Jan 22, 2016

திறந்த மடல் - 2: கடிதங்களின் சுவாரஸ்யங்கள்

அன்புள்ள தோழர் சீனு அவர்களுக்கு,

வணக்கம்...

நான் நலமாகவே இருக்கிறேன். தாங்களும் நலமாக இருக்கிறீர்கள் எனும் நம்பிக்கையில் கடிதத்தைத் தொடர்கிறேன்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பே எழுத நினைத்த கடிதம் இது. கடந்த வருடம் எழுதிய எனது முதல் கடிதம் சென்னை வெள்ளத்தில் சிக்கி சிதைந்ததைப் போல அல்லாமல், இந்தக் கடிதத்தைக் காப்பாற்றவே சற்றுப் பொறுத்து பொங்கல் களிப்பு அடங்கியபிறகு எழுதுகிறேன்.

தோழரே, எனது வானவல்லி புதினத்தைப் பற்றி கடந்த கடிதத்தில் வினவி, காத்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். தங்களைப் போன்றே நானும் வானவல்லிக்காக காத்திருக்கிறேன். கடந்த வருட சென்னை வெள்ளத்தின் காரணமாக சென்னை புத்தகத் திருவிழா தள்ளிச் சென்றுவிட்டதன் காரணமாக வானவல்லி வெளியீடும் தள்ளிப் போயிருக்கிறது. விரைவில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நம்புகிறேன். தோழரே, நான் நான்கு பாகங்கள் அடங்கிய வானவல்லி புதினத்தை ஓவர் நைட்டில் எழுதி முடித்ததாக சிலாகித்திருந்தீர்கள். அதைக்கண்டு தாங்கள் பிரமித்ததாகவும், வியப்படைந்ததாகவும் கூறி, எனக்கு புரியாத மொழியில் 'மேரா ஒன் ஸ்டெப் பேக் ஹை' என திட்டியதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. 
நான் கூறியிருக்கும் கடிதத்தில் சரித்திர சொற்கள் அதிகள் கலந்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். அது முற்றிலும் உண்மைதான் தோழரே. எனது கற்பனை, என் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வானவல்லிக்குள் மூழ்கிக் கிடந்ததாலோ என்னமோ எனது எழுத்துகளில் சரித்திர சொற்கள் மிகுதியாகவே கலந்துவிட்டன. வானவல்லி உலகம் மிகவும் அற்புதமானது தோழரே. நான்கு பாகங்கள் முடிந்த நிலையிலும் எனக்கு வானவல்லியை முடிப்பதற்கு மனம் வரவில்லை. தமிழர்களின் பொற்காலமாகிய சங்ககாலத்தின் தொடக்கத்தில் புகாரின் வனத்தில் கதை தொடங்கி மீண்டும் புகாரில்தான் முடிவடையும். புகார், உறைந்தை (உறையூர்), பாண்டியரின் கொற்கை, எரித்திரியன் கடல் (அரபிக் கடல்), அடிமை சந்தை, தார் பாலைவனம், யவனத்தின் (கிரேக்கம்) ரோமாபுரி, கலிங்கம் (ஓடிஸா), அவந்தி (உஞ்சை- UJJAIN), இமயம் வரை பயணிக்கும் அதியற்புதமான பயணம் அது. கடல் பயணம், கடற் கொள்ளையர், அடிமைகளின் யுத்தம் (கிளாடியேட்டர்), கடற்போர், நிலப்போர், சிலிர்ப்பூட்டும் காதல், பிரிவு மற்றும் வானவல்லி, மரகதவல்லி, பத்திரைத் தேவி, கடற்கொள்ளைக் காரி ஆண்ட்ரிமேடா, அவந்திகா ஆகிய பேரழகிகளை விட்டு வேறு எதைப்பற்றியும் சிந்திக்கமுடியாமல் திணறிய காலங்கள் அவை. உறங்கும் வேளையிலும் புரவிகளின் காலடிச் சத்தம், விறல் வேலின் வாளிலிருந்து தெறித்த குருதித் துளிகள் என்னை நனைத்திருக்கின்றன. அந்த அற்புத உலகத்திலிருந்து இன்னும் நான் முழுவதுமாக மீளவில்லை. மீளவும் மனம் வரவில்லை. ஆதலால் என் எழுத்துகளில் சரித்திர சொற்கள் கலந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இன்னொரு செய்தி. வானவல்லி வரும்போது வரட்டும் என்று கரிகாலனின் தந்தையான இளஞ்சேட் சென்னியின் வரலாறை எழுதத் தொடங்கியிருக்கிறேன். மீண்டும் சரித்திரப் புதினம். ஆதலால் கடிதத்தில் சரித்திர சொற்களை தவிர்க்க இயலாது. பொருத்தருள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். (உடன் ஒரு பேண்டசி நாவலையும் எழுத உத்தேசித்திருக்கிறேன். ஒரே நேரத்தில் சரித்திரம் மற்றும் பெண்டசியை எழுதுவது புரவியையும், எருமையும் ஒரே நுகத்தடியில் கட்டி வண்டியை ஓட்டுவதற்கு சமம் என்று தெரிந்தும் எடுத்த முடிவு. கடவுள் தான் என்னைக் காக்க வேண்டும்!)

