Jan 31, 2015

அரிச்சல் முனை தேவதை

மதுரை வலைப் பதிவர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பிறகு கடற்கரை விஜயன் துரையுடனே ராமேஸ்வரத்திற்கு கிளம்பிவிட்டிருந்தேன். பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பொது அம்மா கூறிய “அவுங்க கூப்டறாங்க, இவுங்க கூப்டராங்கன்னு ஊர் சுத்த கிளம்பிடாத. மதுரை போனதும் வீட்டுக்கு வந்துடனும்” என்ற வார்த்தைகள் என் காதுகளில் ஒலிக்க வெற்றுச் சிரிப்பு ஒன்று உதிர்ந்துவிட்டுச் சென்றது என் முகத்தில்.

அதைப்பார்த்த கடற்கரை துரை, “என்னடா நமக்கு பக்கத்துல உக்காந்துருக்க பொண்ணப் பார்த்து சிரிக்கிறியா?” என கலாய்க்க அதற்கும் வெற்றுச் சிரிப்பு ஒன்றையே பதிலாய் உதிர்த்தேன்.
இரவு பத்து மணிக்கு ராமேஸ்வரத்தை அடைந்திருந்தோம். வறுத்த மீன் பொறியலுடன் இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் படுத்துக்கொண்டோம். பொழுது விடிந்தது. இருவரும் கிளம்பினோம்.

துரையின் அம்மா, “தம்பி, சாப்டாம கொள்ளாம ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?” என வினவினார்.

“அம்மா, நாங்க தனுஷ்கோடி போறோம்”

“தனுஷ்கோடிக்கா?”

“ம்ம்ம்ம்!”

“சரி பாத்து போயிட்டு வாங்க. அங்க அலை ஆள் ஒசரத்துக்கு வரும். உனக்கு வேற நீச்சல் தெரியாது. அந்த தம்பிய பார்த்து அளச்சிட்டு போயிட்டு பத்தரமா வா” என விஜயனிடம் தெரிவித்தார்.

“சரி அம்மா” என துரை பதிலளிக்க நான் “டேய் கடல் உனக்கு நீச்சல் தெரியாதா?” எனக் கூறி சிரித்துக்கொண்டே அவனுடன் தனுஷ்கோடி நோக்கிப் பேருந்தில் பயணித்தேன்.

பேருந்து தனுஷ்கோடியை நோக்கி ராமேஸ்வரத்திலிருந்து விடுபட்டுப் பயணித்துக்கொண்டிருந்தது. நான் வழக்கம் போலவே பேருந்தின் இடது பக்க சன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துகொண்டு பயணித்தேன். கடல் அலையே இன்றி பாசி படிந்து சதுப்பு நிலக் காட்டுக் குட்டையைப் போன்று காணப்பட்டது.

“கடல், இந்தக் கடலுக்கு என்ன பேரு?”

“வெற்றி, இதுதான் வங்காள விரிகுடா!”

“உங்க ஊரு கடல் வேஸ்டு. கடல்னுதான் பேரு. அலையே காணும்.”

“அலை இருக்கற கடல் உனக்கு வேண்டுமா?”

“ஆமாம்!”

“சரி இந்தாண்ட இருக்கற சீட்டுக்கு வா, போவோம்” எனக் கூறிக்கொண்டே வலது பக்க இருக்கைக்கு அழைத்துச் சென்றான். பேருந்தில் டிரைவர், கண்டக்டர் நாங்க ரெண்டு பேரு என மொத்தம் நான்கு பேர் மட்டுமே பயணித்ததால் எங்கள் விருப்பத்திற்கு மாறி அமர்ந்துகொள்ள முடிந்தது.

துரையின் அம்மா கூறிய அந்த ஆளுயர அலையைக் காண ஆவலுடன் சன்னலையே வெறிக்கப் பார்த்தபடி அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தேன். சாலையின் வலப்புறத்தில் அடர்ந்து காணப்பட்ட சவுக்கு, தைல மரம் மற்றும் கருவ மரத்திற்கு இடையில் அவ்வபோது கடல் நீல நிறத்தில் தோன்றி மறைந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் பயணித்த பிறகு எங்கள் இரு பக்கங்களிலும் கடல் காணப்பட வால் போன்று நீண்ட சாலையில் நங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். வலப்புறக் கடலின் அத்துமீறலினால் சாலை வரை மணல் கொண்டுவந்து கொட்டப்பட்டிருந்தது. ஆனால், இடப்புறக் கடல் அதே குட்டை போன்றே சிறு சலனம் கூட இல்லாமல் காட்சியளிக்க தனுஷ்கோடி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க நாங்கள் இருவரும் இறங்கிக்கொண்டோம்.

