Sep 11, 2013

இருண்டகால தேடல்: யார் இந்த களப்பிரர்கள்?

கடந்த பதிவில் (மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்)  களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள்  யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம்.

  • களப்பிரர்கள் என்பவர்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்கள். அவர்கள் தான் பிறகு ஒன்று சேர்ந்து படை திரட்டி தமிழகத்தைக் கைப்பற்றி முன்னூறு வருடங்கள் ஆண்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். 
ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தொண்டை நாடு என்பது பல்லவர்கள் ஆண்ட பகுதி.  அதாவது தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்று சென்னையை உள்ளடக்கிய பகுதி. களப்பிரர்கள் காலத்தில் பல்லவர்களும் செழிப்பாகவே இருந்தனர், அதனால் தொண்டை மண்டலத்தின் காட்டுப் பகுதியில் இருந்து களப்பிரர்கள் எழுச்சியடைந்தனர் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
  • களப்பிரர்கள் என்பவர்கள் கலப்பை கொண்டு உழுத விவசாயப் பெருகுடி மக்கள். கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பர் என்று மறுவி பின்னர் களப்பறையர் என மாறியது. களப்பரையர் என்ற பெயர் தான் பிறகு களப்பிரர் என்று மருவியது என்றும் கூறுகின்றனர். தம்முடைய சொந்த நிலத்தில் பயிர் செய்யும் வேளாளர்களை உழுதுண்பர், ஏரின்வளனர், வெள்ளாளர், கரலர், கலமர் என்ற பெயர்களில் அழைத்தனர்.
ஆனால், இந்தக் கருத்தும் ஏற்றுக்கொள்வது போல இல்லை. ஏனெனில் விவசாயக் குடி மக்கள் படை திரட்டி ஆட்சியைக் கைப்பற்றினர் என்பதற்கு சொல்லிக்கொள்ளும் படி ஆதாரங்கள் ஏதும் அறியும் படி இல்லை.
  • களப்பிரர்கள் என்ற களப்பாளர்கள் பண்டைய தமிழ்க் குடிகளைச் சேர்ந்த சைவ மரபைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
களப்பிரர்கள் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. அதாவது புதுக்கோட்டை சித்தன்ன வாசல் குகைக் கோயில், குமரியில் உள்ள சிதறால் மலை மற்றும் உளுந்தூர்ப் பேட்டையில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் ஆகிய சமண குடைவரைக் கோயில்கள் களப்பிரர்கள் காலத்திய சமண குகைக் கோயில்களே என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. களப்பிரர்களின் மதம் சமணம் தான், அவர்களின் ஆதரவும் சமண மதத்திற்கே இருந்தது. மாறாக அவர்கள் சைவ மரபைச் சார்ந்தவர்கள் என்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்கள் ஆரியர்களை (அய்யர்கள்) ஆதரிக்காமல் இருந்த காரணத்திலிருந்து களப்பிரர்களுக்கும் சைவ மரபிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். 

அக்காலத்தில் ஆரியர்களுக்கு அவர்கள் எடைக்கு எடை பொன், நிலம் ஆகியவை தானங்களாக வழங்கப்படும் நிலை இருந்தது. இவை அனைத்தையும் களப்பிரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதனாலேயே சைவ ஆராய்ச்சியாளர்கள் இக்காலத்தை இருண்ட காலம் என அவர்கள் அழைக்கின்றனர். சைவத்தையும், ஆரியர்களையும் எதிர்த்த இவர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஏற்க்கவே இயலாது...
  • கர்னாடக மாநிலத்தைச் சார்ந்த நந்தி மலையில் வாழ்ந்த முரட்டுக் குடியைச் சேர்ந்த மக்கள் தான் இந்த களப்பிரர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் அந்த மலைப்பகுதிகளில் வாழ்ந்த கள்வர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது. 

மைசூரில் கிடைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் கர்நாடகத்தின் மலைக் காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் அதில் உள்ளதாக கூறுகின்றனர். 
  • சோழ நாட்டில் களப்பாள் என்ற இனக்குழுவினர் தான் இந்த களப்பிரர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது.
இது வெறும் வாதமாக மட்டுமே உள்ளதே தவிர எந்த ஆவணங்களும் அப்படிக் கூறவில்லை.
  • களப்பிரர்கள் தமிழ் அல்லாத நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை கைப்பற்றி மூன்று நூற்றாண்டுகள் ஆண்டனர் என்றும் கூறுகின்றனர்.
சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது கி.பி.300- கி.பி.600) தென்னகம் முழுவதும் தமிழே வழங்கப் பெற்றது. கி.பி 800க்குப் பிறகுதான் கன்னட மொழியே தோன்றியது. அதிலும் அவர்கள் கன்னட நாட்டிலிருந்து வந்தனர் என்ற கருத்தால் அவர்களும் தமிழர்களே என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் காலம், அவர்கள் வரலாறு என அனைத்தும் அழிக்கப்பட்டு  தமிழகத்திலிருந்தே அவர்கள் விரட்டப் பட்டதற்கு கண்டிப்பாக காரணம் ஏதேனும் இருந்தே தான் ஆக வேண்டும்.
  • களப்பிரர்கள் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்ட முத்தரையர் என்ற கருத்தும் வழங்கி வருகிறது. 
களப்பிரர்கள் அழிக்கப்பட்டு அவர்கள் முற்றிலும் விரட்டப்பட்ட பின் எஞ்சியவர்கள் தான் இந்த முத்தரையர் என்று தான் அனைவரும் நம்புகின்றனர். மாறாக முத்தரையர் தான் இந்த களப்பிரர்கள் என்ற கருத்து செயலற்று, களப்பிரர் தான் முத்தரையர் என்ற கருத்து ஓங்கி விடுகிறது.

மேற்கூறிய இடங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து தான் களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்றியிருப்பனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதிலும் களப்பிரர்கள் என்பவர்கள் கர்நாடகத்தின் வட பகுதியிலிருந்தே வந்தவர்கள் என்றே பலர் நம்புகின்றனர். சிலர் களப்பிரர்கள் தமிழ் அல்லாத நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை ஆண்டனர் என்றும் குறிப்பிடுவர்.

எது எப்படியோ, களபிறர்கள் முன்னூறு வருடம் தமிழகத்தை ஆண்டுள்ளனர். பிறகு அவர்கள் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டதன் காரணம் என்ன? அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனைதான் என்ன? 

களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கியம் பலமாக வளர்ச்சியடைந்ததாக கூறுகிறார்களே, உண்மையில் என்ன தான் நடந்திருக்கும்?

வரும் பதிவுகளில் நம் தேடலைத் தொடர்வோம்...


களப்பிரர்களின் இருண்டகால தேடல் தொடரும்...

சிவப்பு வண்ணத்தில் உள்ளவை அனைத்தும் தேடல் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள்
நீல நிறத்தில் உள்ளவை அனைத்தும் எனது அறிவிற்கு உட்பட்ட எனது தேடலின் கருத்துகள்.

அனைவரும் மறக்காமல் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை கூறும்படி கேட்டுக் கொள்கிறேன், வரலாற்று அறிஞர்கள் நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தால் எனக்கு சுட்டிக் காட்டும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

76 comments:

  1. என்ன தான் நடந்திருக்கும்...?