தோழரே, கடந்த கடிதத்தில் 'பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை; தன்நோய்க்குத் தானே மருந்து' என்ற வள்ளுவன் வாக்கினைப் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு தாங்கள் எந்த பதிலையையும் தெரிவிக்காமல் சாரு நிவேதிதாவைப் போன்று அமைதியாக இருந்து தப்பித்துக்கொண்ட திறமையைக் கண்டு நான் வியக்கிறேன். அதிலும், தாங்கள் தென்காசியிலிருந்து சென்னை வந்த பயண அனுபவத்தைப் பற்றி என்னை எழுத சொல்லியிருக்கிறீர்கள். பயணக் கட்டுரை எழுதுவதில் தலைச்சிறந்த தாங்கள் என்னை எழுத சொன்னதன் காரணத்தை மட்டும் அறிய இயலவில்லை? அதிலும் அந்த அனுபத்தைத் தாங்கள் எனக்கு பகிர்வதாகவும் கூறியிருக்கிறீர்கள். வர வர நன்றாகவே பகடி செய்கிறீர்கள்! தங்கள் தந்தைக்கு தாங்கள் எழுதிய கடிதம், தென்காசியிலிருந்து சென்னை வந்த அனுபவம் என பலவற்றையும் கூறி நெகிழச் செய்துவிட்டீர்கள். பதில் கடிதம் எழுதியமைக்கு நன்றி தோழரே...

கடந்த கடிதத்திற்கு வழங்கிய பின்னூட்டத்தில் ஈழத்தின் நண்பர் சிகரம் பாரதி அவர்கள் கடிதத்திலும் இலக்கியத் தரம் என்ற ஒன்று இருக்கிறது எனத் தெரிவித்தார். அதையும் தாங்கள் அமோதித்தீர்கள். கடிதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், நேதாஜி'யின் கடிதங்கள், சமர்க் களத்திலிருந்து சே குவாரே தனது காதலிக்கு எழுதிய கடிதங்கள் தான். இவற்றில் நேரு தனது மகள் இந்திர பிரியதர்ஷினிக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களை நான் வாசித்திருக்கிறேன். 'உலக சரித்திரம்' எனும் தொகுதியாக வெளிவந்திருக்கிறது. அனைத்தும் சரித்திரம் பற்றிய தகவல்கள். சரித்திரம் என்று கூறுவதை விடவும் உலக அரசியல் என்றும் கூறலாம். கடிதத்தில் பல பேரரசுகளின் எழுச்சி, வீழ்ச்சி பற்றி அழகாக மகளுக்கு எழுதியிருப்பார். வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்கள். அதை வாசிக்கும்போது சுவாரஸ்யம் இருக்காது ஆனால் வியப்பு நிச்சயம் ஏற்படும்.

