Apr 22, 2012

இலங்கையை கண்காணிக்க ஆரம்பித்துள்ள இந்தியா

அக்னி 5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் 1.5 தொன் எடையுள்ள அணுகுண்டை சுமந்து சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை இந்தியா கடந்த வாரம் வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை 5000 கி.மீற்றர் தொலைவுக்குத் தாக்கும் திறன் கொண்டது. இதனைக் கொண்டு சீனாவின் எந்தப் பகுதிக்கும் இந்தியா இலக்கு வைக்கலாம். அதுமட்டுமின்றி அமெரிக்கா தவிர்ந்த உலகின்
பெரும்பாலான நாடுகளை, தனது நாட்டில் இருந்தே குறிவைத்து தாக்கக்கூடிய வல்லமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்துக்கு, முன்னர் தடைபோட்ட மேற்குலக நாடுகள், அக்னி 5 சோதனை குறித்து மௌனம் காக்கின்றன. அதேவேளை, சீனா கூட, இதை தான் போட்டியாகக் கருதவில்லை. இந்தியா தமது எதிரி நாடு அல்ல என்று கூறியுள்ளது. 
ஆனால், இந்திய சீன ஆயுதப்போட்டியின் விளைவே இந்த ஏவுகணைச் சோதனை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. இந்தியப் பெருங்கடலில், சீனாவின் கடல்வழிச் செல்வாக்கும், சீனா புதிதாக கட்டியுள்ள விமானந் தாங்கிப் போர்க்கப்பலும் செலுத்தப்போகும் ஆதிக்கம் இந்தியாவை மிரள வைத்திருப்பது உண்மையே. இலங்கை உள்ளிட்ட பல ஆசிய நாடுகளை தன்வசப்படுத்திக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நகர்வுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ளுக்குள் நடக்கின்ற இராஜதந்திர யுத்தம் முழுமையாக வெளியே தெரிவதில்லை. இதன் ஒரு கட்டமாகவே, அண்மையில் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையுடனான கடல் எல்லையைப் பாதுகாக்க, ஆளில்லா உளவு விமான அணியொன்றை தமிழகத்தின் தென்முனையில் இந்தியா நிறுவியுள்ளது. 

புத்தாண்டுக்கு முன்னதாக, இராமேஸ்வரம் தீவில் உள்ள உச்சிப்புளி என்ற இடத்தில் இந்த ஆளில்லா உளவு விமான அணி நிறுத்தப்பட்டுள்ளது.
உச்சிப்புளியில் “ஐ.ஏ.என்.எஸ். பருந்து“ என்ற இந்தியக் கடற்படையின் விமானத் தளம் ஒன்று உள்ளது. பிரித்தானியர் காலத்தில் நிறுவப்பட்ட இந்தத் தளத்தை இலங்கையில் இந்தியப் படைகள் இராணுவ நடவடிக்கைளை மேற்கொண்டபோது இந்தியக் கடற்படை தனது தளமாக மாற்றிக் கொண்டது.
இங்கு ஒரு விமான ஓடுதளம், நவீன ரேடார் கண்காணிப்பு வசதிகளுடன் உள்ளது. 50 கடற்படையினர் மற்றும் 12 அதிகாரிகளுடன் இயங்கும் இந்தத் தளத்தில்தான் இப்போது ஆளில்லா உளவு விமான அணியை நிறுத்தியுள்ளது இந்தியா. இந்தியக் கடற்படை ஏற்கெனவே இரண்டு உளவு விமான அணிகளை வைத்துள்ள நிலையில் தான் மூன்றாவது அணியை உச்சிப்புளியில் உருவாக்கியது. 

முதலாவது ஆளில்லா உளவு விமான அணி கேரள மாநிலம் கொச்சினில் உள்ளது. இரண்டாவது அணி, குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ளது. கொச்சின் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு விமானங்களில் இரண்டே, தற்போது உச்சிப்புளிக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை இஸ்ரேலியத் தயாரிப்பான Heron  (Machatz-1)  மற்றும் Searcher MK II (Meyromit)  விமானங்களாகும். கொச்சினில் உள்ள தளத்தில் இருந்தே இந்தியக் கடற்படையால் இலங்கையை அண்டிய கடற்பகுதியை நன்றாகக் கண்காணித்திருக்க முடியும். ஆனால், இலங்கையை மேலும் நெருக்கமாக கண்காணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. 

