Sep 4, 2012

தடம் மாறியப் பொழுதுகள்

துள்ளித் திரிந்த காலங்கள் பலப் பல
எதனைச் சொல்வேன்,
எப்படிச்  சொல்வேன்...

ஆட்டு  மாட்டுடன் சுற்றித் திரிந்த நாட்கள்,
அதன்  மேல் சவாரி செய்ததையா? அல்லது
நீர் ஓடைக்கு அணைக் கட்டி தோற்றதையா? அல்லது
சில முறை வென்றதையா?

நீரோடை  பனை மரத்தின் கிழங்கைத் தோண்டி

தெரியாமல் உண்ட நாட்கள்.
அதன் ருசிக்கு ஈடு உண்டா?
மாட்டிக் கொண்டு முழித்த நினைவுகள்.

காடெங்கும் விளையாட்டு,
ஊரெங்கும் விளையாட்டு.காடெங்கும்
பல்லாங்குழி,
காய் விளையாட்டு,
கிரிக்கெட்,
ஆடு  புலி,
சதுரங்கம்,
தாயாங்கட்டை என நீளும் வரிசை.

ஊரெங்கும்
கார்  காலம் பம்பரம்,கோலிகுண்டு, கிட்டிப் புள்.
வேனிற்காலம் கிரிக்கெட்,
வசந்த காலம் தண்ணீர் பார, உப்பு பாரி.
மற்ற  பொழுதெலாம் கபடி.

காட்டு  வலைக்குள் பிடித்த நண்டு,
ஒரு முறை கையோடு வலையில் இருந்து வந்த பாம்பு.
வயல் முழுக்க சேறு,
சேறு  அனைத்தும் உடலில்
எத்தனை இன்பங்கள் அந்த நாட்களில்.

எதிலும் வெற்றி, எங்கும் வெற்றி.

மழை தூரல்
வருமுன்
நாசியைத் தொடும் மண்
வாசம். அத்துடன்
நுரையீரலைத் தொடும் சமையல் வாசம்.

பள்ளி முழுவதும் படிப்பு.
மாலை முழுவதும் சண்டை.
அங்கேயே ஆரம்பித்த நம் வீரம்.

சூரியனுக்கு முன் முழித்த பொழுதுகள்,
காலை, மாலை வேலைக்கு சென்று சம்பாதித்த அஞ்சு ரூபா.
அந்த அஞ்சி ரூபா தந்த மகிழ்ச்சி, இன்று
இந்த இன்ஜினியர் சம்பளம் தரலயே!!!

லீவு  நாளில் போவோம் பக்கத்தூர்
பொய்யாத நல்லூர்க்கு
களை எடுக்க, பருத்தி எடுக்க..
இடது முனையில் பாட்டி, வலது முனையில் அம்மா
நடுவில் மட்டும் நான்.
என் பாதி வேலையை அவர்கள் சேர்த்து செய்ய
கிண்டல் செய்தே நான் வருவேன்
ஒய்யாரமாக
பின் தங்கியோரைப் பார்த்து.,

உணவு இல்லாட்டி நான் சாப்பிட்டேன்,
நீ சாப்டு தங்கம் என
வேண்டாம் என்றாலும்
ஊட்டிவிடும் அம்மா.
இன்று  அம்மா ஊரில்,
நான் சீமையில்.

எத்தனை முறை திட்டினாலும்
மறந்து விடும் பாட்டி...
சலிக்காமல்  எங்களுக்கு பாசம் காட்டும் பாட்டி
இன்று இல்லை எங்களுடன்.

கதை சொல்லும் தாத்தா
இரவு முழுவதும் கதை,
நரி  ஒட்டும் போதும் கதை,
ஆடு மேய்க்கும் இடமெல்லாம் கதை.
அந்தக்  கதைகள் தான் எத்தனை ரகம்.

