Nov 28, 2012

சொல்லித் தெரிவதில்லையடி




சொல்லித் தெரிவதில்லையடி
நான் உன்
மீது கொண்ட நேசம்!

என்னிடம் கூறிவிட்டு,
அனுமதித்த பிறகா, நீ
என்னுள் வந்தாய்!

இல்லையே! நான்
அறியாமல் என்னுள் நுழைந்தாய்!
உறக்கத்தை களைத்தாய்!
நினைவினை சிதறடித்தாய்!
கனவின் முழு நாயகியும் ஆனாள்!!!

அன்பில் உருக வைத்தாய்!
ஏக்கத்தில் சிதற வைத்தாய்!
பிரிவினில் அழவும் வைத்தாய்!
இவற்றை, நீ என்
அனுமதியுடனா செய்கிறாய்!!!
இல்லையே!

நானும் சொல்லப் போவதில்லை!
என் அன்பை, நேசத்தை, காதலை
உன்னிடம்...

என்னைப்போல் நீயாக
எப்போது அன்பை
உணருவாய் என்று பார்க்கலாம்!

அதுவரையில் சொல்லப் போவதில்லை
நான், உன்னிடம் என் அன்பை...
காலம் தாழ்த்தி
கானல் கனவில் கரையுமுன்
சொல்லிவிடு என்னிடம்...
என் அன்பே!!!

சொல்லித் தெரிவதில்லையடி!
என் காதல் உன்னிடம்.
சொல்லித் தெரிவதில்லையடி...!!!

Nov 25, 2012

களவாடப் படும் கனவுகள்


தினமும் வந்துவிடுகிறாள்
என்னுள், தவறாமல்
கனவுப் பொழுதிலும்,
நினைவுப் பொழுதிலும்...

வரும் வேளையில்
என் தேவதை
அழகுடன் உலாவுகிறாள்...

எங்கும் வருகிறாள்...
அவளாகவே கொஞ்சுகிறாள்,
மகிழ்ச்சியின் எல்லைக்கும்
கூட்டிச் செல்லுகிறாள்...

கரம் பிடித்து நடக்கிறாள்,
செல்ல சண்டையிடுகிறாள்,
காதோடு காதாய் ரகசியம் பேசுகிறாள்
என்னுள் நித்தமும், எனக்கு
மட்டும் கேட்பதுபோல்...

அத்தனையும் கொடுத்துவிட்டு
செல்லும் வேளையில் மட்டும்,
மறக்காமல் என் உறக்கத்தையும்,
கனவையும் அவளுடன்
களவாடிவிட்டுச் சென்றுவிடுகிறாள்...

கனவுடன், என்னையும் களவாடுவாள்
என்ற எதிர் பார்ப்பில்
களவாடப்பட  காத்திருக்கிறேன்
அவள் வருகைக்காய்
 அடுத்த நாளும்...!!!

.................................வெற்றிவேல்...



Nov 21, 2012

உயிர் முடிச்சு

உயிரில் எங்கேயோ
போட்டுக்கொண்ட முடிச்சு!
நட்பாய், காதலாய்!

நீ போட்ட முடிச்சா? இல்லை
நான் போட்ட முடிச்சா? இல்லை
நாம் நமக்காக போட்டுக் கொண்ட
முடிச்சா இது!!!

முடிச்சின் இரு துருவங்களாய்
நாம்! முன் பாதி நீ!
பின் பாதி நான்?

நெருங்கி வந்து உன்னுடன்
தொடரலாம்
என்றாலும், விலகிச் சென்றே
உயிரைக் குடிக்கிறாய்!!

அவிழ்த்துக்கொள்ள ஆசைப் பட்டு
விலகினாலும்
முடிச்சை இறுக்கி
உயிரை வாங்க விழைகிறாய்!

இருவரும் விலக முற்ப்பட
நம் நட்பு மட்டும்
முடிச்சில் மரணிக்க
எத்தனிக்கிறது நமக்காய்...

........................................வெற்றிவேல்...



Nov 17, 2012

கேள்விகளால் ஆனவள் ! கேள்வியாய் ஆனவள் !

வெறுமையாய் இருந்த என்
மனக் காகிதம் ...

கிறுக்கக் கூடத் தெரியாமல்
இருந்த நான்...