தோழரே, தகவல் நிறைந்த கடிதம் பற்றி நிறைய நாம் வாசித்திருப்போம். ஆனால், சுவாரஸ்யம் நிறைந்த கடிதங்களின் வாசிப்பு குறைவே. சுவாரஸ்யம் நிறைந்த கடிதம் ஒன்றைப் பற்றி நான் இங்கு குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். தேவதைகளின் தேசம் என வர்ணிக்கப்படும் பிரஞ்சு தேசத்தில் மில்லியன் கணக்கில் கையெழுத்துப் பிரதிகளாகவே பரவிய கடிதம் அது. பிறந்ததிலிருந்தே இரண்டு தோழிகள் உயிருக்கு உயிராக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருமே ஒருவனையே காதலித்து திருமணம் செய்யவும் முயற்சி செய்தார்கள். பிரஞ்சு தேசத்தில் ஒரு தேவதையையே வைத்தே சமாளிப்பது மிகக் கடினம் (காரணத்தை தாங்கள் அறிவீர்கள் என்று கருதுகிறேன். தெரியவில்லை என்றால் பதில் கடிதத்தில் வினவவும், விளக்குகிறேன்). இந்த நிலையில் இருவர் என்றதும் பிரஞ்சு குடிமகன்கள் தெறித்து ஓடிவிட்டார்கள். தங்களது முயற்சி தோல்வியைத் தழுவியதும் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது, இருவரும் இருவேறு ஆண்களை திருமணம் செய்துகொள்வது என்று. ஆனால், அந்த முடிவுக்குப் பிறகு அவர்கள் இருவரும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டார்கள். அதாகப்பட்டது, 'திருமணம் நடந்த பிறகு ஏற்படும் அனுபவங்களை கடிதம் வழியாக பரிமாறிக்கொள்ள வேண்டும்' என்பதுதான் அந்த ஒப்பந்தம். அவர்களின் ஒப்பந்தக் காலத்தில் இப்போதிருப்பதைப் போன்று தகவல் தொடர்பு இல்லை. காலங்கள் நகர்ந்தன. இரண்டு தோழிகளும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள். ஒப்பந்தப்படியே இரண்டு தோழிகளும் தங்களது அனுபவங்களை கடிதம் மூலம் பகிரத் தொடங்கினார்கள். 
தோழரே, தாங்கள் கூறினீர்களே, 'அவசரமான உலகில் அவசர அவசரமாக வெளிப்படும் சொற்களைக் காட்டிலும் நிதானமாக வரும் எழுத்துகளுக்கு வலிமை அதிகம்' என்று. அடைந்த அனுபவத்தை கூறுவதைக்காட்டிலும் அதைக் கடிதம் மூலம் வடிப்பதில் இரண்டு தோழிகளும் பேரின்பத்தைக் கண்டிருக்கலாம். கடிதப் போக்குவரத்து தொடர்ந்துகொண்டிருந்த சமயம் எப்படியோ கடிதம் வெளியே கசிந்துவிட்டது. இப்போது நம்மூர் பிரபல பத்திரிகைகள் ஆடியோவை அச்சாக வெளியிடுவதைப் போன்று அக்கடிதம் அச்சேறி முக்கிய பத்திரிக்கையிலும் வெளியானது. அச்சேறிய அடுத்த கணமே உலக இலக்கியமாகி பெரும் புகழைப் பெற்றுவிட்டது அக்கடிதம். இப்போதிருக்கும் வசதி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இல்லாத காரணத்தால் அக்கடிதத்தை எழுதியே பிரதியெடுத்துக் கொண்டார்கள் வாசகர்கள். கையெழுத்துப் பிரதியாக அதிக அளவில் வாசிக்கப்பட்ட கடிதம் இரண்டு தோழிகளும் எழுதிக்கொண்ட கடிதம் தானாம். எப்பொழுதோ மேற்கண்ட கடிதத்தைப் பற்றி தகவலாகத்தான் படித்தேன். உலக இலக்கியமான அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கடிதத்தை நானும் படித்துவிட வேண்டும் என்று கூகுள் முழுவதும் சல்லடை போட்டு தேடிவிட்டேன். கடிதம் மட்டும் கிடைத்தபாடில்லை. தோழரே, அந்தச் சிறப்பு வாய்ந்த கடிதம் தங்களுக்குக் கிடைத்தால் தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்தவும்.

தோழரே, வாய்ப்பு கிடைத்தால் வாதாபி வரை ஒரு முறை சென்று வந்துவிடுங்கள். முடிந்தால் ஞாயிற்றுக் கிழமை செல்வது உத்தமம். ஏனெனில் விடுமுறை தினத்தில் சென்றால் சிற்பங்கள் மற்றும் கற்கோயில்களுடன் அதனை தரிசிக்க வரும் தேவதைகளையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கி.பி 5ம் மற்றும் 7ம் நூற்றாண்டு கால சாளுக்கியர்களின் சிற்பங்கள், பௌத்த குகைகள், கற்கோயில்கள் என பார்ப்பதற்கு ஏராளமாக இருக்கின்றன. எப்போதும் குளக்கரையில் அமர்ந்திருக்கும் விநாயகர் எப்படிப்பட்ட பாக்கியவான் என்று வாதாபியில் இருக்கும் அகஸ்தியர் ஏரியின் கரையில் அமர்ந்தபிறகுதான் புரிந்துகொண்டேன்.

பசுமை நிறத்தில் காணப்படும் அகஸ்தியர் ஏரியின் கரையில் ஐந்தாம் நூற்றாண்டு கால சிவன் கோயில். ஏரியைச் சுற்றிலும் பாறைகளாலான மலை முகடு. ஏரியின் இடப்புறத்தில் காணப்படும் மலை முகடில் பௌத்த குகைகள், வலப்புறத்தில் அமைந்திருக்கும் மலை முகட்டில் கற்கோயில்கள் வரிசையாக அமைந்திருக்கும். ஏரிக்கு உட்புறத்தில் அமைந்திருக்கும் பௌத்த நாத கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையின் மீது சாய்ந்துகொண்டு ஏரியிலிருந்து வரும் குளிர்ந்த தென்றலை அனுபவித்தபடியே ஏரிப் படிக்கட்டுகளில் துணி துவைக்கும் உள்ளூர் கன்னிகள், சாளுக்கியர்களின் கைத்திறமையைக் காண வரும் வெளியூர் சிட்டுகள் ஆகியவர்களைப் பார்த்தபடியே அமர்ந்துகிடப்பதும் ஒரு வரம் தான். தவறவிட்டுவிடாதீர்கள் தோழரே...