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், அண்ணா...

      வழக்கம் போல முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. Anonymous8:17:00 AM

    களப்பிரர்களுக்கும் மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட சத்தியபுத்தோ, சத்தியபுத்திரர் என்று அசோகர் கல்வெட்டு கூறும் அதியமான் வம்சத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகவும், தமிழகத்தின் வடக்கே இன்றைய தருமபுரி, கிருட்ணகிரி, மைசூர், மாண்டியா, பெங்களூர் போன்ற பகுதிகளை ஆண்டவர்கள் எனவும், சமணர்கள் எனவும் கூறப்படுகின்றது. இக் கூற்றில் கூட உண்மை இருக்கலாம். கன்னடம் என்பது 8-ம் நூற்றாண்டில் தோன்றினாலும் பேச்சு வழக்கில் இருந்த மொழியே பழங்கன்னடம் தமிழை ஒத்து இருப்பதும், அக் கால அதியமான், களப்பிரர்கள் கன்னட சாயல் கொண்ட தமிழை பேசி இருக்கக் கூடும். உங்கள் தொடரை தொடர்கின்றேன். தக்க தரவுகளுடன் எழுதினால் பயன் தரும்.

    ReplyDelete
    Replies
    1. மேற்கூறிய கல்வெட்டு பற்றி தாங்கள் கூறுவது, நான் அறியாத தகவல். மிக்க நன்றி...

      உண்மைதான், கன்னடம் என்பது பேச்சு வழக்காக இரண்டாம் நூற்றாண்டிலிருந்து காணப்பட்டது, நான்காம் நூற்றாண்டு காலத்திய சம்ஸ்கிருதத்தை ஒத்த கன்னட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதாக படித்த ஞாபகம்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன் அண்ணா...

      Delete
    2. அசோகர் காலம் என்பது கிமு 269 முதல் கிமு 232, பிறப்பு கி.மு 304. ஆனால் அதியமான் அரச மரபு கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் என அறிய முடிகிறது. அதாவது அசோகர் அதியமானை விட முற்க்கலத்தை சார்ந்தவராக இருப்பார் என நினைக்கிறேன், பிறகு எப்படி அதியமான் பற்றி ஔவையார் கல்வெட்டில் இருக்கும்.

      அந்தக் கல்வெட்டு பற்றி ஆதாரம் அல்லது எங்கு கிடைக்கும் என்ற இணைப்பை கொடுத்தால் எனக்கு மிக்க உதவியாக இருக்கும்...

      மிக்க நன்றி...

      Delete
  3. அறியாதன அறிந்தேன்
    பயனுள்ள பகிர்வுக்கும்
    தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி அய்யா...

      தொடர்கிறேன், வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. Replies
    1. வணக்கம்,

      தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி...

      Delete
  5. Visit : http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_39.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  6. ///மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட சத்தியபுத்தோ, சத்தியபுத்திரர் என்று அசோகர் கல்வெட்டு கூறும் அதியமான் வம்சத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகவும்,///

    இக்பால் செல்வன்,

    அதியமான் வம்சத்தினர் அதாவது வேளிர்குலத்தினர்(தமிழர்கள்) மூவேந்தர்களால் அழிக்கப்பட்டார்களா? குறிப்பாக சோழர்கள் வேளிர் குலத்துடன் நெருங்கிய தொடர்பை, அதாவது இரத்த உறவைக் கொண்டிருந்ததாகவும், ராஜ ராஜ சோழனின் தாய் வானவன் மாதேவி மட்டுமல்ல அவனது பட்டத்தரசி கூட வேளிர் குலப் பெண்கள் எனவும், அத்துடன் ராஜ ராஜ சோழனின் மெய்க்காவலர்கள் கூட வேளிர் குலத்தினர் எனவும் தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ராஜ சோழனினதும், ராஜேந்திரசோழனதும் படையெடுப்பில் அங்கு வந்த பல வேளிர்குல படைவீரர்கள் இலங்கையில் தங்கி விட்டதாகவும் கூறுவர். ராஜ ராஜ சோழன் தனது தாய் வேளிர்குல இளவரசி வானவன் மாதேவியின் நினைவாக வானவன் மாதேவி ஈச்சரம் என்ற சிவன் கோயிலை, தனது பரந்த சோழ மண்டலத்தில் வேறெங்கும் கட்டாமல் இலங்கையில் கட்டியமைக்குக் காரணமே. இலங்கைக்கும் வேளிர்களுக்கும் உள்ள தொடர்பும், ஏற்கனவே அங்கு பல வேளிர் குலத்தினர் வாழ்ந்ததும் தான் காரணம் என்பர். ஆனால் நீங்கள் மூவேந்தர்கள் அதியமான் வம்சத்தினரை அழித்ததாகக் கூறுகிறீர்கள். நம்பமுடியவில்லை. பாண்டியர்களுக்கும. சேரர்களுக்கும் அதியமான் வம்சம் அல்லது வேளிர்களுக்கும் எந்தவகை உறவு இருந்தது என்று எனக்குத் தெரியாது, ஆனால் சோழர்களுடன் அதியமான் வம்சம் நட்புடன் இருந்தததாகத் தான் தெரிகிறது.

    தமது முன்னோர்களை சோழ தளபதிகளின் வேர்களில் தேடும் எத்தனையோ Noble families யாழ்ப்பாணத்தில் உண்டு. அவர்களும் தமது வேளிர் குலத் தொடர்பைக் குறிப்பிடுவர். உதாரணமாக அளவெட்டி, யாழ்ப்பாணத்திலுள்ள சேனாதிராஜா குடும்பத்தினர் தமது முன்னோராக சோழர்களின் வேளிர்குல தளபதி இரத்தினபூபதி சேனாதிராஜாவைக் குறிப்பிடுவர். :)

    ReplyDelete
    Replies
    1. Anonymous5:37:00 PM

      என்ன சொல்ல வருகின்றீர்கள். நான் இங்கு பேசி இருப்பது முற்கால சோழர்களைப் பற்றியது. நீங்கள் கூறுவது பிற்கால சோழர்கள் பற்றியது. பிற்கால சோழர்கள் பல்லவர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் 9-ம் நூற்றாண்டில் எழுந்த அரச மரபு. சொல்லப் போனால் களப்பிரருக்கு முந்தைய முற்கால சோழர்களுக்கும் பிற்கால சோழர்களுக்கும் நேரடிய வம்சாவளி தொடர்புகள் ஏதுமில்லை என்பது ஆய்வாளர்கள் துணிபு. பிற்காலங்களில் எழும் பல அரச வம்சங்கள் ஏற்கனவே புகழ் பெற்றிருந்த அரச மரபுகளோடு தம்மை தொடர்பு படுத்திக் கொள்வது இயல்பது.