இதனால் தான் இலங்கைக்கு மிக நெருக்கமாக உச்சிப்புளியில் இந்தத் தளத்தை நிறுவியுள்ளது. இந்தத் தளம் அமைக்கப்பட்டதன் காரணமாக, எல்லை தாண்டும் மீனவர்களின் பிரச்சினை சுட்டிக் காட்டப்பட்டாலும், அது முழுமையானதோ, உண்மையானதோ அல்ல. சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருவதே இந்தியாவின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம். ஏற்கெனவே கேரளாவின் கொச்சினில் ஒரு உளவு விமான அணி நிறுத்தப்பட்டுள்ள போது, உச்சிப்புளியில் இன்னொன்றை அமைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதைவிட முக்கியமான விசாகப்பட்டினம் அல்லது சென்னையில் தான் இதை நிறுவியிருக்க வேண்டும். இந்தியக் கடற்படைக்கு தமிழ்நாட்டில் அரக்கோணத்திலும் “ஐ.என்.எஸ். ராஜாளி“ என்ற விமானத்தளம் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இராணுவ விமான ஓடுபாதையைக் கொண்ட இந்தத் தளம் சென்னையில் இருந்து 69 கி.மீ தொலைவில்தான் உள்ளது. 

விசாகப்பட்டினத்துக்கும் சென்னைக்கும் நடுவேயுள்ள இந்தத் தளத்திலாவது இந்த அணியை நிறுத்தியிருக்கலாம். ஒரிஸாவின் சண்டிப்பூர் போன்ற கிழக்கு கடற்பரப்பின் பாதுகாப்புக்கு இந்தப் பகுதியில் ஆளில்லா உளவு விமான அணியை நிறுத்துவதே பொருத்தமானது. ஏனென்றால், அக்னி உள்ளிட்ட எல்லா ஏவுகணைச் சோதனைகளையும் இந்தியா இங்கிருந்துதான் மேற்கொள்வது வழக்கம். இப்படியான சோதனைகளை உளவு பார்த்ததாக சீனக் கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை துரத்திச் சென்ற போது அது கொழும்புத் துறைமுகத்திற்குள் அடைக்கலம் தேடியதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. 

இப்படியாக அச்சுறுத்தல் மிக்க கிழக்குக் கடற்பரப்பின் பாதுகாப்புக்காகவே உளவு விமான அணியை உச்சிப்புளியில் நிறுத்தியது உண்மையானால், அதை விசாகப்பட்டினம் அல்லது ஒரிஸாவின் சண்டிப்பூரை அண்டித்தான் நிறுவியிருக்க வேண்டும். கொச்சினில் இருந்து மிகக் குறைந்த தூரத்தில் உள்ள உச்சிப்புளியில் தான் இந்தியா இந்தத் தளத்தை அமைத்துள்ளது.
அதாவது கொச்சினுக்கும் உச்சிப்புளிக்கும் இடையிலான தூரத்தை 20 நிமிடங்களில் பறக்க முடியும். ஆனாலும் உச்சிப்புளியையே இந்தியா தெரிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தத் தளம் முற்றிலும் இலங்கையை மனதிற் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை இந்தியா கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. இஸ்ரேலியத் தயாரிப்பான இரு உளவு விமானங்களுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த விமான அணி மேலும், இரண்டு விமானங்களுடன் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதுவே, இந்தத் தளத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்குப் போதுமானது. உச்சிப்புளியில் இந்தியா உளவு விமான அணியை நிறுத்தியது தனது சொந்த நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான முடிவாக இருந்தாலும், இதுபற்றி இலங்கையிடம் இருந்து எந்தக் கருத்தும் வரவில்லை. 

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனது மட்டுமின்றி பிராந்தியத்தினது பாதுகாப்புக்கான நகர்வுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இது இலங்கைக்கான ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக ஜெனீவா தீர்மானத்தின் பின்னர், இந்திய இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழலில்தான் இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது ஏற்கெனவே, எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், இந்தியா தன்னைக் கண்காணிக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வை இலங்கைக்கு கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...