Apr 10, 2014

கடை திறப்பு - 2: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.

பரணி பாடிய செயங்கொண்டார் புலவர் பெண்களே உங்களது நலிந்து போகும் இடையைப் போன்று ஆசை அனைத்தையும் துறந்த யோகியராகிய ஞானிகளும் நலிந்து போகிறார்கள் என்கிறார். அப்படி அவர் ஞானிகள் ஏன் பெண்களின் இடையினைப் போன்று நலிந்து போகிறார்கள்? அதற்கு என்ன காரணம் சொலியிருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள கீழே தொடருங்கள். 

                 புடைபட இளமுலை வளர்தொறும்
                              பொறை அறிவுடையரும் நிலை தளர்ந்து 
                இடைபடுவது பட அருளுவீர்
                             இடுகதவு உயர் கடை திறமினோ!                                  பாடல் - 22

பாடலின் பொருள்: பெண்களே, உங்களது அழகினைக் காண்கையில் ஆசையை அடக்கிய ஞானியரும் நலிந்து போகிறார்கள். அத்தகு பெண்களே, உட்புறம் தாழிட்ட கதவினைத் திறப்பீர்களாக!!!

விளக்கம்: பெண்களே! உங்களுடைய இளைய கொங்கைகள் பக்கங்ககளைக் கவர்ந்து அழகுடன் வளர வளர உங்களது இடையோ அதனை சுமக்க இயலாமல் நலிகின்றது. அதைப் போன்றே ஆசை எழாது தங்களை அடக்கியாளும் மன அடக்கம் உடைய ஞானியர் உள்ளமும் உங்களைக் காண்பதால் நலிந்து போகிறது. அத்தகு பேரழகு வாய்ந்த பெண்களே, உயர்ந்த வாயிலின் உட்புறம் தாளிட்ட கதவினைத் திறவுங்கள். உங்களது தலைவர் வெற்றியோடு வந்துவிட்டார்!

இடைபடுவது என புலவர் கூறியிருப்பது செழிப்புடன் வளர்ந்த கொங்கைகளை சுமக்க இயலாமல் இடை நலிவது போன்று ஞானியரும் தங்களது ஆசையை அடக்க இயலாமல் நலிந்து துன்புறுகிறார்கள் என ஒரே சொல்லில் இரண்டு அர்த்தங்களைக் கொடுத்துள்ளார்.

இந்தப் பாடலில் வளர்ந்த கொங்கைகளை சுமக்க இயலாமல் நலியும்  பெண்களின் இடையை நலியும் ஞானியர்க்கு உவமையாகக் காட்டியுள்ளார் செயங்கொண்டார்.

அழகிகளைக் காணும் ஆசையை அடக்கிய யோகியரும் நிலைகுலைவராயின், ஏனைய ஆடவர் செயலை கூற வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டார்.

பொருள்:புடைபட - பக்கங்கள் திரள, பொறை - அடக்கம், இடைபடுதல் - துன்புறுத்தல், பட - பொருந்த - இடுகதவு - தாள் பூட்டிய கதவு, கடை - வாசல்.