      அத்தோடு வேளிர் என்போரும் வேளாளர் என்போரும் ஒருவர் அல்ல, வேளிர் என்போர் சத்திரியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

      அதியமான் வம்சமும் தமிழர்கள் தான். அவர்கள் குறிப்பு அசோகர் கல்வெட்டில் உள்ளது. அதியமானின் ஆட்சியை மூவேந்தர்கள் முடிவுக்கு கொண்டு வந்த குறிப்புக்கள் சங்கப் பாடல்களில் உள்ளது. அத்தோடு முற்கால சோழர்கள் எவ்வாறு மண்ணின் மைந்தர்களான குறும்பர்களை ஒழித்து விட்டு சோழ ராச்சியத்தை நிறுவிக் கொண்ட குறிப்புக்களும் உள்ளது. இந்தக் குறும்பர்கள் கல்வராயன் மலைகளில் சென்று குடியேறியதும், இந்த குறும்பர்களுக்கும் - களப்பிரர்களுக்கும் தொடர்புகள் உண்டு என எண்ணமும் உண்டு.

      அதியமான் குறிப்புக்கும் தாங்கள் முன் வைக்கும் இலங்கை - சோழர்கள் குறிப்புக்கும் என்னய்யா சம்பந்தம்?! அதியமான் வம்சம் அழிவில் சோழர்களுக்கு தொடர்பில்லை என்கின்றீர்களோ? என்ன உங்களின் உள் நோக்கம்.

      சரி இலங்கையில் உள்ள வேளாளர்கள் என்று கூறும் வெள்ளாளருக்கும் வேளிர்களுக்கும் முடிச்சுப் போடுகின்றீர்களோ? அதற்கு எல்லாம் ஆதாரமே கிடையாது. யாழ்ப்பாண ராசதானி உருவாக்கப்பட்ட பல வெள்ளாளர்கள் பாண்டிய, சோழ நாட்டில் இருந்து யாழ்பாணம் மற்றும் பூநகரியில் கூடியேறினார்கள். அவர்களின் வம்சாவளி என்பது நீரியில் இட்ட சர்க்கரை போல ஏற்கனவே இலங்கையில் இருந்த வேடுவர், சிங்களவர்களோடு கலக்கப்பட்டும், பின்னாளில் தமிழகத்தில் இருந்து குடியேறிய முத்தரையர்கள், கள்ளர், மறவர், அகம்படையார், நாயர், பணிக்கர், செட்டியார், மடப்பள்ளிகள் முதலான சாதிகளோடும் பிணைந்து வட இலங்கையில் ஒரு தமிழினம் உருவானது.

      இன்று இலங்கையில் உள்ள எந்த தமிழ் குடும்பமும் தமது மூதாதையரை டச்சுக் காலத்துக்கு முன் தேட முடியாது. ஒரு குறிப்பும் கிடையாது. சும்மா கதை அளக்கலாம், தாம் யாழ்ப்பாண மன்னன் வழி, சோழ வம்சாவளி என அவ்வளவே. :))

      Delete
    2. டச்சு காலத்திற்கு முன் இலங்கையில் தமிழ் குடும்பங்களே இல்லை என்பதை ஏற்க்க முடியாது இக்பால் செல்வன் அண்ணா.

      நேரம் கிடைத்தால் மகாவம்சம் புத்தகத்தை படித்துப் பாருங்கள். பல தமிழ் அரசர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். நாம் இங்கு அது பற்றி பேசவில்லை. களப்பிரர்கள் பற்றி தான் இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

      தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி...

      Delete
    3. Anonymous9:27:00 AM

      நான் கூறியதை தவறாக விளங்கி உள்ளீர்கள், தமிழர்கள் இலங்கையில் பொன்பற்றி திராவிட கலாச்சார பண்பாடு தொட்டு உள்ளனர். நான் கூறியது எந்தவொரு தனி தமிழரும் தம் மூதாதையரை பரம்பரையாய் வம்சாவளியாய் 16-ம் நூற்றாண்டுக்கு முன் தேடுவது சாத்தியம் இல்லை. இதனை ஆங்கிலத்தில் Geneology, Ancestry என்பார்கள். இலங்கையில் தமிழ் குடிகள் சிறிய அளவில் அதாவது ஆக கிமு முதல் நூற்றாண்டு தொட்டே இலங்கையின் பல பாகங்களில் இருந்துள்ளனர். பெருமளவிலான தமிழ் குடியேற்றம் 10 - 13 நூற்றாண்டில் வடக்கு கிழக்கு நோக்கி நடைபெற்றது. அவர்கள் ஏற்கனவே அங்கிருந்த இலங்கையர், வேடுவரோடு கலப்புற்று ஈழத் தமிழராய் உருவெடுத்தனர். அதன் பின்னரும் கூட தென்னிந்தியாவின் பல பாகங்களில் இருந்து பல மக்கள் இலங்கையில் குடியேறிய முறையே சிங்கள, தமிழ் மக்களோடு கலப்புற்றுக் கொண்டனர். எப்பா ஒற்றைவரியில் நான் எழுதியது புரியவில்லை எனில் விளக்கம் கோராமலே சிலர் சேற்றை வாரி அடிப்பது அவர்களது அறிவீனத்தையே காட்டும். :)

      Delete
    4. வணக்கம்,

      எனக்கு திராவிட கலாச்சாரம் போன்ற தாங்கள் கூறும் கருத்துகள் அனைத்தும் புதிது. தங்கள் தகவலுக்கு நன்றி...

      Delete
  7. நல்ல பதிவு... கருத்துக்கள் சொல்லி இருப்பவர்கள் வாயிலாகவும் பல உண்மைகளை அறிய முடிகிறது... தொடரட்டும் உங்கள் ஆய்வு...நாங்களும் தொடர்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பிரியா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகைத் தொடரட்டும்...

      Delete
  8. வரலாறு சுவையாகச் ஆரம்பித்துள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...

      Delete
  9. களப்பிரர்கள் பற்றிய தகவல்களை படிக்க ஆர்வமாக இருக்கிறது.... இன்னும் தொடரவும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மணிமாறன் அண்ணா,

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. //தொண்டை நாடு என்பது பல்லவர்கள் ஆண்ட பகுதி. அதாவது தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்று சென்னையை உள்ளடக்கிய பகுதி. களப்பிரர்கள் காலத்தில் பல்லவர்களும் செழிப்பாகவே இருந்தனர்,// காஞ்சிபுரம் களப்பிரர்களின் தலைநகரம் என்று கூறுகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பற்றி பால் யங்கர் என்பவர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தில் சிதம்பரம் ஒரு காலத்தில் களப்பிரர்களின் தலை நகராக இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அறிகிறேன் நான் அந்த புத்தகத்தை வாசித்தது இல்லை. சிதம்பரத்தில் பெளத்தம் செலுமையுற்றதை அறிய முடிகிறது. இங்கு நான் குறிப்பிட வந்தது களப்பிரர்கள் சமணத்தை பின்பற்றியவர்கள் என்ற கோணம் சரிதான் என நினைக்கிறேன். நடராஜர் என்ற வார்த்தையே புத்தரின் பெயர்களில் ஒன்று என்ற கருத்தும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. Anonymous5:48:00 PM

      சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலங்களிலும் தமிழகத்தில் அதாவது இன்றைய தமிழ்நாடு, கேரள, தெற்கு கருநாடகம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் சமணமும், பவுத்தமுமே மேலோங்கி இருந்தது. இன்றைய தொண்டை நாடு, நடு நாடு, எருமையூர் எனப்படும் மகிசாசூர் அல்லது மைசூர் பகுதிகள், கொங்கு மண்டலம், மதுரை, தென்பாண்டி மண்டலம் வரை சமணம் ஆளுமை செலுத்தியது. இன்றைய வடக்கு, மத்திய கேரளம், தஞ்சை - திருவாரூர் அடங்கிய சோழ மண்டலத்தில் பவுத்தம் ஆதிக்கம் செலுத்தியது. கேரளம், மற்றும் தஞ்சை மண்டலத்தில் இன்றும் காணப்படும் பவுத்த ஊர்ப் பெயர்கள், கிராமங்களில் அய்யனார், கருப்பசாமி என்ற பெயரில் காணப்படும் பல பவுத்த மதச் சிலைகளும் சான்று. அத்தோடு அக் காலக் கட்டத்தில் பவுத்த இலக்கியங்கள் தமிழில், பாளியில் இங்கு படைக்கப்பட்டன. மதுரை மற்றும் தொண்டை மணடலங்கள் அதிகளவு சமணர்களாக இருந்தார்கள். பின்னாளில் சமணர்களை சைவர்கள் கழுவில் ஏற்றிக் கொண்டதும், மதமாற்றம் செய்த கதைகளும், இன்றளவும் இப் பகுதிகளில் காணப்படும் சமண குகைகள், படுகைகள், கோயில்கள் மற்றும் தொண்டை நாட்டில் காணப்படும் தமிழ் சமண மக்கள் இதனை உறுதி செய்கின்றனர்.

      இன்று வெள்ளாளர் எனப்படும் முதலியார், பிள்ளைகள், கவுண்டர்கள் உட்பட பல விவசாய சாதிகள் சமணத்தை பின்பற்றி பின்னர் சைவத்துக்கு மாறியவர்கள் என்ற குறிப்புக்களும் உள்ளன. சைவ உணவு முறை உட்பட பல வாழ்வியல் கூறுகள் சமணத்தால் எழுந்தவை.

      இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூலை முதலில் எழுத தொடங்கிய மகாநம தேரர் கூட சோழ நாட்டு பவுத்த பிக்கு என்ற குறிப்புக்கள் உள்ளன. சமணர்கள் பலரும் சைவத்துக்கு மாறிவிட, பல பவுத்தர்கள் அகதிகளாக இலங்கைக்கும், சிலர் வைணவத்துக்கு மாறிவிட்டனர் எனவும் கூறப்படுகின்றது. பல பவுத்த ஆலயங்களை பிற்காலச் சோழர்கள் இடுத்து சைவத் தலங்களாக கட்டிக் கொண்டனர் எனவும் கூறப்படுகின்றது.

      பவுத்ததில் இருந்து மாற மறுத்த பல மக்களை இலங்கையோடு தொடர்பு படுத்தி அந்நியர்களாக சித்தரித்து தாழ்ந்த சாதிகளாக மாற்றி அவர்களை ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என கேலிக்குள்ளாக்கி ஈழவர், தீவகர் என்ற சாதியை கேரளத்தில் பின்னாளைய இந்துக்கள் உருவாக்கினார்கள்.

      இப்படி பல வரலாறுகள் இருக்கின்றன, போதிய ஆய்வுகளும், நூல்களும் வெளியிடப்பட வேண்டும். குறிப்பாக களப்பிரர் காலத்தை பின்னாளைய இந்துக்கள் இருண்ட காலம் எனக் கூறுவதன் மர்மத்தையும், களப்பிரர் குறித்த முழு தகவர்களையும் ஆய்வாளர்கள் வெளிக் கொணர வேண்டும்.

      Delete
    2. வணக்கம் கலாகுமாரன்,

      தாங்கள் கூறுவது உண்மைதான், அக்காலங்களில் தமிழகத்தில் சமணமும், பவுத்தவுமுமே மேலோங்கி இருந்தது. கல்கி எழுதிய நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதத்தில் கூட முக்கிய கதாபாத்திரங்களில் சமணர்கள் வந்து செல்வார்கள்.

      இக்காலத்திய கோயில்களான ஸ்ரீரங்கம், சிதம்பரம் நடராஜர் கோயில், திருப்பதி கோயில் என பல சமண கோயில்கள்தான், பிற்காலங்களில் அவை சைவக் கோயில்களாகவும், வைணவக் கோயில்களாகவும் மாற்றப்பட்டன.

      மேலும் தற்பொழுது ஏரிக்கரைகளில் அமர்ந்திருக்கும் விநாயகர் இடத்தில் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன் புத்தர்தான் அமர்ந்திருந்தார் என்ற குறிப்புகள் பல இடங்களில் காணப்படுவதுண்டு...

      Delete
    3. வணக்கம் இக்பால் செல்வன்,

      தாங்கள் கூறுவது போல இன்னும் பல நூல்கள் இது பற்றி வெளிவந்தால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும். தங்கள் மேலான தகவல்களுக்கு மிக்க நன்றி.

      Delete
    4. அட்ராசக்க!10:12:00 PM

      // கல்கி எழுதிய நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதத்தில் கூட முக்கிய கதாபாத்திரங்களில் சமணர்கள் வந்து செல்வார்கள்.
      //

      அய்யோ ராமா! என்ன ஏன் இப்படி சோதிக்கிற?

      புனைகதைகளை ஏன் வரலாற்றுக் கட்டுரைக்குள் இழுக்கிறீர்கள் பாஸ்? உங்களின் முயற்சியை அவை கேலிக்கூத்தாக்குகின்றன.

      Delete
    5. வணக்கம்,

      நான் புனைக் கதைகளை வரலாற்று கட்டுரையோடு இழுக்கவில்லை. அவை புனைக்கதை, அதன் கதையோட்டம் அனைத்தும் கற்பனைதான் என்றாலும் அதில் வரும் கதாபாத்திரங்கள் வாழ்க்கை முறை அனைத்தும் உண்மையே.

      அக்காலங்களில் சமணம் மற்றும் பவுத்தம் தான் தமிழகத்தில் மேலோங்கி இருந்தது. இதனை தங்களால் மறுக்க இயலுமா????

      Delete
    6. Anonymous10:05:00 AM

      முட்டாள்களின் கூடாரம். ஐயனார் கருப்பசாமி போன்றவை பெளத்த மத சான்றா? நடராஜர் பெளத்த சமயமா? சரியான பேத்தல்.. உங்க கற்பனைக்கு அளவில்லையா. கொடுமை.

