீரன் வந்த பிறகு இவர்கள் அதிகம் தலைக் காட்டுவதில்லை என்று கூறினார்களே! அவர்களா இவர்கள் என்றாள் பத்திரை.
செங்குவீரனின் புகழைக் கேட்டதும் அவள் பெருமிதத்தோடு ஆமாம் என்று தலையாட்டினாள் வானவல்லி.
செங்குவீரனின் பெயரைக் கேட்டதும் வானவல்லியின் முகத்தில் முதலில் தோன்றிய மலர்ச்சியையும் பின்பு தோன்றிய கோபத்தையும் கவனிக்கத் தவறவில்லை பத்திரை.
ஆறலைக் கள்வர்கள் என்பவர்கள் ஒருவகை நாக மரபினர். இவர்களின் குலத் தொழிலே களவு தான். இவர்கள் வழிப்பறி செய்தல், கொள்ளை, சூறையாடுதல் என அனைத்தும் செய்வர், ஆனால் இவர்கள் கொலை செய்யவோ மற்றவர்களை துன்புறுத்தவோ துணிய மாட்டார்கள்.எயினர் கள்வர்கள் என்பவர்கள் எயினர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பொழுதுபோக்கிற்காக களவு செய்வர், இவர்களால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. கபாலிகர்கள் என்பவர்கள் இருட்டு மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது உலகமே இருளில் தான் இயங்க ஆரம்பிக்கும். இவர்களைப் பற்றிதான் நீ அதிகம் தெரிந்திருப்பாயே! என்றாள் வானவல்லி.
பட்டினப்பாக்கத்தின் இரத்தின மங்கையான பத்திரை கள்வர்களில் இத்தனைப் பிரிவினர் உள்ளனரா என்று வியந்து,இவை அனைத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்தது யார் என்று வினவினாள் பத்திரை.
வானவல்லியிடமிருந்து பதிலேதும் வராததைக் கண்டு, நான் யாரிடமிருந்து என தெரிந்து கொண்டேன் என்று கிண்டலோடு சிரித்தாள் பத்திரை.
வானவல்லியின் கண்களிலிருந்து பெருகும் கோபத் தீ, அவளை எரித்துவிடுவது போல அவளை நோக்கிக் கொண்டிருந்தது.
இதனை உணர்ந்த பத்திரை நிலைமையை புரிந்து கொண்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் இருப்பதே நல்லது என்றவளாய் அமைதியானாள்.ஆபத்தேதும் இனி நேராது என்று நிம்மதியடைந்தாள்.
உண்மையான ஆபத்து இனிதான் தோன்றப் போகிறது என்பதை உணர்ந்த வானவல்லி மட்டும் எச்சரிக்கை உணர்வுடனே புரவி வண்டியில் அமர்ந்திருந்தாள். ஆனால் அத்தருணத்தில் வானவல்லி எதிர்பார்ப்பதை விட பெரியதும், கொடிய ஆபத்தும் வரப்போவதை யாருமே நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. .
தொடரும்...
சரித்திர நாவல்: வானவல்லி -2
நன்பர்கள் அணைவருக்கும் வணக்கம். இனி வரும் ஒவ்வொரு புதனன்றும் வானவல்லி என்ற சரித்திர நாவல் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துப் பிழை, சொற்பிழை ஏதேனும் காணப்பட்டால் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுவாரஸ்யமாக உள்ளது... முடிவில் ஆவலுடன்... தொடர்கிறேன்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம் அண்ணா...
Deleteவருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி...
அடடா அருமையான தொடர் காட்டு வழிப்பயணம் கலகலப்பாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள் வெற்றி
ReplyDeleteகருத்திற்கு நன்றி அண்ணா...
Deleteகுலுங்கள் - (ல்)
ReplyDeleteஇரைத்திருந்த - இறைத்திருந்த
விளையாண்டது - பேச்சுத் தமிழோ என ஓரு ஐயம் வருகிறது. -(விளையாடியது) சரியாகத் தெரியவில்லை.
முன்னாள் சென்ற - முன்னால் சென்ற
செய்யப்பட - செய்யப்பட்ட
கதை நன்றாகச் செல்கிறது. இனிய வாழ்த்து.
(நான் கவனித்த சொற்பிழைகள் எழுதினேன்.)
வேதா. இலங்காதிலகம்.
தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி...
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...
வணக்கம்...
Deleteதாங்கள் கூறிய பிழைகள் அனைத்தையும் சரிசெய்து விட்டேன்...
நன்றி...
தொடர்ந்து பிழைகளை சுட்டிக் காட்டுங்கள்...
Deleteஅருமையான தொடர். . .கலக்குங்கள். . .
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteகதைப்போக்கு நன்றாக உள்ளது.. நானும் வேதா அவர்கள் சுட்டிக்காட்டியதைத்தான் கவனித்தேன்
ReplyDeleteநன்றி சகோதரி...
Deleteவேதாம்மா கூறிய தவறுகளை சரி செய்து விட்டேன்...
வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி...
அருமை.
ReplyDeleteநன்றி...
Deleteசரித்திர நாவலுக்கே உரிய சொல்லாடல்கள் ... கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் பயணிக்க வைக்கும் சுவாரசியம் ...
ReplyDeleteதங்கள் இனிய பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...
Deleteகருத்து சொல்லப் பொறுமை இல்லை, அடுத்தப் பகுதிக்குச் செல்லலாம் என்று நினைத்தேன்..ஆனால்....
ReplyDelete//இப்படி வானத்து மங்கை தன் தலைவன் நிலவுக்கு வாரி இறைத்திருந்த பேரழகினைக் காண விரும்பாதது போல நிலவோ வண்டியினுள் அமர்ந்திருந்த வானவல்லியையும் பத்திரையையும் காண விரும்பி தன் வெண்கதிர்களை செலுத்தி வண்டியில் விலகியிருந்த திரைச் சீலை வழியே திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்துவிட்ட வானத்து மங்கை இதனை விரும்பாதது போல நிலவுக்கும் இவர்களுக்கும் இடையில் தன் மேகச் சீலையை செலுத்தி நிலவை தனியாக மறைத்துக் கொண்டாள். வானமங்கை நிலவினை மறைத்துவிட்டதால் ஒளி மறைந்து பாதையெங்கும் இருள் கவ்வ ஆரம்பித்தது.// மிக அருமை!!
நன்றி சகோதரி... தங்கள் இந்த கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...
Delete