Apr 8, 2014

கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.

வானவல்லிக்காக கரிகாற் திருமாவளவனின் வெற்றி பற்றி தேடியபோது கண்ட நூல் தான் கலிங்கத்துப் பரணி. கரிகாற் பெருவளத்தான் இமயம் வரை படையெடுத்து வென்ற பின், இமயத்தில் தனது புலிச்சின்னத்தை பொறித்தான் என்று சிலப்பதிகாரமும் கலிங்கத்துப் பரணியும் கூறுகிறது. கலிங்கத்துப் பரணியை வாங்கி வாசிக்கும் வரை அது போர் பற்றி விளக்கும் நூலாகவே கருதிக்கொண்டிருந்தேன். புத்தகத்தை வாங்காமல் விட்டிருந்தால் அதில் உள்ள 52 மயக்கவைக்கும் காதல் பாக்கள் பற்றி அறிந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். அனைத்தும் சுவையுடையவை...


கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியம் என்ற பகுதியில் சோழ குலப் பெருமையை, வியாசர் மகாபாரதத்தை கூறியபோது விநாயகன் தனது ஒற்றைக் கொம்பால் எழுதியது போல  சோழ குலப் பெருமையை நாரதர் கூற  கரிகாற் பெருவளத்தான்  இமயத்தில் புலிச் சின்னத்தோடு பொறிப்பதாக அமைந்திருக்கும். அதனைப் படித்த போது எதிர்பாராமல் கண்களில் மாட்டியது தான் கடை திறப்புப் பகுதி. கடை எனறால் கதவு எனப் பொருள்.

கலிங்கத்துப் பரணி, செயங்கொண்டார், கடை திறப்பு, கொங்கை, இடை, இளமுலை, நுண் இடை,

கடை திறப்பு என்றால் கலிங்கப் போருக்கு சென்ற சோழ தேசத்து வீரர்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டார்கள். போருக்குச் சென்ற தனது தலைவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்களே! காத்திருந்தது போதும்.  உங்கள் தலைவர் வெற்றியோடு வந்துள்ளார்.உங்கள் வீட்டுக் கதவினை திறப்பீர்களாக!!! என பரணி பாடிய செயங்கொண்டார் பாடியிருப்பார். இலக்கியத்திலும் காதலிலும் நாட்டம் உடையவர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய பகுதி அது. காதல் சொட்ட சொட்ட தொடை நயமான எதுகை, மோனை வசப்பட அழகாக எழுதியிருப்பார்.  அதிலும் அவர் பெண்களைப் பற்றி வர்ணித்திருப்பதை ஒவ்வொரு ஆடவரும் வாசிக்க வேண்டிய பகுதி அது.

ஆக இனி கடை திறப்பு பகுதியில் உள்ள 52 பாடலையும் எழுதி அதற்கான விளக்கத்தோடு தொடரலாம் என இருக்கிறேன். பாடலோடு பரணி பற்றியும் குலோத்துங்கன் எனப்படும் அபயன் பற்றியும் தகவல்களையும் கூறப்போகிறேன்.

                  சூதளவு அளவெனும் இளமுலைத்
                          துடி அளவு அளவெனும் நுண்இடைக்
                  காதளவு அளவெனும் மதர் விழிக் 
                          கடலமுது அனையவர் திறமினோ!                                    பாடல்- 21

பாடலின் பொருள்: செழித்த கொங்கைகளையும்,சிறுத்த இடையினையினையும், அழகிய விழிகளையும் கொண்ட கடலின் தோன்றிய அமுதினை ஒத்த வாழ்வு தரும் பெண்களே! கதவினைத் திறவுங்கள்...! 

விளக்கம்: சூதாட்டத்தில் பயன்படுத்தப் படும் 'வட்டு' என்னும் கருவியைப் போன்ற அளவுடைய இளைய, செழித்த மார்பகத்தையும், உடுக்கையின் நடுப்பகுதி  ஒடுங்கியிருப்பது போன்ற சிறுத்த நுட்பமான இடையினையும், மங்கைப் பருவத்தின் கர்வத்தால் காதை அளாவும் நீண்ட அழகிய விழிகளையும் கொண்ட கடலில் தோன்றும் அமுதினை ஒத்த வாழ்வு தரும் பெண்களே! கதவைத் திறவுங்கள்!!! நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உங்கள் தலைவர் வெற்றியோடு திரும்பிவிட்டார்...

இந்தப் ஆடலில் அமுது தன்னை உண்டார்க்கு இன்பத்தையும், மரணமற்ற சிரஞ்சீவி வாழ்வைத் தருவது போல இம்மெல்லிய இடையுடையப் பெண்களைப் புணரும் தம்கொழுநர்க்கு இன்பம் பயப்பவர் என்று 'கடலமுது தனையவர்' என்ற இரட்டை அர்த்தத்தில் (சிலேடையில்) கூறியுள்ளார் கவிஞர்.

நுண்இடை என்ற ஒரே சொல் மூலம் நுண்ணிய சிறுத்த இடை மற்றும் நுட்பமான அதாவது அழகிய இடை என சிலேடையில் கூறியுள்ளார்.

அனையவர் என்ற சொல் மூலம் அணைப்பவர் மற்றும் ஒத்தவர் என சிலேடையில் வழங்கியுள்ளார்.