      Delete
  11. பாரியின் நண்பர் கபிலன் பாரியின் மரணத்திற்கு பின்பு எருமையூர் -க்கு அவரின் மகள்களான அங்கவை சங்கவையை அழைத்து செல்கிறார் எருமையூர் என்பது பின்னாளில் மைசூர். மைசூர் தமிழ்ர்களால் ஆளப்பட்ட பகுதி. மைசூர் களப்பிரர்கள் பகுதியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என சொல்லப்படுவதற்கு ஆதாரம் இருக்கிறதா தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Anonymous5:50:00 PM

      கபிலர் பாரியின் மக்களை கூட்டிச் சென்றது திருக்கோவிலூர் அது இன்றைய கேரளத்தின் கொல்லத்துக்கு அருகே உள்ளது. எருமையூர் பற்றி அவ்வையார் பாடியுள்ளார் என நினைக்கின்றேன். சரியாக ஞாபகம் இல்லை?! எருமையூர் என்பது பின்னாளில் மகிசாசூர் ஆகி மைசூராகியது. மகிசம் என்றால் வடமொழியில் எருமை. :)

      Delete
  12. தொடருங்கள் அறிந்துகொள்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாதேவி,

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. //இன்று இலங்கையில் உள்ள எந்த தமிழ் குடும்பமும் தமது மூதாதையரை டச்சுக் காலத்துக்கு முன் தேட முடியாது. ஒரு குறிப்பும் கிடையாது. சும்மா கதை அளக்கலாம், தாம் யாழ்ப்பாண மன்னன் வழி, சோழ வம்சாவளி என அவ்வளவே.//

    இகபால் செல்வன்,

    இது ஒன்றும் ஆயிரம்வருடம் அடுத்தவர்களின் உழைப்பில் சோறு தின்றதைப் பற்றி பீற்றிக் கொள்ளும் கதை போன்றதல்ல. :)) அந்த குடும்பங்களிடம் அதற்கான ஆதாரங்கள் அவர்களின் கோயில் கல்வெட்டுகளிலும் ஏட்டுச் சுவடிகளிலும், பரம்பரைக் கதைகளிலும் உண்டு.

    உங்களுடைய சிங்கள இனவாதிகளின் நட்பு அப்படியே உங்களின் பதிலில் தெரிகிறது. அவர்கள் கூறுவதை நீங்கள் அப்படியே ஒப்புவிக்கிறீர்கள். இலங்கையில் தமிழர்கள் தாயகம் கேட்பதை மறுக்கும் இனவாதச் சிங்களவர்கள் இலங்கையில் தமிழர்களின் வரலாற்றை திரிக்கிறார்கள். உங்களுக்கு சிங்கள நண்பர்கள் இருப்பதாக குரிப்பிபிட்டீர்கள் அல்லவா. அவர்கள் யார், நீங்கள் யார் என்பது இப்பொழுது தெரிகிறது. அவர்களைப் போலவே உங்களுக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்களில் தான் காழ்ப்புணர்வு. ஏனென்றால் சிங்கள இனவாதிகளுக்கு யாழ்ப்பாணத்தார் அடிபணிந்ததில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தான், உங்களைப்போல் ஆயிரம் சிங்கள அடிவருடிகளைப் பார்த்தவ்ர்கள். உங்களின் உளறல்களின் வேர் எங்கிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். :)

    இப்படித்தான் "யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை அல்ல" என்று ஒரு பதிவைப் போட்டு அதற்கு நான் ஆதாரத்துடன் பதில் எழுதியதும் அதற்குப் பின்னர் அப்படி உளறுவதை நிறுத்திக் கொண்டீர்கள், ஆனால் மீண்டும் ஈழத்தமிழர்களின் மீதுள்ள உங்களின் காழ்ப்புணர்வைக் காட்டத் தொடங்கி விட்டீர்கள். சும்மா சில இனவாதச் சிங்களவர்களின் இணையத்தளங்களை வாசித்து விட்டு ஈழத்தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்ததி சிங்களவர்களுக்கு துணை போக வேண்டாம்.

    இப்படி பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் ஈழத்தமிழர்களின் வரலாற்றைரச் சிதைத்து, வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் சிங்களவர்களுடையதாகக சிங்கள அரசும், புத்த பிக்குகளும் இராப்பகலாக உழைக்கிறார்கள். வடக்கு கிழக்கில் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சிகள் நடுநிலையானவையல்ல. இன்று இலங்கை அகழ்வாராய்ச்சித் திணைக்களத்தின் தலைவர் கூட எல்லாவெள்ள என்ற இனவாதப் பிக்கு தான்.அத்துடன் சிங்களவர்களின் எந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் Peer Review செய்யப்பட்டவை அல்ல.

    இப்படி ஈழத்தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தவென்றே பல இந்திய எழுத்தாளர்களையும் , வலைப்பதிவாளர்களையும் இலங்கை அரசு விலை பேசியுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு என்னைப்போன்ற யாழ்ப்பாணத் தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வால் சிங்கள இனவாதிகளின் கருத்தை இணையத் தளங்களில் பரப்புகிறீர்கள் போல் தெரிகிறது. அப்படியானால் டச்சுக்காரர்களின் வருகைக்கு முன்னால் யாழ்ப்பாணத்திலோ, யாழ்ப்பாண அரசிலோ தமிழர்கள் கிடையாதா, இது எவ்வளவு முட்டாள் தனமான உளறல் என்பது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று தான் தெரிகிறது, உங்களைப் போன்றவர்களுடம் பேசுவது முட்டாள்தனம்.

    ஈழத்தமிழர்கள் தமிழீழ விடுதலைபோரில் தோற்றதற்கு முதல் காரணம், போர்க்களத்தில் கண்ட வெற்றியை, எதிரிகளின் பிரச்சாரப் போரில் காட்ட அவர்களால முடியவில்லை, ஏனென்றால் கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான சிங்கள அடிவருடிகள் தமிழர்கள் மத்தியில் இருந்தார்கள். :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வியாசன்,

      இங்கு விவாதம் களப்பிரர்கள் பற்றியது தான்.


      தகவலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  14. //அத்தோடு வேளிர் என்போரும் வேளாளர் என்போரும் ஒருவர் அல்ல, வேளிர் என்போர் சத்திரியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
    //
    தமிழர்களின் மத்தியிலிருந்த இனக்குழுக்கள் மனுதர்மத்தின் அடிப்படையில் சத்திரிய, வசிய, சூத்திர லேபல்கள் எல்லாம் ஓட்டிக் கொண்டது பிற்காலத்தில். உதாரணமாக வேளிர்களின் வழித்தோன்றல்கள் இக்காலக் கொங்கு வேளாளர்கள். சத்திரியர்கள் என்பதால் போர் இல்லாத காலத்தில் சும்மா காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு சாப்பிடவில்லை, அவர்களும் வேளாண்மை தான் செய்தார்கள், நிலவுடமைக்காரர்களாக இருந்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி அண்ணா...

      Delete
  15. //அதியமான் குறிப்புக்கும் தாங்கள் முன் வைக்கும் இலங்கை - சோழர்கள் குறிப்புக்கும் என்னய்யா சம்பந்தம்?! //

    அதியமான் வம்சமாகிய வேளிர்கள் சோழர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார்கள் பகைவர்கள் அல்ல. அந்த வேளிர் குல சோழத் தளபதிகளை தமது முன்னோர்களாக எண்ணும் வெள்ளாள குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு, அதனால் சோழர்கள், அதாவது மூவேந்தர்கள் வேளிர்களின் பகைவர்கள், அவர்களை அழித்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது என்பதைத் தான் நான் குறிப்பிட்டேன்.



    //அதியமான் வம்சம் அழிவில் சோழர்களுக்கு தொடர்பில்லை என்கின்றீர்களோ? என்ன உங்களின் உள் நோக்கம்.//
    நான் கேள்விப்பட்டதில்லை, அந்த வரலாறு எனக்குத் தெரியாது, ஆச்சாரியமாக இருக்கிறது, அவ்வளவு தான். தெரிந்து கொள்ள விரும்புகிறேன், முடிந்தால் ஏதாவது Link தந்தால் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இணைப்பை வழங்கிவிட்டு விவாதத்தை தொடடலாம் என நினைக்கிறேன்...

