Apr 6, 2014

காதலும் இலக்கியமும்: நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

தலைவன் தலைவி முதல் களவி தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான் தலைவன். சின்னப் பொய் தான் தலைவன் கூறுகிறான், அவ்வளவுதான் தலைவியும் கவுந்துட்டாங்க....  அவன் கூறியதைக் கேட்டதுமே தலைவி மீண்டும் அவனை கட்டித் தழுவிக் கொள்கிறாள். அப்படி தலைவன் தலைவிகிட்ட என்ன பொய் சொல்லி கவுத்தான்னு தெரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க.

தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து தலைவன் கேட்கிறான், நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். (அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.) அப்புறம் என்ன தலைவன் தலைவிய தொடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சிடுச்சி... அவனோட சேட்டைகள தொடர்றான்.

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல்

செறிஎயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

நூல்: குறுந்தொகை (#2)


பாடியவர்: இறையனார் (இறையனார் என்பது சிவ பெருமானின் பெயர்)

சுருக்கமான விளக்கம்:  பல பூக்களைச் சுற்றி வரும் துமியே,  இதுவரை நீ எத்தனை பூக்களைப் பார்த்திருப்பாய்? அதில் எந்தப் பூவாவது  என் காதலியின் கூந்தல் போன்று வாசம் இருந்ததுண்டா?

பாடலின் விளக்கம்:பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! தேனுண்ட மயக்கத்தினால் பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ அறிந்த பூக்களில்.'

இலக்கியத் தேடல் உள்ளவர்களுக்காக மட்டும்:

(கொங்கு = பூந்துகள், தேன்; அஞ்சிறை = அழகிய சிறகுகள்; தும்பி = வண்டு; காமம் = விருப்பம்; செப்பாது = சொல்லாமல்; கண்டது = ஆராய்ந்து கண்ட உண்மை; மொழிமோ = சொல்க; பயிலியது கெழீஇய = பல பிறவியிலும் என்னோடு இணைந்த; செறிஎயிற்று = நெருங்கிய பல்வரிசையினை உடைய; அரிவை = பெண்; கூந்தலின் = கூந்தல் போல; நறியவும் = நறுமணம் உள்ளதும்)

மயிலியல் = மயில் போன்ற ஒயில் உள்ள பூ!
செறியெயிறு = அடுக்கடுக்கா அமைஞ்சிருக்கும் பூ!
அரிவை கூந்தல் = பூ போன்ற கூந்தல்!

மயில்இயல் செறிஎயிற்று –  மயில் போன்ற சாயலுடைய, நெருங்கிய அழகிய முத்து போன்ற பற்களையுடைய என்ற பொருளும் உண்டு.

இப்படி தலைவியின் கூந்தலை எடுத்த எடுப்பிலேயே தலைவன் பூ என்று சொல்லிவிட்டான். தலைவன் முடிவும் கட்டிட்டான்.

பாவம், இனி தும்பி என்ன செய்யும்? இந்த நிலையில் தும்பிக்கு  அறிவுரை வேறு! என் நாட்டுத் தும்பி என்பதால் எனக்குப் பிடிக்குமே என்று பொய் சொல்லாமல் , செப்பாது கண்டது மொழிமோ உண்மையை மட்டும் சொல்ல வேண்டும் என்று.

நம்மாளுங்க எனக்காக யாரும் பஸ்ச கொளுத்த வேணாம், தீக்குளிக்க வேண்டாம்னு சொல்லுவாங்கள்ள. (அப்படின்னா என்ன அர்த்தம், இன்னுமா, பஸ்ஸ கொளுத்தல, இன்னுமா யாரும் தீக்குளிக்களன்னு தான அர்த்தம்?) அப்படியே தான், தலைவனும் தும்பி கிட்ட சொல்றான். அதே போல, எனக்காகச் சொல்லாதே, இவள் மயிலியல் செறிஎயிற்றுப் பூ! சொல்லு தும்பியே சொல்லுன்னு தொல்ல பண்றான்.

பயிலியது கெழீஇய = பழகப் பொருத்தமான என்று பொருள். தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள உறவினை நட்பு என்றும் காதல் என்றும் வெளிப்படையாகக் கூறாமல் இக்காலத்தில் நாம் நட்பு என்று மற்றவர்களை ஏமாற்றுகிறோம் அல்லவா (அப்படியே தான்!!!) அந்தக் காலத்துலயும் நம்மவர்கள் அப்படியே தான் இருந்துருக்காங்க...

எல்லாக் காலத்துலயும் தமிழன் ஒரே மாதிரிதான் காதலிச்சிருக்காங்க.... அவ்வ்வ்

மகடூஉ குணத்துள் ஒன்றான = பயிர்ப்பு! (அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு) ! அது இவளுக்கு இருப்பதால், பயிலாத பொருள் மீது வியப்பு தோன்றி, தள்ளி நிற்கக் கூடும் அல்லவா? அப்படி ஆகி விடக் கூடாதே என்பதற்காக, எச்சரிக்கையுடன் “பயிலியது கெழீஇய நட்பு” என்று கூறுகிறான்.


கொங்கு தேர் வாழ்க்கை- கொங்கு என்றால் பூந்தாது. மகரந்தம் என்று சொல்கின்றோமே. அப்படிப் பட்ட மகரந்தங்களை (தேர்)ஆராய்ச்சி செய்யும் வாழ்க்கையைக் கொண்டிருக்கிறதாம் வண்டு.


தேனைப் பருகுவதற்காக ஒவ்வொரு மலராகச் சென்று அங்கிருக்கும் மகரந்தத்தையும் தேனையும் தேர்ச்சி செய்து பருகுவதே வாழ்க்கையாகக் கொண்டது வண்டு.