பொருள்: சூது- சூதாடும் கருவி, துடி- உடுக்கை, நுண்- நுட்பமான, இடை- இடுப்பு, மதர்- செருக்கு, கர்வம், அனையவர்- ஒத்தவர்

மேலும் பரணி பற்றி:
முதலில் ஓட்டக் கூத்தர் தான் கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றினார். பின்னர் ஜெயங்கொண்டார் குலோத்துங்கச் சோழனின் கலிங்கப் போர் பற்றி பபரணி இயற்றிய பின்னர் ஜெயங்கோண்டாரின் பாடல் சுவையில் அது காலப் போக்கில் மறைந்துபோயிற்று. பரணி என்றாலே ஜெயங்கொண்டார் என்றே அனைவரும் கூறுவர். பரணிக்கோர் செயங்கொண்டார் என்ற வரியே செயங்கொண்டாரின் திறத்தைப் புரிய வைக்கப் போதுமானது...

கடை விரிப்பு தொடரும்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

16 comments:

 1. வணக்கம் சகோதரர்
  அருமையான தகவலைத் தந்தமைக்கு முதலில் நன்றிகள். நானும் கலிங்கத்துப் பரணி போரைப் பற்றிக் கூறுவது என்று தான் நினைத்திருந்தேன் தங்கள் பதிவைப் படிக்கும் வரை. பாடலை நன்கு விளக்கிய விதம் அருமை. கடை விரிப்பு தொடரட்டும். நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா...

   தொடர்ந்து இணைந்திருங்கள். நானும் தொடர்கிறேன். தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

   Delete
 2. மயக்கும் வர்ணனை - பொருள் விளக்கமும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணா...

   Delete
 3. காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்தது என்றொரு இருபொருள் உவமை வரும். மிக ரசித்த விஷயம். முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை. இப்போது துவங்கி இங்கே படிப்பதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. மயக்கும் அன்னைத் தமிழை அழகுறத் தந்துள்ளீர்கள். நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. காஞ்சியிருக்கக் கலிங்கம் குன்றியது. இந்த உவமையை சொல்லியே சாண்டில்யன் கடல் புறாவை தொடங்கியிருப்பார்.

   பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா... தொடர்ந்து இணைந்திருங்கள்...

   Delete
 4. தம்பி, ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கும்படி செய்கிறது நீ செய்யும் ஆராய்ச்சிகள்..

  முழுவதும் படித்தேன்.. கடைவிரிப்பு செய்யும் போதெல்லாம் ஆவியின் வருகை இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. தம்பி, ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கும்படி செய்கிறது நீ செய்யும் ஆராய்ச்சிகள்.. ///////////////////////////

   பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

   முழுவதும் படித்தேன்.. கடைவிரிப்பு செய்யும் போதெல்லாம் ஆவியின் வருகை இருக்கும்..///////////////////////////////////////////////

   நிச்சயம் வாருங்கள் அண்ணா. அனைவரும் படிக்க வேண்டிய பகுதி அது. தெரிந்துகொள்ள வேண்டியது...

   தொடர்ந்து இணைந்திருங்கள் அண்ணா.... மிக்க நன்றி.

   Delete
 5. கலிங்கத்து பரணியின் ஓரிரு பாடல்கள் படிக்கும் போது படித்தவை! இந்த அளவிற்கு படித்தது இல்லை! தங்கள் ஆராய்ச்சி தொடரட்டும்! கடைவீதியில் நல்ல பொருட்கள் கிடைப்பதால் கட்டாயம் வருவேன்! தொடர்வேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பள்ளியில் போர் பாடியது பகுதியில் கலிங்க வீரர்கள் முள்ளில் சிக்கி கழண்டு எஞ்சிய முடிகளையும் கைகளால் புடிங்கிக்கொண்டு தங்களை சமணர்கள் என்றும் வில்லின் நாணில் இருந்த கயிற்றை தோளில் பூணூலாக அணிந்து கொண்டு தங்களை பிராமணர்கள் என்றும் சொல்லி தப்பித்த பாக்களை படித்திருப்பீர்கள். நானும் அதைத் தான் படித்தேன்.

   நிச்சயம் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் சிறந்த கருத்துகள் இங்கு கிடைக்கும் அண்ணா...

   தொடர்ந்து இணைந்திருங்கள். மிக்க நன்றி...

   Delete
 6. நானும் கலிங்கத்துப்பரணியின் கூளி, பேய் எல்லாம் படித்துப் பயந்து விட்டுவிட்டேன்..கடை விரிப்புக்கு தொடர்ந்து வருகிறேன்..
  கடை-கதவு என்ற அர்த்தத்தில் தானா இரவில், அடுக்களை கடையைச் சாத்தியாச்சு என்று சொல்கின்றனர்? பகிர்விற்கு நன்றி..

  வாழ்த்துக்கள் வெற்றிவேல்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வாருங்கள் அக்கா...

   வருகைக்கு மிக்க நன்றி...

   கடை என்றால் கதவு என்று அர்த்தம். அந்த அர்த்தத்தில் அப்படி கூறுகிறார்கள் போல.

   Delete
 7. அருமை வெற்றிவேல்.. தொடர்ந்து வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து இணைந்திருங்கள் அண்ணா...

   நன்றி...

   Delete
 8. Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...