கடைசியாக எனக்குப் பிடித்த ஷெல்லியின் ஒசியாமண்டியாஸ் கவிதை ஒன்றை கூறி இந்தக் கடிதத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்...

பழந்தேசத்து பயணி ஒருவரை சந்திக்க நேர்ந்தது
அவர் சொன்னார்:
பாலைவனத்தில் உடலற்ற இரு பெரும் கால்கள் நிற்கின்றன
அருகில் மணலில் சிதைந்த முகமொன்றைக் கண்டேன்
சுருங்கிய இதழ்களில் என்னவொரு அலட்சியமான கம்பீரம்
வடித்த சிற்பி திறமைசாலி தான்
உயிரற்ற கல்லில் உணர்ச்சிகளை உயிர்ப்பித்திருக்கிறான்.
கால்கள் நின்ற பீடத்திலே எழுதியிருந்தது:
"என் பெயர் ஓசிமாண்டியாஸ்,
அரசர்களுக்கெல்லாம் அரசன்
நான் படைத்தவற்றைப் பார், ஆற்றாமை கொள்!"
கால்களையும், உடைந்த முகத்தையும் தவிர
சுற்றி வேறொன்றும் இல்லை..
தொடுவானம் வரை அழிவும் மணலும் தான் தெரிந்தன.


சி.வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...

5 comments:

  1. வானவல்லியைப் படித்த எனக்கே புரவியின் குளம்படியும் சம்பாவதி வனத்தின் ஓசைகளும் பத்திரையின் சிரிப்பும் வானவல்லியின் சினமும் டாள்தொபியாஸ் விறல்வேலின் வாட்சமரும், ஆன்ரிமேடாவின் அழகும்.... இன்னும் சொல்லிக் கொண்டிருந்தால் நாவலே இங்கு வந்துவிடுமோ? புரவியில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறப்பது போலவும் மின்னலாய்க் குருவாளை எறிவது போலவும் ஆசை வந்தது. வானவல்லி என்னையே அப்படி ஆக்கிரமித்தாள் என்றால் உங்களைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை.
    தேரில் இருந்து எருமையை நீக்கி மற்றொரு புரவியுடன் ஒரு பகுதி பயணத்தை முடித்துவிட்டுப் பின்னர் எருமையை அடுத்தகட்டப் போரில் பயன்படுத்திக்கொள்ளலாமே
    உடன்வரும் பயணத்திற்குத் தேவையான தீப்பந்தங்களும் புரவியும் விளக்குகளும் நெய்யும் வாட்களும் என யாமும் தயாராக வைத்திருக்கிறோம். நெடும்பயணத்தில் ஆங்காங்கே சந்தித்துத் தகவல் பரிமாறிக்கொள்வோம். தம்பிக்கு இன்னுமொரு எச்சரிக்கை, ஆங்காங்கே தேவதைகள் என்று நினைத்துத் தேவையற்ற திசைதிருப்பிகளில் மனதைச் செலுத்தாமல் இலக்கை நோக்கிப் பயணிக்கவும்.

    ReplyDelete
  2. வானவல்லி நாவலை ஆரம்பத்தில் வலையில் எழுதியபோது வாசித்த அனுபவம் இன்னமும் சிலிர்ப்பூட்டுகின்றது! பெரும் திறமைக்கு சொந்தக்காரர் ஆன தாங்கள் கடித இலக்கியத்தில் மட்டுமின்றி, சரித்திரம் பேண்டஸி நாவல்களில் இரட்டை குதிரையில் பயணித்தாலும் சாதனை படைப்பீர்கள் என்பது திண்ணம்! வாழ்த்துக்கள்! கடைசி கவிதை வரிகள் அற்புதம்! நன்றி!

    ReplyDelete
  3. வெற்றி அன்றே சொன்னீர்கள். எழுத இருப்பதாக. நிச்சயமாக நல்ல திறமை படைத்த நீங்கள்..சரித்திர நாவல் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் கலக்குகின்றீர்கள் ஃபேண்டசியிலும், இப்போது கடிதங்கள்..எல்லாமே சூப்பர். உங்கள் புத்தகம் விரைவில் வெளியாக வேண்டும். உங்கள் பெயரில் உள்ள படி சாதனைகள் படைப்பீர்கள் உறுதி வெற்றி!!

    ReplyDelete
  4. படங்களும் ரொம்ப அழகா இருக்கு. பார்க்க வேண்டும் இந்த இடத்தை நிச்சயமாக

    ReplyDelete
  5. அழகான கடிதம் புத்தகம் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...