      Delete
  16. அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்கள்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுரேஷ் அண்ணா,

      இனிய வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி. வருகைத் தொடரட்டும்...

      Delete
  17. பதிவும் பதிவினூடே நடைபெறும் விவாதங்களும் அருமையாய் இருக்கிறது.. இத்தொடர் முழுவதும் இதுவும் தொடரும் பலரும் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனு அண்ணா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... ஆமாம், பதிவுகளினூடே நடைபெறும் விவாதங்கள் மூலம் பல செய்திகளை அறிய இயலுகிறது..

      மகிழ்ச்சி...

      Delete
  18. வணக்கம்,

    தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி அய்யா...

    ReplyDelete
  19. களப்பிரர் காலத்தை பின்னாளைய இந்துக்கள் இருண்ட காலம் எனக் கூறுவதன் மர்மத்தையும், களப்பிரர் குறித்த முழு தகவர்களையும் ஆய்வாளர்கள் வெளிக் கொணர வேண்டும்.//இதுதான் என் க்ருத்தும் சகோ! தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. அந்த முயற்ச்சியில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். வெற்றியடைந்து விடுவேன் என நம்புகிறேன், தங்கள் ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து இருக்கட்டும்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  20. வேளிர்குல படைவீரர்கள்//
    இவர்கள் படைத்தரத்தில் மூத்தவர்கள் என்றும் சோழரின் ஆட்சியில் முக்கிய படை என்று கல்கியின் பொன்னியின் செல்வன் சொல்லுது எது உண்மை என்று நான் அறியேன் @ விசயன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நானும் பொன்னியின் செல்வனில் வேளிர்களைப் பற்றி படித்துள்ளேன், இந்த வாதம் களப்பிரர்களைப் பற்றியது தான், ஆனால் விவாதம் திசைமாறி சென்றுகொண்டிருக்கிறது...

      Delete
  21. இப்படி ஈழத்தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தவென்றே பல இந்திய எழுத்தாளர்களையும் , வலைப்பதிவாளர்களையும் இலங்கை அரசு விலை பேசியுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு என்னைப்போன்ற யாழ்ப்பாணத் தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வால் சிங்கள இனவாதிகளின் கருத்தை இணையத் தளங்களில் பரப்புகிறீர்கள் போல் தெரிகிறது. அப்படியானால் டச்சுக்காரர்களின் வருகைக்கு முன்னால் யாழ்ப்பாணத்திலோ, யாழ்ப்பாண அரசிலோ தமிழர்கள் கிடையாதா, இது எவ்வளவு முட்டாள் தனமான உளறல் என்பது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று தான் தெரிகிறது, உங்களைப் போன்றவர்களுடம் பேசுவது முட்டாள்தனம்.

    ஈழத்தமிழர்கள் தமிழீழ விடுதலைபோரில் தோற்றதற்கு முதல் காரணம், போர்க்களத்தில் கண்ட வெற்றியை, எதிரிகளின் பிரச்சாரப் போரில் காட்ட அவர்களால முடியவில்லை, ஏனென்றால் கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான சிங்கள அடிவருடிகள் தமிழர்கள் மத்தியில் இருந்தார்கள். :(

    Reply// ஐயாமாரே இது பதிவின் நோக்கத்தை திசைமாற்றுகின்றது ஆசிரியர் கேள்வி களப்பிரர் ஆட்சி நிலை பற்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா, இவர்கள் இருவரும் திசை மாறி சென்றுகொண்டிருக்கிறார்கள். களப்பிரர்கள் பற்றி பேசாமல் மற்றது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்...

      Delete
  22. அத்தோடு வேளிர் என்போரும் வேளாளர் என்போரும் ஒருவர் அல்ல, வேளிர் என்போர் சத்திரியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். //இதுதான் நிஜம் என்று கல்கி சொல்வதையும் மறுப்பதுக்கு இல்லை விசயன் மற்றும் இக்பால் செல்வன் சார்!

    ReplyDelete
    Replies
    1. அது பற்றிய தேடல் தேவை என நினைக்கிறேன் அண்ணா. எனக்கும் வேளிர் குலத்தவர், வேளாளர் பற்றி அதிகம் தெரியவில்லை...

      Delete
    2. அட்ராசக்க!10:33:00 PM

      //இதுதான் நிஜம் என்று கல்கி சொல்வதையும் மறுப்பதுக்கு இல்லை விசயன் மற்றும் இக்பால் செல்வன் சார்!//

      கல்கி வரலாற்றாசிரியரா தனிமரம் அவர்களே? சுவற்றில்தான் முட்டிக்கொள்ள வேண்டும். எதுக்கும் மதன் சாரிடம் கேட்டுப் பாருங்களேன்.

      Delete
    3. வணக்கம் அட்ராசக்க,

      கல்கி வரலாற்று ஆசிரியர் என்பதில் சந்தேகம் இருக்கலாம் ஆனால் அவர் தமிழக வரலாற்றை அறிந்தவர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வரலாற்றை திறம்பட தெரியாமல் எப்படி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற புதினங்களை படைக்க இயலாம்.

      விருப்பப்பட்டால் சுவற்றில் முட்டிக்கொல்லுங்களேன், யார் வேண்டாம் என்றது...

      Delete
    4. அட்ராசக்க!7:03:00 PM

      நல்லது. அப்படியே கல்கியின் படைப்புகளையும் உங்களின் கட்டுரைக்கு reference ஆக்கிக் கொள்ளுங்கள். சூப்பரா இருக்கும்.

      Delete
    5. நான் கல்கியின் படைப்புகளை இங்கு உசாத்துணை (Reference)யாக காட்டவில்லை. அதில் வரும் ஒரு நிகழ்வினைத் தான் குறிப்பிடுகிறேன். மற்றபடி இங்கு நான் களப்பிரர்கள் பற்றி தான் தேட முற்படுகிறேன். கல்கியைப் பற்றியது அல்ல...

      தைகள் இனிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  23. Anonymous7:36:00 PM

    வணக்கம்
    தம்பி

    விடை புரியாமல் இருந்த பல வினாக்குளுக்கு விடை கிடைத்துள்ளது பதிவு பற்றிய அலசல் அருமை வாழ்த்துக்கள் தம்பி

    -நன்றி-
    -அன்புடன-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  24. Anonymous5:14:00 PM

    அன்புடையீர் நான் பதிவினை திசைத் திருப்பவில்லை, முதலில் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி என்ற அதியமான் வம்சத்து மன்னனை மூவேந்தரும் இணைந்து போரிட்டு வென்ற செய்தியை சங்கப்பாடல் தருகின்றது. [http://www.tamilvu.org/slet/l1281/l1281pd1.jsp?bookid=28&page=336].

    அதியமான் நெடுமிடல் என்ற அதியமான் வம்சத்து மன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.

    அதியமான் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் காணப்படுகின்றது. மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான்.

    அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

    ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.