“வெற்றி இங்கேருந்து நாலு கி.மீ உள்ள நடந்தா தனுஷ்கோடி தீவு. நடந்தே போயிடலாம். வேனு’ம் போயிட்டு வரும். ஆனால் நூறு ரூபாய். அங்க இருபது நிமிடத்திற்கு மேல பார்க்க விடமாட்டாங்க. நடந்து போனா, நம்ம இஷ்டத்து எப்ப வேணாலும் பார்த்துட்டு திரும்பலாம்.”

“சரி, கடல். நடந்தே போவோம். எனக்கும் நடக்குறது ரொம்ப பிடிக்கும். வெயிலும் மந்தமாதான் இருக்கு. வா நடக்கலாம்!”

இடது பக்க கடல் குட்டை போன்று அலையே இல்லாமல் காணப்பட்டதால் அது சேரும், பாசியுமாக காணப்பட்டது. ஆனால், வலது பக்கக் கடல் அப்படி இல்லை. அலைகளின் சீற்றத்தால் அழகாகக் காணப்பட்டது கடற்கரை.

அந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கத்தொடங்கிய அடுத்த கணமே ஒரு உண்மையை அறிந்துகொண்டேன். ஒட்டு மொத்த வளர்ந்த இந்தியாவிலிருந்து மொத்தமாகப் பிரிக்கப்பட்ட இடம் இது என்று. வளர்ச்சியின் சுவடு சிறிதுகூட காணப்படாத இடத்திற்கு நான் வந்துள்ளதாக உணர்ந்தேன்.

“வெற்றி உனக்குத் தெரியுமா? உலகிலேயே அழகான கடற்கரைகளும் இந்த தனுஷ்கோடி கடற்கரையும் ஒன்று. ஆனால், அதிக சீற்றமுள்ள கரையும் இதுதான்!”

“ஓ, அப்படியா?”

“ஆமாம், நீளமான கரையும் இதுதான்.”

“அப்படின்னா, எதுக்கு மெரினாவ உலகத்துலேயே ரெண்டாவது நீண்ட கடற்கரைன்னு சொல்றாங்க?”

“டேய் அது சிட்டில இருக்கற பீச்ல நீண்டது. தனுஷ்கோடி சிட்டியா?” எனக் கடற்கரை துரைராஜ் கேட்க நான் அமைதியாகிவிட்டேன். இருவரும் பேண்டை முட்டி வரை மடித்துவிட்டுக்கொண்டு அலைகளில் கால் நனைத்து மகிழ்ந்த படியே நடந்துகொண்டிருந்தோம். கேமரா மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டும், கரையில் கிடந்த சங்கு மற்றும் சிற்பிகளை எடுத்துக் கடலுக்குள் வீசியபடி கடற்கரையில் வலை பறித்துக்கொண்டிருந்த நண்டுகளை விரட்டிவிட்டுக்கொண்டு இருவரும் காதல் கதை, வலைப் பதிவர்கள் வெளியிட்ட புத்தகங்களின் தரம் ஆகிவற்றைப் பேசிக்கொண்டு தனுஷ்கோடியை நோக்கி இன்பமாக நடந்துகொண்டிருந்தோம். அப்போது திடீரென்று எங்களுக்குப் பின்னால் ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். எப்படியும் அவரது முகம் சவரம் செய்து சில வாரங்களாவது கடந்திருக்கும். மெல்லிய தோற்றம். கசங்கிய உடை, அவரைப் பார்த்த உடனே தனிமையில் இருப்பவர்களுக்கு ஒருவித பயத்தை தோற்றுவிக்கச்செய்துவிடும் விகார முகம். இது மட்டும் போதாதென்று அவர் முழு போதையில் வேறு காணப்பட்டார்.

அவரைப் பார்த்த நான், “கடல் இங்க நாம ரெண்டு பேரு மட்டும்தான் இருக்கோம்” என்றேன்.

“ஆமாம் டா. அவரு வேற புல் மப்புல வராரு!”

“அமைதியா வா. எதுவும் பேசாத!”

“சரி டா!”

“தம்பி, ரெண்டு பெரும் நில்லுங்க” என்ற குரலைக் கேட்டு நான்தான் முதலில் திரும்பினேன். எங்களுக்குப் பின்னால் வந்த அந்த குடிகாரர்தான் எங்களை அழைத்திருந்தார்.