அழகாய் உள்நுழைந்தவள்
உயிரோவியமாய் ஆகிவிட்டாய்...

சில நேரம் அழகிய கவிதைகளாய்,
மனம் வருடும் ஓவியமாய்,
கடந்து செல்லும் கனவுகளாய்..

எப்படி நான் வரைந்தாலும் முடிவில்
மட்டும் தவறாமல் வந்து
நனைத்து விட்டுச்
செல்லும் மனச் சாரலாய் நீ ...

என் மன ஏட்டில் நான் வரையும்
எழுத்து, சொல்,
தொடர் புள்ளி, கார்ப் புள்ளி,
தவறாமல் வந்து முடித்து வைக்கும்'
முற்றுப் புள்ளி...
யாவும் நீயே!!!

காரணமில்லாமல் தோன்றும்
ஆச்சர்யம், வியப்பு, மகிழ்ச்சி
என நான் உணரும்
யாவும் நீயே...

ஆனால்  முடிவில் மட்டும்
தவறாமல்
கேள்விக் குறியாய் மட்டும்
நின்று கொள்கிறாய் என்னுள்...

விடையாய்  வரும் காலம் எப்போது???


Nov 13, 2012

இன்று எனக்கு தீபாவளி தானா?

காலையில் எழுந்தாள்
மேகம் கரைத்த மழையைக் கொண்டு
நீராடினாள்- என்
அழகு தேவதை...

வைகறையில் திரண்டிருந்த
இருட்டு அனைத்தையும் சுருட்டி
உடையாக்கிக் கொண்டு
கதிரவனுக்கும் வழிவிட்டாள்...

கரும் மேகங்களுக்கிடையில்
தோன்றிய மின்னலைக் கொண்டு
தலையைத் துவட்டி
சிண்டு போட்டுக் கொண்டாள்...


நிலவின் முதுகைச் சுரண்டி
முகத்தில் பூசிக் கொண்டாள்
என் தேவதை...

கீழை வானில் தோன்றிய
விடிவெள்ளியை எடுத்து தன்
நெற்றியிலும் இட்டுக்கொண்டாள்...


என் கனவில் இவளைப் பார்த்த
என் விழிகளைப் பறித்து- நான்
காணும் இருளைக் குழைத்து
கண் மை பூசிக் கொண்டாள்...

இப்படி செய்த இவள் இன்று
முழு தேவதையாக- முழுமதியாகி
என் வானில் உலாவுகிறாள்...

இவளே இன்று என் வானில்
முழு நிலவாக உலாவ- எனக்கு
எப்படி இன்று தீபாவளி?

தீபாவளி-- இது நிலவற்ற
அமாவாசையில் கொண்டாடும்
தீபத் திருநாள் அல்லவா!!!

நான் என்று கொண்டாடுவது?

..................................................வெற்றிவேல்...


Nov 2, 2012

நீ, நான்

உறக்கத்தில் நான்
       அதில் தோன்றும் கனவெல்லாம் நீ!!!

முகம் பார்க்கும் நான்
       அதில் தோன்றும் பிம்பமாய் நீ!!!

இரவெல்லாம் நான்
       அதன் உறக்கமெல்லாம் நீ!!!

வெளிச்சத்தில் நான்
       அதன் நிழலெல்லாம் நீ!!!

மழையில் நனையும் நான்
       என்னை நனைக்கும் மழையாய் நீ!!!

தாகத்தில் நான்
      தூரத் தெரியும் கானல் நீராய் நீ!!!

தூரப் பறக்கும் பறவையாய் நான்
       நான் துரத்தும் வான் முகிலாய் நீ!!!

கார் மேகமாய் நான்
       என்னைக் கிழிக்கும் மாய மோகினியாய் நீ!!!

காண்பதெல்லாம் நான்
      காணும் காட்சியெல்லாம் நீ!!!

வாழ்வதெல்லாம் நான்
     என்னை வாட்டும் துயரமெல்லாம் நீ!!!

தொலைந்து போன நான்
     தூரத் தெரியும் விளக்காய் நீ!!!

உடலாய் நான்
     என்னுள் ஓடும் உயிராய் நீ!!!

............................................................................வெற்றிவேல்