    இதுவே அதியமானின் வரலாறு. களப்பிரர்கள் வந்த நாடாக கருதப்படும், இன்றைய மைசூர், தருமபுரி பகுதிகளில் தான். அதியமான் வம்சத்தவரும் ஆண்டுள்ளமையால் இருவரும் ஒருவரா, அல்லது தொடர்புடையவர்களா என்ற நோக்கில் ஆராயப்படல் வேண்டும். அதியமான் சமண முனிவர்களுக்கு கல்வெட்டு எடுத்திருப்பதையும் களப்பிரர்கள் சமண - பவுத்த ஆதரவாளர்களாக இருந்துள்ளமையும். அதியமானை போற்றிப் பாடிய அவ்வையாரும், சங்க காலத்தில் சமண பெண் துறவிகளுக்கு அவ்வை என்ற பெயர் இருந்துள்ளமையும் ஒப்பு நோக்கத் தக்கது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இக்பால் செல்வன் அண்ணா,

      தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. மேற்கூறிய தகவல்கள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கூர்மையாக ஆராயப்பட வேண்டும். அப்பொழுது தான் இது பற்றிய தகவல்கள் தெரியவரும்.

      ஒரு சந்தேகம், மேற்கூறிய பின்னூட்டத்தில் அதியமான் காலம் கி.மு மூன்று முதல் கி.பி இரண்டு வரை இருக்கலாம் என்கிறீர்கள். ஆனால் களப்பிரர்கள் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். களப்பிரர்களும் அதியமாங்களும் ஒருவராக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது...

      Delete
    2. Anonymous9:14:00 AM

      அதியமான் ஆட்சியின் பின்னே களப்பிரர்கள் ஆட்சி ஏற்படுகின்றது. ஆனால் இருவர்களும் வட தமிழக - தென் கன்னட பகுதியில் எழுந்து வந்தததோடு வேளிர் குலத்துக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்கமான வெள்ளாளரை முன் நிறுத்தியும் உள்ளார்கள். சமண மதத்தவர்களாய் காணப்படுகின்றார்கள். ஆக இருவரும் ஒருவரோ அல்லது நெருங்கிய தொடர்புடையோராய் இருந்திருக்க வேண்டும். களப்பிரர்கள் மூவேந்தரை வீழ்த்தி சமணத்தையும், தமிழையும், உழைப்பாள சாதிக்களின் வளர்ச்சிக்கும் வித்திட்டை இன்றைய ஆய்வாளர்கள் பலர் ஏற்கவும் செய்கின்றனர். :) ஆழமான் ஆய்வுகளும் மிக அவசியம்.

      Delete
    3. ஆமாம்,

      ஆழமான ஆய்வுகள் மிக அவசியம் தான் அண்ணா... தகவலுக்கு நன்றி...

      Delete
  25. Anonymous5:28:00 PM

    அடுத்து வேளாளர்கள் குறித்த ஆழமான ஆய்வை தென்னிந்திய வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் செய்துவிட்டனர், செய்து வருகின்றனர். வேளாளர் என்போர் உழவுத் தொழில் செய்து வந்த மருத நிலக் குடிகளில் ஒருவர்கள் ஆவார்கள். வேளிர் என்போரோ அரசக் குலத்தைச் சார்ந்தவர்கள். இருவரையும் ஒருவராக கருதும் மயக்கத்தை தெளிவுப் படுத்தும் கட்டுரை இது வாசித்தறிக.... !

    http://www.sishri.org/velaalar1.html
    http://www.sishri.org/velaalar2.html
    http://www.sishri.org/velaalar3.html
    http://www.sishri.org/velaalar4.html
    http://www.sishri.org/velaalar5.html
    http://www.sishri.org/velaalar6.html
    http://www.sishri.org/velaalar7.html


    களப்பிரர்கள் வேளிர்களை வீழ்த்திய வேளாள- வணிக சாதிகளின் கூட்டு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்படியான சூழலில் வேளிரும் - வேளாளரும் எவ்வாறு ஒன்றாக முடியும்.

    "அடிமை நிலையிலிருந்த உழுகுடிகள், இப்போது அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுவிட்டனர். அரசு என்பது மூவேந்தர், வேளிர் போன்ற (சந்திர குல, சூரிய குல, யது குலச்) சத்திரியர்களால் இயக்கப்படுவது என்ற நிலை மாறிவிட்டது. தாய்வழிச் சமூகக் கூறுகளை மிகுதியாகக் கொண்ட அசுர குலச் சத்திரியன் மகாபலியின் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணி, சோழ நாட்டு இராசமாதேவியாக இருந்த நிலை மணிமேகலையால் (19:54-55) தெரியவருகிறது. சோழ அரசனுக்கு நாக நாட்டு இளவரசி பீலிவளையிடம் களவு மணத்தில் பிறந்த குழந்தை சோழ குலத்தவனாக அங்கீகரிக்கப்படாமல் ‘தொண்டைமான்’ என்ற பட்டத்துடனும், வேளாளர் என்ற வர்ண அந்தஸ்துடனும் அரசமைத்தமை, மணிமேகலை (24:57-59) வரிகளுடன் பெரும்பாணாற்றுப்படை (30-31) வரிகளுக்கு உரையாசிரியர்கள் அளிக்கும் விளக்கத்தையும் சேர்த்துப் படித்தால் தெரியவருகிறது. இதேபோன்று, சோழ அரசனுக்கு வேளாட்டியர் வம்சத்துப் பெண்மணி வசம் பிறந்தமையால் சோழ அரச குல அந்தஸ்து கிட்டாத களந்தையர் கோன் கூற்றுவ நாயனார் வரலாறும் இக்கால கட்டச் சமூக இயக்கப் போக்குகளை உணர்த்தும். இவை பற்றிப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.

    வணிக வர்க்கத்தவரின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றிய இத்தகையோரால் இயக்கப்படுகிற அரசுக்கு வாரம் (இறை) செலுத்துகிற அளவுக்குச் சுதந்திரக் குடிகளாக வேளாளர்கள் உயர்ந்தனர். அவர்களில் பலர் முறையான திருமுண உறவு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைப் பின்பற்றும் உரிமை எய்திவிட்டனர். தொல்காப்பியம் கற்பியல் 3ஆம் நூற்பா, மேல் மூன்று வருணத்தாருக்கு மட்டுமே உரியதாயிருந்த திருமண நடைமுறை கீழ் வருணத்தாராகிய வேளாளர்க்கும் தற்காலத்தில் உரியதாகிவிட்டது என்று பொருள்படும்வண்ணம், “மேலோர் மூவர்க்கும் புணர்த்த காரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” எனக் குறிப்பிடுவதும் இச்சமூக மாற்றத்தை உள்ளடக்கியே ஆகும். "

    வரலாற்றை முழுவதும் வாசித்தறியமாலேயே விவாதத்துக்கு வருவோம். சிலர் அரைக்குறையாய் கண்டதையும் கேட்டு விட்டு கதையளப்பதை நிறுத்தினால் அனைவருக்கும் மிக்க நலம். :))

    வேளாளர்கள் ஆரம்ப காலங்களில் சமணத்தை பின்பற்றி 7-ம் நூற்றாண்டின் பின் சைவத்துக்கு மாறியவர்கள். களப்பிரர் காலத்தில் அடிமை நிலையில் இருந்து உயர் நிலைக்கு எய்திய வேளாளரே சமணத்தை பின்பற்றியவர்கள் ஆவார்கள். அதனால் தான் சமண நூல்களான திருக்குறள் உட்பட பலவும் வேளாண் தொழிலை உயர்வாகச் சித்தரிக்கின்றன.

