Dec 29, 2013

மலர் தேடும் தும்பியே!

கடும் தாகத்தோடு
மலருக்கு மலர் பறந்து
மது பருகும் தும்பியே
உன் தாகம் தீர்ந்ததா?

ஒருமுறை என் காதலியின்
இதழ்களின் மதுவைத் தான்
பருகிப்பாறேன்...

உன் தாகம் மறைந்து
மோகம் கொண்டு
மலருக்குப் பதில்
அவளையே சுற்ற ஆரம்பித்துவிடுவாய்,
என்னைப் போலவே...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Dec 22, 2013

சிறைப் பறவையின் காதல்

உன் விழிகள் இரண்டும்
என் இதயம் துளைக்கும்
வில் அம்புகள்...

உன் அம்புகள் துளைத்த
என் இதயத்தில் வழிவது
குருதி அல்ல- அது என் காதல்...

என் திசையெங்கும்
காற்றாய் சூழ்ந்திருக்கிறது
எனை திணறடிக்கும் உன் காதல்...

சுவாசிப்பது காற்றை அல்ல.
உன் காதலை...

தொடுவானமாய் ஆகிவிட்டதென்
காதல்...

தொட்டுவிடும் தொலைவில் நீ
தொட இயலாத தொலைவில் நான்...

காரணம்-
இது சிறைப் பறவையின்
சிறகொடிந்த காதல்...

திருமதி.வெ.தேவி...
தஞ்சை....

தோழி திருமதி.தேவி வெற்றிவேல்  தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இல்லத்தரசி. இவரது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பிய கவிதை இது...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Dec 18, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -3

சாவடித் தலைவர் ஈழவரையரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பத்திரையின் புரவித் தேரானது அடர்ந்த சம்பாபதி வனத்தை நோக்கி மெல்ல விரைந்துகொண்டிருந்தது. புரவித் தேரின் வேகமானது வண்டியினுள் அமர்ந்திருப்பவர்களுக்கு புரவித் தேரைக் குலுக்கி எந்தவொரு இடையூறும் அளிக்காத வண்ணம் அதே நேரம் வண்டியை விரைவாகவும் செலுத்திக்கொண்டிருந்தார் புரவித் தேரின் சாரதி.

Dec 11, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -2

முன்பொருநாள் சாரங்கலன்1 என்னும் சிறுவன் தன்னந் தனியாக சுடுகாட்டிற்குச் சென்றுவிட்டான். அங்கொரு பேய்மகள் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் தலையை தின்றுகொண்டு எலும்புகளை கையிலேந்தி இரத்தம் சொட்ட சொட்ட கூத்தாடிக் கொண்டிருந்தாள். இதனைக் கண்ட சிறுவன் இரத்தம் உறைய நடுநடுங்கி, பயந்து ஓடிவந்து தாய் கோதைமையிடம் கூறிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் தாய் கோதைமை அவனை மார்போடு அனைத்து அச்சம் விலகும்படி ஆறுதல் படுத்த முயன்றாள், இருப்பினும் அவனது பயம் விலகியபாடில்லை.

Dec 7, 2013

உதிரும் நான் -26

வரம் வேண்டியே  
தவமிருப்பர்  
அனைவரும்...

நானோ காதல்  
வரத்தைப் பெற்றபின்னும்
தவமிருந்து கொண்டிருக்கிறேன்  
அவள் தரிசனத்திற்க்காய்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

  

Dec 4, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -1

ஈழம், யவனம், சாவகத் தீவு, பவளத்தீவு, பாண்டிய நாடு, சீனம், கடாரம்  போன்ற தேசங்களிலிருந்து வணிகர்களையும் கடலோடிகளையும் கவரும் மாபெரும் துறைமுக நகரமாக நாவலந்தீவினுள் அமைந்திருந்த மாபெரும் சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியது புகார்.

பல தேசத்து வணிகர்களும் கடலோடிகளும் தொடர்ந்து வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருந்ததனால் புகார் நகரில் இருந்த துறைமுகம் எப்போதும் பரபரப்புடனே இருந்து கொண்டிருந்தது.