ஆக வண்டு பலப்பல மலர்களைக் கண்டு தேர்ச்சி செய்துள்ளது என்று எடுத்த எடுப்பிலேயே சான்றிதழ் கொடுத்தாகி விட்டது. நீதிபதியாக இருக்க தும்பிக்கு மட்டுமே தகுதி உள்ளது என தலைவன் தும்பி மீது பெரிய துண்டப் போட்டு தும்பியையும் கவுத்துட்டான்.

தமிழ் இலக்கியத்தில் உள்ள காதல் பாடல்களின் அணிவகுப்பு இனி ஒவ்வொன்றாக தொடரும்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

கொசுறு:

வானவல்லிகாக சங்க இலக்கியங்களில் தகவல் தேடுகையில் அதில் பொரிந்துள்ள கருத்துகளும், காதலும் என்னை கட்டிப் போட்டுவிட்டன என்றே சொல்லலாம். அப்படித் தேடும் போது கிடைத்த தகவல்களை உங்களுடன் இனி நான் பகிர்ந்துகொள்ளலாம் என விருப்பப் படுகிறேன். ஒன்னு மட்டும் கடைசியா சொல்லிக்கறேன். தமிழன் தமிழன் தான். யாராலையும் அடிச்சிக்க முடியாது.

24 comments:

  1. வெற்றிவேல்! இலக்கியத்திலும் நுழைஞ்சீட்டீங்களா . வாழ்த்துக்கள் . திருவிளையாடலில் பலமுறை கேட்ட பாடல் என்றாலும் எப்போதும் படித்தாலும் வியக்க வைக்கக் கூடிய செய்யுள்.
    முயற்சி தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... திருவிளையாடல் பார்க்கும் போது தருமி இறையனாரின் இலக்கிய அறிவை சோதிக்கும் போது அந்த கருத்துரையாடல் ரொம்பப் பிடித்தது. இப்போ இலக்கிய அறிவு உதித்த பின்னரே அந்த பாடலின் அர்த்தம் புரிந்து வியக்க வைத்தது...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. உங்களின் தேடல் வியக்க வைக்கிறது வெற்றிவேல்...!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி அண்ணா...

      Delete
  3. #எல்லாக் காலத்துலயும் தமிழன் ஒரே மாதிரிதான் காதலிச்சிருக்காங்க.... அவ்வ்வ்#
    இந்த காலத்து பொண்ணுங்க தலையில் ஷாம்பூ வாசம்தான் வரும் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதானே வெற்றிவேல் ?
    த ம +2

    ReplyDelete
    Replies
    1. நீங்க கூறுவது என்னவோ உண்மைதான் அண்ணா....

      Delete
  4. கலக்குங்க வெற்றிவேல் ...வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அக்கா...

      Delete
  5. இன்றுதான் இந்த பாடலை நான் எனது தமிழ் அறிவு தொடருக்காக படித்தேன்! உங்கள் தளத்தில் சிறப்பான விளக்கமுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! தொடருங்கள் சங்க இலக்கியங்கள் இனிக்கும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா... சங்க இலக்கியங்கள் நிச்சயம் இனிக்கும்.

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  6. Anonymous1:22:00 AM

    பல தடவை வாசித்த இலக்கியம் இன்றும் சிறப்படன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வேதாம்மா...

      Delete
  7. செம ஆராய்ச்சி டா ! இடையிடையே சொல்லியிருக்கும் உன் கருத்து !

    ReplyDelete
  8. வெற்றிவேல் தம்பி! மிக அருமையான ஒரு பாடல் இது! திருவிளையாடல் படத்தில் இதைச் சொல்லித்தானே சிவனும், தருமியும்.......

    விளக்கம் மிக அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்! தம்பி! செம தமிழ்பா!!!!!

    தொடருங்கள் இது போன்ற அருமையான பகிர்வுகளை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கீதாக்கா...

      ஆமாம், திருவிளையாடலில் இந்தப் பாடலை வைத்துதான் பெரும் கலகமே நிகழும்.

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      தொடர்கிறேன், தாங்களும் இணைந்திருங்கள்...!

      Delete
  9. ஹாஹஹாஹ இது இதுதான் பகவான் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஷாம்பூ வாசம் தான் வரும்னு நீங்கலும் சொல்றீங்களா.... சிக்கு வாட வராம, ஏதேனும் வாசம் வந்தாலே கொண்டாடலாம்... அவ்வ்வ்

      Delete
  10. அருமையான விளக்கம்... நிறைய உழைப்பை வாங்குகிறதோ வானவல்லி... நல்லதுதான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி.

      மொத்த உழைப்பையும் வாங்கிக் கொள்கிறது. நிச்சயம் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் என நம்புகிறேன்...

      வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  11. Anonymous11:41:00 PM

    avvvvvvvvv ...நல்லா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  12. வெற்றிவேல்.. அருமையா எழுதி இருக்கீங்க. மிகவும் அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. மனப்பாடப் பகுதிக்குப் படித்துப் படித்து பல பாடல்கள் கடமைக்குப் படித்த ந்தக் காலத்துக்குப் பிறகு இப்படி பொருளுணர்ந்து அனுபவித்துப் படிப்பது சுகம்தான். நடுநடுவே உங்கள் கமெண்ட்ஸ் பிரமாதம். (தும்பியையும் கவுத்துட்டாங்க... பஸ்ஸ கொளுத்தாதே போலத்தான் ....)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா...

      தாங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா. கடமைக்கு மனப்பாடமாக செய்ததை விட இப்போது அனுபவித்துப் படிப்பது பெரும் சுகமாகத்தான் உள்ளது...

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி....

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...