மேலும் பரணி பற்றி: 
பரணி என்பது தமிழில் வழங்கும் 96 சிற்றிலக்களும் ஒன்று. பரணியின் பெயர்க்காரணம் குறித்து பலரும் பலவிதமாக கூறுகின்றனர்.
  • தினைப்புனம் காப்போர் பரண் அமைத்து அதன் மீதமர்ந்து தினைக்கதிர்களைத் தின்ன வரும் பறவைகளைத் துரத்துவது போன்று போர்க்களத்தில் வீரன் ஒருவன் யானை மீதமர்ந்து எதிரிகளைத் துரத்துவதால், இச்செய்தி பற்றி கூறும் நூல் பரணி என்பர்,
  • அணிமணி முதலிய அறிய பொருள்களை வைத்துக்காக்கும் செப்பு பரணி எனப்படும். பல்வகைக் கற்பனை நயமும் பல்வகை சுவையும் விரவி வருவதால் இதற்குப் பெயர் பரணி என்பர்.
  • பரணி என்ற நாள்மீன் (நட்சத்திரம்) காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது. அந்த நாள் மீனால் வந்த பெயரே நூலுக்குப் பெயராக வந்தது (உ.வே.சா கூற்று)
  • போர்க்களத்தில் இறந்த வீரர்களின் உடலைப் பேய்கள் பரணி நாளில் கூழ் சமைத்து காளி எனும் கொற்றவையை வழிபாட்டு உண்டு மகிழ்வதால் இந்நூலுக்குப் பரணி எனப் பெயர் வந்தது.
  • இவ்வாறு பலரும் பலவிதமாக கூறினாலும் "போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரன் ஒருவனை சிறப்பித்துப் பாடுவதே பரணியின் மரபு" என பலரும் ஒப்புக்கொள்கின்றனர்
பரணியின் இலக்கணப் படி போர்க்களம் சென்றவன் முதலாம் குலோத்துங்கச் சோழன் கிடையாது. அவனது சேனாதிபதியான கருணாகரத் தொண்டைமான் என்பவனே!!! கலிங்கத்துப் பரணி சிறப்பித்துக் கூறும் தலைவனும் அவனே. ஆனால், செயங்கோண்டாரே பாடல் 255 ல் 'திருப் புருவத் தனுக் கோட்டநமன் கோட்டம் பட்டது சக்கரக் கோட்டம்!' என கூறுவதன் மூலம் சோழ அரசனாகிய முதலாம் குலோத்துங்கன் தனது அழகிய புருவமாகிய வில்லை வளைத்தான். அவ்வளவில் அனைத்து பகை வீரர்களும் யமனுடைய ஊர்ப் போய் சென்றார்கள் என முதலாம் குலோத்துங்கனையே சிறப்பித்துள்ளார். ஆக இளைய பல்லவர் கருணாகரத் தொண்டைமானை கலிங்கத்தை அழிக்க தனது புருவத்தை உயர்த்தி அனுமதி அளித்த குலோத்துங்கச் சோழனே பரணியின் தலைவன் ஆகிறான்.


கடை விரிப்பு தொடரும்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

15 comments:

  1. அருமை வெற்றிவேல். கருணாகரத் தொண்டைமானை நாயகனாக வைத்து சாண்டில்யன் கதை எழுதி இருக்கிறாரோ? அல்லது வேறு ஏதாவது சரித்திர் நாவலாசிரியர்கள்? நீங்கள் படித்து ரசித்ததை எங்களுடனும் பகிர்ந்து கொள்வது சுவாரஸ்யமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா....

      சாண்டில்யன் கருணாகரத் தொண்டைமானை வைத்து கடல் புறா என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் அவரை இளைய பல்லவர் என அழைத்திருப்பார்.

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா... தொடர்ந்து இணைந்திருங்கள்.

      Delete
  2. சொன்ன காரண விளக்கமும், ஒவ்வொரு சொற்களின் விளக்கமும் ரசிக்கத்தக்கவை...

    பரணியின் பெயர்க்காரணம் பற்றிய தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. அருமையான விளக்கம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...

      Delete
  4. ரசிச்சு ரசிச்சு எழுதியிருக்கான்யா.. (புலவர சொன்னேன்)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அண்ணா.... அனைவரும் ரசிக்க வேண்டியது...!

      Delete
  5. செயங்கொண்டாரின் உவமை நயத்தை சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி! நல்லதொரு பகிர்வு! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் அண்ணா... வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. அருமையான பகிர்வு! மீண்டும் பள்ளிக்குச் செல்வது போல ஒரு உணர்வு!

    தொடருங்கள் தம்பி வெற்றிவேல்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் அக்கா...

      பள்ளிக்குச் செல்வதைப்போன்ற உணர்வா??????????

      நன்றி.

      Delete
  7. Anonymous11:26:00 AM

    மிக நல்ல விளக்கம் நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி வேதாம்மா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...