இன்று யார்என்ன கொடுத்தாலும் அவர் கொடுத்த
ஒரு ரூபாய்க்கு
செல்லாய்க் காசாக ஆகிடுதே அனைத்தும்.
அவருக்கின்று  நான் செலவுக்கு கொடுக்கும் போது
நிறைவடையும் மனம்,


மழை பொழிந்த நாள்களிலும்,
மழை  பொய்த்த நாட்களிலும்
என் பாதம் என் ஊர் ஓடை ருசியை அடையாது
இருந்ததில்லை...
மாலை நேரம்
மங்கிய பொழுது
காலில் செருப்பு இல்லாது
நடந்த காலங்கள்
ஏராளம் அந்த சிறு ஓடையில்.
எத்தனை  இன்பம் மனதிற்கு
உச்சி வெயிலில் கால் சுட்ட பொழுதும்
ஏராளம்.

மூன்று மணி நேர நீச்சல் கேணியில்,
வரும்போது வேலி கடந்து திருடித் தின்ற மாங்காய்.
மசமசக்கும் அதன் ருசி
இன்னமும்.

இத்தனை இன்பங்களையும்
மனதில்  நினைத்தே ஏங்குறேன்,
என் சிறு வயது சேட்டையை.


இப்போது இந்த உறவுகளையும்,
எந்தன் ஊரையும் நினைத்தால்
விழியோரம் கண்ணீர் அரும்புகிறது.

இன்று தினமும் போனில்
இரண்டு வார்த்தை
பேசுவதில்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்னை நான்.

அனைவரும் கூறுகிறார்கள்,
அவனுக்கென்ன அவன் பிழைத்துக் கொண்டான்
அவன் கெமிகல் என்ஜினியர் என்று...

இன்று இத்தனையும் கடந்து,
துருப்பிடித்த இயந்திரங்களுடனும்,
அதனை விடத் துருப்பிடித்த மனம் கொண்ட
இந்த நரகத்தில் வசிக்கும் என் நிலையை யார் அறிவர்...

உறவு பிரிந்து,
தூக்கம் கடந்து,
இன்பம் மறந்து,
எத்தனை கால பட்டினி.

அனைத்தும் தடம்மாறிவிட்டதே.
உறவுகள்,
இன்பங்கள்,
என
அனைத்தும்...

தடம்  மாறியப் பொழுதுகள்...

                                            வெற்றிவேல்...


33 comments:

 1. வார்த்தைகள் தேடுகிறேன் நண்பா.கிடைக்கவில்லை.அத்தனை வரிகளிலும் பாசம் பாசம் பாசம் மட்டுமே ஏங்கித் தவிக்கிறது.வாழ்வும்,வளமும் வளர அனபையும் பாசத்தையும் இழக்கிறோம்.காலத்தின் கட்டளைக்கும் கீழ்படிகிறோம்.காலம் நேரம் பார்த்துக் கடத்திச் செல்கிறது எம் உறவுகளை......மனம் கலங்குகிறேன்.கை பிடித்து ஒரு உலா வருவோம் வாங்களேன்.வெளியில் மெல்லிய இதமான குளிர்.மர இடுக்குவழி கீறலாய் நிலவு.மீண்டு வந்து இதமாகத் தூங்கலாம் !

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் கூறுவதும் உண்மைதான் தோழி, வாழ்வு வளர வளர அனைத்தையுமே இழந்து ஒரு கட்டத்தில் தனித்து விடப்பட்டு தவிக்க விடப்படுகிறோம். அனைத்துமே என்றோ தீர்மானிக்கப் பட்டுவிட்டது, நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்று. என்ன, உண்மையை நம் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. செல்லலாமே ஓர் உலா... குழந்தைநிலா அழைத்தால் எங்கும் வரலாம்.

   Delete
  2. உலாவில் இந்த அம்மாவின் கையை ரெண்டு பிள்ளைங்களும் பத்திரமா புடிச்சுகிட்டு வரணும் ஆமா சொல்லிபுட்டேன்!

   Delete
  3. நீங்க சொன்னா சரிதான், மறு பேச்சு உண்டா... நாளைக்கே டிக்கட் போட்டுட வேண்டியதுதான் தென்றல்...

   வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 2. sako'


  valikonda vari!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா...

   தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 3. பல நினைவுகளை நினைக்க வைத்து விட்டீர்கள்...

