Apr 22, 2012

இந்திய ஏவுகணையை அமெரிக்கா விமர்சிக்காதது ஏன்?

இந்தியா தனது நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைத் தொடரில், 5000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அக்னி 5 என்ற ஏவுகணையை பரீட்சார்த்த ரீதியாக ஏவியிருக்கும் நடவடிக்கையை சீன ஊடகங்கள்
விமர்சித்திருக்கின்றன. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த ஏவுகணை நடவடிக்கையை விமர்சிக்கவில்லை.

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவர், புதன்கிழமை , வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கா பெரிதும் கவலை கொள்ளவில்லை என்று கூறினார். ஏனெனில், இந்தியா, அணு ஆயுதப்பரவல் விஷயத்தில், நல்ல வகையில் செயல்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

வடகொரியா, இரான் போன்ற நாடுகள் இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதைக் கண்டிக்கத் தயங்காத அமெரிக்கா, இந்தியா அதைச் செய்யும்போது, அதே போன்ற நிலைப்பாட்டை எடுக்காதது , அதன் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக இருப்பதாக சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த விமர்சனங்கள் சரியல்ல என்று கூறும் இந்திய வெளிவிவகாரத்துறையின் முன்னாள் செயலர், நீலகண்டன் ரவி, இந்தியாவை, இரான் , வடகொரியா போன்ற நாடுகளோடு ஒப்பிடுவது தவறு என்கிறார்.

1957லிருந்தே இந்தியா அணுஆயுதப்பரவலை எதிர்த்து வந்திருக்கிறத என்று கூறும் ரவி, இந்தியாவின் உள் நாட்டு சட்டங்கள் சர்வதேச அணு ஆயுதப்பரவல் சட்டங்களை விட கடுமையானவை என்றார். அமெரிக்காவின் நிலைப்பாடு இரட்டை அளவுகோலை அடிப்படையாக் கொண்ட்து என்ற விமர்சனத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்ற அவர், ஆனால், இந்திய அமெரிக்க உறவுகள் கடந்த 2000ம் ஆண்டிலிருந்தே, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் பலமடைந்து வந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு, இந்தியாவை, அமெரிக்கா ஒரு சரிசமமான நட்பு நாடாக கருதுவதாகவும் கூறினார்.

ஆனால் இந்தியாவை , சீனாவுக்கெதிராக ஒரு “சமநிலைப்படுத்தும் சக்தியாக” அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது என்ற கருத்தை மறுத்த அவர், இந்தியா ஒரு பழமை வாய்ந்த நாடு, பெரிய நாடு, எந்த ஒரு நாடும் அதை பயன்படுத்த முடியாது என்றார் அவர்.

1 comment:

  1. அமெரிக்கர்கள் தற்போது அவர்களின் சொந்த ஏவுகணை பரிசோதிக்கும் முயற்சியில் உள்ளனர். அதுவும், ரஷ்யாவின் ஏவுகணைகளை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு. தில் இருந்தால் அமெரிக்க ரஷ்யாவிடம் தன் பலத்தை காட்டி பார்க்கட்டும்...மூக்கு ஓடையும்..

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...