    இன்றளவும் கூட பல வேளாளர்கள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி, தஞ்சாவூர் பகுதியில் தொடர்ந்து சமண மதத்தை பின்பற்றி வருகின்றனர்.

    http://en.wikipedia.org/wiki/Tamil_Jain

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      மேலான தகவல்களுக்கும், இணைப்புகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
    2. நீர் காட்டிய ஆதாரமானது நாடார் என்ற பனையேறி நளவரான சானார்கள் வெள்ளாளர்களுக்கு எதிராக எழுதிய கட்டுகதை.

      வேளிர் என்போர் வேட்டுவ குல மக்களே ஓரி,அதியமான்,பாரி இவன்லாம் பார்க்க மன்னன் போலவா தோனுது. அவர்கள் வேட்டுவர்கள்.

      களப்பிரர் = காளா +ஆபீரர் =கரிய நிறம் உள்ள இடையர்.

      Delete
  26. Anonymous5:34:00 PM

    யாழ்ப்பாணத்து வேளாளர்கள் தம்மை வேளிர் எனவும், சோழர் மரபு எனவும் கூறுவது தம்மை சத்திரியர்களாக சித்தரிக்க முயலும் ஒரு நடவடிக்கையே. யாழ்ப்பாண வேளாளர்கள் பலரும் வெவ்வேறு சாதியமைப்பைக் கொண்டிருந்தனர்.

    ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன.

    யாழ்ப்பாணத்தில் தமிழர் கி.பி. 3ம் நூற்றாண்டு காலத்தில் இருந்திருக்கின்றனர் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்த போதும் 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் சோழ படையெடுப்பு பின்னர் பாண்டியர் படையெடுப்பு காலப்பகுதிகளிலேயே வட கிழக்கில் இந்தியாவிலிருந்து தமிழரின் வருகையும் குடியிருப்பும் அதிகமானதென அரசரட்னம் போன்ற ஆய்வாளர்கள் கருத்து.

    யாழ்ப்பாண வெள்ளாளர் சாதி உருவாக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க:

    http://kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=826:-1-02-&catid=57:2010-01-31-18-23-42&Itemid=78

    http://www.nichamam.com/2008/06/blog-post_24.html

    சிவத்தம்பி, கா., யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை, 2000, கொழும்பு

    நன்றிகள் !

    யாரும் இங்கே எவனோ சிங்களவ பிக்குகள் எழுதும் பக்கசார்ப்பான வரலாற்றையோ, அல்லது தமிழ் புலிகள் போன்றோர் எழுதும் மூடத்தனமான வரலாற்றையோ நம்பி அதை எழுத வேண்டிய அளவுக்கு மூளைக் கெட்டுப் போய்விடவில்லை. முதலில் மற்றவரை எடை போட முன், அவரைப் பற்றி அறிய முற்படுங்கள் சகா.

    :)))

    ReplyDelete
    Replies
    1. வேளாளர், வேளிர் பற்றி பல தகவல்கள் வழங்கியுள்ளீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி...

      Delete
  27. Anonymous5:36:00 PM

    வெள்ளாளர்கள் பெரும்பான்மையோனர் சமணர்களாக இருந்ததையும், யாழ்ப்பாண ஆரம்ப கால நூல்கள் அங்கு இந்தியாவில் இருந்து குடியேற்றம் நடைபெற்றதையும், 13-ம் நூற்றாண்டில் அங்கு தமிழரசு எழுப்பப் பட்டதையும், இலங்கையின் வடக்கிலோ, வேறு எங்கும் சமணம் வீற்றிருக்கவில்லை ( அனுராதபுரம் நீங்கலாக) என்பதையும் ஒப்பிட்டு நோக்கினால் பல போலி வரலாற்று புரட்டுக்கள் உடைபடும். அவ்வ்வ்வ் !

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கும், இனிய வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  28. தெரியாத தகவலை தெரிவித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  29. Anonymous8:41:00 PM

    களப்பிரர்கள் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்ட முத்தரையர் என்ற கருத்தும் வழங்கி வருகிறது.
    களப்பிரர்கள் அழிக்கப்பட்டு அவர்கள் முற்றிலும் விரட்டப்பட்ட பின் எஞ்சியவர்கள் தான் இந்த முத்தரையர் என்று தான் அனைவரும் நம்புகின்றனர். மாறாக முத்தரையர் தான் இந்த களப்பிரர்கள் என்ற கருத்து செயலற்று, களப்பிரர் தான் முத்தரையர் என்ற கருத்து ஓங்கி விடுகிறது.// இதற்கும் போதுமான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரியவில்லயே நண்பா ..


    வலை தளங்களில் கலப்பிரர் குறித்து தேடும் போது,அதிகமான செய்திகள் கிடைக்க பெறுவது இல்லை ..
    இவற்றை விக்கி பீடியா வில் பதிவேற்றம் செய்யுங்கள் நண்பா ...மற்றவர்களும் பயன்பெறுவார்கள் .... G Vinothkumar.vinoknk@ymail.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      ஆமாம், மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களும் அப்படித்தான் குறிப்பிடுகிறார். களப்பிரர்கள் என்பவர்கள், முத்தரையர்கள் தான் என்று. விக்கி பபீடியாவில் வரும் காலங்களில் களப்பிரர்கள் பற்றி பதிவேற்றுகிறேன் நண்பா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  30. ஆகா வெற்றி நல்ல பணி வெற்றிபெறுக...

    இருண்ட காலத்தின் மீது ஒளி பாய்ச்ச நிறைய படிக்க வேண்டும்... பரந்துபட்ட பார்வை வேண்டும் குறிப்பாக எல்ல்லவற்றிற்கும் மேல் நின்று சமநிலையில் பார்க்க வேண்டும் நாம் விரும்புவதை அல்ல உண்மையை பேச வேண்டும்...

    நமது சமூகத்தில் பலப் பல மாற்றங்கள் ....

    நிறைய படியுங்க.

    ஆசிவகம் தமிழர் அணுவியம் என்ற நூல் ஒன்று இருக்கிறது...
    படியுங்க
    திருச்சியில் கிடைக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது ஆசிவகம் தமிழர் அணுவியம் என்ற புத்தகத்தைப் படிக்கிறேன்.

      உண்மைதான், நிறைய படிக்கவேண்டும். அதிலும் எந்த சார்பும் இல்லாமல் தேடினால் தான் களப்பிரர் பற்றி அறிந்து கொள்ள இயலும் என்பதை முதல் பதிவு எழுத தேடும் போதே அறிந்து கொண்டேன்...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  31. ஆர்வத்தைத் தூண்டும் பல தகவல்கள், உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும்!
    உங்கள் பதிவிற்கும் ஆராய்ச்சிக்கும் வாழ்த்துக்கள் வெற்றிவேல்! அழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள ஆய்வாளர்கள் உதவவேண்டும்..தொடர்கிறேன்...நன்றி!

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...