  ஏங்க வரிக்கும் வரிகள்... பாராட்டுக்கள்... நினைவிற்கு வந்த பாடல் :

  பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்...
  இதை தவிர வேரு எதை கண்டோம்...
  புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே...
  புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே...
  பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே...

  நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்
  நினைவெல்லாம் காவியம்...
  நித்தமும் நாடகம்... நினைவெல்லாம் காவியம்...
  உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்...

  பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்...
  கடமையும் வந்தது கவலையும் வந்தது...

  அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...
  நண்பனே நண்பனே நண்பனே...
  இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
  அது ஏன் ஏன் நண்பனே...?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

   அருமையான பாடலை சொல்லி விட்டு போய்விட்டீர். எத்தனை காலம் மாறினாலும், இந்த பழைய நினைவுகள் மட்டும் மனதில் நீங்காமல் அப்படியே தங்கி விடுகிறது. எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்கள்...

   Delete
 4. நீங்கள் கெமிகல் என்ஜினியர் நான் மெக்கானிக்கல் என்ஜினியர் அவளவு தான் வித்தியாசம்...நண்பா

  நீங்கள் நம்ம ஏரியாவாமில...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் உழவன் ராஜா, நீங்க அறியலூரா? நான் அரியலூர் தான் பாஸ்.

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

   தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 5. அழகான வரிகள்....
  பிரபல தமிழ் சினிமாப் பாடலொன்றின் ஞாபகம் வந்தது.. நண்பா

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா,

   நண்பர் தனபாலன் அவர்கள் அந்த பாடல் வரிகளையே பொறித்துள்ளார்.

   தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 6. அந்த துள்ளித் திரிந்த காலங்கள் இன்னும் பசுமையான நினைவுகளாகவுள்ளது. அக்காலம் திரும்ப கிடைக்காதா என்று ஏக்கமாகவுள்ளது. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராசன், இந்த ஏக்கம் திரும்பாத ஏக்கம் நண்பா...

   வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள் நண்பா...

   Delete
 7. அருமை தோழா... என் பசுமையான நினைவுகளை திரும்பவும் மீட்டுத் தருகிறது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அருண், நலமா? தங்கள் நினைவுகளை மீட்டதில் மிக்க மகிழ்ச்சி...

   தொடர்ந்து வாருங்கள்...

   நன்றி, வணக்கம்...

   Delete
 8. அடேங்கப்பா!!! அத்தனையும் மலரும் நினைவுகள். நெஞ்சில் என்றும் நீங்காதவை. இதை எழுதும் போது தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வை நான் அறிவேன். பல முறை நான் அதை அனுபவித்திருக்கிறேன். வேலைக்கு சென்று கொண்டே எப்படி இதை எழுத நேரம் கிடைகிறது என்று தான் தெரியவில்லை. எனக்கு நேரம் கிடைத்தால் உடனே ஒரு ஆங்கிலப்படத்தை பார்துவிடுவேன்.ஆனால், நீங்கள் எழுத்து மீது கவனம் செலுத்துகிரீர்கள். தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சேகர். நானும் தங்கள் நிலையில் தான் இருந்தேன், நேரம் கிடைத்த பொழுதெல்லாம் நானும் படம் தான் பார்க்கிறேன். முன் போலெல்லாம் முடிவதில்லை, தூங்குவதர்க்கே நேரம் சரியாக இருக்கிறது...

   தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 9. அப்படியே சின்ன வயசுக்கு போயிடு வந்துட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பாஸ்.

   தொடர்ந்து வாருங்கள்... நன்றி

   Delete

 10. படித்து முடிக்கையில் விழியோரம் கண்ணீர்.
  தாயகத்தில் உயிரும் , பிழைக்க வந்த இடத்தில் உடலுமாய் வாழும் எல்லோருக்குமான கவிதை இது.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா...

   உங்களுக்கு படிக்கையில் விழியோரம் கண்ணே, எனக்கு நினைக்கும்போதெல்லாம் கண்ணீர்.

   தொடர்ந்து வாருங்கள் நண்பா...