“நிற்கலாமா? அல்லது ஓடிவிடலாமா? என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அவர் எங்களுக்கு அருகில் வந்துவிட்டார். வந்தவர், “இருவரும் ஊருக்குப் புதுசா?” என வினவினார்.

கடல், “ஆமாம்” என்றான். அவன் ராமேஸ்வரம் என்பதை முற்றிலும் மறைத்திருந்தான்.

“தம்பி இங்கல்லாம் தனியா வரக்கூடாது!”

“ஏன்?” ஆர்வத்துடன் வினவினேன் நான்.

“தம்பி இது பேய், பிசாசு நடமாடுற இடம்.”

“பேய், பிசாசா?”

“ஆம் தம்பி” அழுத்தமாக பதில் வந்தது அவரிடமிருந்து.

‘மொடாக் குடிகாரன்கிட்ட மாட்டிக்கிட்டோம். இனி கடவுள் தான் ரெண்டுபேத்தையும் காப்பாத்தணும்’னு நான் நினைத்துக்கொண்டேன்.

“தம்பி, இது பல பேரு செத்துப்போன இடம். ஒரு புயல் வந்து இந்த ஊரையே தொடைச்சிட்டு போயிடுச்சி. பொழைச்சவங்க கொஞ்ச பேருதான். அப்ப நானு சின்ன புள்ள. இதோ அங்கதான் ஒரு ரயில் ரோடு ராமேஸ்வரத்திலேருந்து தனுஷ்கோடிக்கு இருந்துது. ஒரு ரயிலையே புரட்டிப் போட்டுட்டுது அந்த புயல். யாரும் பொழக்கள! அது மட்டும் அல்ல, வெளியூர்லேருந்து வர பலபேரு குளிக்கரன்னு கடல்ல எறங்கி செத்துருக்காங்க. இந்த ஆண் கடலு இருக்கே அது பொல்லாது. பக்கத்துல இருக்கற தன்னோட பெண் கடல் கூட தன்ன சேர விடாம பிரிச்சி வச்சிட்டாங்கன்னு இந்தக் கடலு ரொம்ப ஆவேசமா இருக்கு. இங்க செத்தவங்க எல்லாரும் ஆவியா அலையறத நானே பாத்துருக்கேன். அவுங்க சாகறதுக்கு முன்னாடி எழுப்புன அபயக் குரல் இங்க கேட்டுகிட்டே இருக்கும். நீங்க ரெண்டு பேரும் வயசுப் பசங்களா வேற இருக்கீங்க. உங்கள மாதிரி கன்னிப் பசங்களதான் மோகினிப் பிசாசுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றவாறே எங்கள் இருவரின் முகத்தையே மாறி மாறி உற்றுப் பார்த்தார்.

நான் அவரிடமிருந்து பேச்சை மாற்ற, “இங்கேருந்து தனுஷ்கோடி எவ்ளோ தூரம்?” என வினவினேன்.

“இங்கேருந்து இன்னும் 8 கி.மீ”

நான்கு கி.மீ தான் என்ற துரையை நான் முறைக்க அவன் கீழே தலையைக் குனிந்துகொண்டான்.

“தம்பி நான் சொல்றத நீங்க நம்ப மாட்டீங்க. இங்க நிறைய பிசாசு இருக்கு. அது புடிச்சவங்கள கொல்லாம விடாது. முதல்ல ரத்தக்காவு அது எடுத்துக்கும், அப்புறம் அவங்களுக்கு மட்டும் கேட்கற மாதிரி குரல் எழுப்பும், அப்புறம் அவங்க கண்ணுக்கு மட்டும் அகப்படும்; அப்புறம் கெட்ட கெட்ட கனவா வரும். கடைசில உங்கள அது அலசிட்டு போய்டும்”

நான் அவருக்கு என்ன பதில் கூறுவதென்றுத் தெரியாமல் முழிக்கையில் அவர், “தம்பி கெட்ட கனவு அப்படின்னா ‘அந்த மாதிரி கனவு’தான்” என்றார்.

தனுஷ்கோடில நல்ல பாரின் பிகரு பேச்சுத்துணைக்கு இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சிகிட்டு வந்த நாங்கள் மனதிற்குள் நோந்துபோயிருந்தோம்.

“பத்ரமா இருங்க” எனக் கூறிய அந்தப் பெரியவர் எங்களைத் தாண்டி வேகவேகமாக நடந்து சென்றார்.