   Delete
 11. மிகவும் அழகான வரிகள்...இதெல்லாம் இனி வரும் காலங்களில் இருக்குமா என்பதே சந்தேகம் தான்...இனி வரும் குழந்தைகள் ரொம்ப ரொம்ப பாவம்...

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  வலைப்பூ தலையங்க அட்டவணை
  info@ezedcal.com
  http//www.ezedcal.com

  ReplyDelete
  Replies
  1. இப்போதே அனைத்தும் மறந்தாகி விட்டது இந்தக் கால மாடர்ன் குழந்தைகளுக்கு...
   நினைத்தால் வருத்தம் தான் மிஞ்சுகிறது...

   தங்கள் தலையங்க அட்டவணையை எப்படி உபயோகிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.
   அதனை கூறுங்களேன்...

   வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 12. நானும் அப்படியே :-)

  ReplyDelete
  Replies
  1. நமக்கு ஆதரவாக பலர், மிக்க மகிழ்ச்சி...

   Delete
 13. வணக்கம் வெற்றி ....

  சேறோடு சேறாக பிணைந்து போன நம் வாழ்க்கையை மீட்டி எடுக்கும் வரிகள் ...
  எல்லையற்ற நம் மண்ணோடு கலந்த வாழ்வுதனை இங்கு ஒரு சிறு வட்டத்துக்குள் சுருக்கி வைக்க
  முடிவதில்லை எத்தனை முறை முயன்றாலும் ... இருந்தும் அதற்குள் வாழ பழகி கொண்டு நம்மை நாமே மறைத்து கொண்டு வாழ வேண்டிய சூழல் இது ... எந்த பணமும் நம் வாழ்வை மீட்டி கொடுக்காது, நாசி நிறைக்கும் மண் வாசனையை துறந்து நாசி அரிக்கும் புழுதியில் பொழப்பை பார்க்கும் சில தருணங்களில் மனம் அடையும் சஞ்சலத்தை எவ்வரிகளிலும் விளக்கிட முடியாது ...

  நான் எழுத நினைத்து பல தருணங்களில் முழு நிறைவு பெறாமல் இன்னும் தூங்கி கொண்டிருக்கின்றது இது போல் நம் மண்ணை சீராட்டும் ஒரு கவிதை எனது பக்க குறிப்புகளிலும் , உள்ள துடிப்புகளிலும் ...

  பார்க்கிறேன் சீக்கிரம் நானும் இது போன்ற ஒன்றை வெளியிட ...

  நல்ல வரிகளை தொடுத்து எனது நினைவுகளை பின்னோக்கி சுழல வாய்ப்பளித்த உனக்கு என் நன்றிகள் ... கவிதைக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்ய அரசன் அண்ணா நம் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. சில தருணங்களில் இந்த பொழப்பை நினைத்து சொல்லவொண்ணா துயர் அடைந்ததுண்டு. விரைவில் நீங்களும் எழுதுங்கள், அப்படிதான் நம்மை நாம் ஆறுதல் படுத்த இயலும்...

   வணக்கம், நன்றி அண்ணா....

   Delete
 14. அன்பின் வெற்றிவேல் - மலரும் நினைவுகள் - அசைபோட்டு ஆனந்திக்க வைக்கும் நிக்ழ்வுகள் - நன்று நன்று -0 நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா... எப்ப்போதுமே மனதில் மலர்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் தான்..

   வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 15. என்றைக்குமே நமது ஊர் நினைவுகள் நம்மை விட்டு அகல்வதில்லை வெற்றி.....

  சிறப்பான பகிர்வு. இதுவரை வராது இருந்து விட்டேனே எனத் தோன்றியது.

  நட்புடன்

  வெங்கட்
  புது தில்லி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், அதனால் என்ன, இனி தொடர்ந்து வாருங்கள். தங்கள் வருகை நல் வரவாகட்டும்...

   நன்றி, வணக்கம்...

   Delete
 16. ஒவ்வொரு வரியும் இனிமையான நினைவுகள், அந்த மாதிரி வாழ்வெல்லாம் மறைந்து விடுமோ..ஹ்ம்ம்ம்ம்
  அருமையான பதிவு.

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...