சிறிது நேரம் அவரையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு நின்றோம். “கடல் அவரு சொல்றது உண்மையா?”

“எதடா பேய் கூட அந்த மாதிரி கனவு வரும்னாரே, அதையா?”

“டேய் லூசு. அவரு பல பேரு செத்துப் போனதப்பத்தி சொல்லிருக்காறே, அத கேட்கறேண்டா”

“ஆமாம் டா. 64 வாக்குல வந்த ஒரு புயலு இந்த ஊரையே காலி பண்ணிடுச்சி. அரசாங்கமே இந்த இடம் வாழறதுக்கு தகுதியில்லாத இடம்னு அறிவிச்சிட்டாங்க!”

“என்னடா சொல்ற?”

“நாம இங்க எதைப் பார்க்க போய்கிட்டு இருக்கோம்?”

“அந்தப் புயல்ல அழிஞ்ச ஒரு தேவாலயம், சில கல் தூண் அப்புறம் சில கட்டடங்களோட சிதளம் மட்டும் எஞ்சி இருக்கு. அதைதான் பார்க்கப்போறோம்”

“டேய் அப்ப தனுஷ்கோடிதான் அழகான கடற்கரைன்னு சொன்ன?”

“ஆமாம். நாம நிக்கறோமே இதான். பாரு, எவ்ளோ அழகா இருக்கு?”

ஏமாற்றத்துடனே நான் அவனுடன் பயணித்துக்கொண்டிருந்தேன். சில கி,மீ தொலைவு நடந்தபிறகு இருவருக்குள்ளும் பழைய உற்சாகம் தோன்ற மீண்டும் போட்டோ, அலை வருவதற்குள் ‘காதலியின் பெயர்’ எழுதி போட்டோ எடுப்பது என்று மீண்டும் மகிழ்ச்சியாக நடந்த போது தொலைவில் தனுஷ்கோடியின் சிதிலமடைந்த கட்டிடங்கள் தோன்ற ஆர்வத்துடன் அதைப்பார்க்க நடக்க ஆரம்பித்தோம்.

“கடல் இந்த ரெண்டு கடலுக்கும் என்ன பேரு?”

“அலையோட இருக்குறது ஆண் கடல்; அலை இல்லாம குட்டை மாதிரி இருக்குறது பெண் கடல்”

“டேய், நீயும் மொக்கைய போடாத டா!”

“இந்த ஊர்ல அப்படிதான் சொல்லுவாங்க. நாம இப்ப நடக்கற கடல் இந்தியப் பெருங்கடல். அந்தப்பக்கம் இருக்குறது வங்காள விரிகுடா”

“அலையோட இருக்குறது குமரிக் கடல், அலை இல்லாம இருக்குறது குணக் கடல். அப்படித்தான...”

“டேய், நீ அதுக்குள்ளே வானவல்லிக்கு போயிட்டியா?” என முறைத்தான் கடல்.

மீண்டும் பல வேடிக்கை கதைகளைப் பேசியபடியே தனுஷ்கோடியை அடைந்தோம். அழகான கடற்கரை. ஆனால், வளர்ச்சி என்பதன் சுவடே காணப்படாத ஊர் அது. அதைப் பார்த்தபிறகு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு. இரண்டு கடல்களுக்கு இடையில் காணப்படும் ஊற்றுகளே அவர்களின் குடிநீர் ஆதாரம், மின்சாரம் இல்லை. போக்குவரத்து இல்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் அந்த வேன் மட்டுமே! அங்கு நின்று போட்டோ எடுத்துக்கொண்ட பிறகு, “வெற்றி இன்னும் சில கி.மீ தூரம் நடந்த அரிச்சல் முனை வரும். அங்க போகலாமா? என வினவினான் கடற்கரை துரைராஜ்.

“அரிச்சல் முனையா? அப்படின்னா?”

அங்குதான் ஆண் கடலும் பெண் கடலும் சேரும் இடம் இருக்கு. நல்லாருக்கும். வா போகலாம்!”

“சரி, அந்த ரொமாண்டிக்கான எடத்தையும் பார்த்துடுவோம்” என நான் கூற இருவரும் நடக்கத் தொடங்கினோம்.

கடற்கரையில் கிடைத்த அனைத்து பொருள்களையும் எடுத்து எறிந்துகொண்டு விளையாண்டுக்கொண்டு வந்தேன். அப்போது துரை ஒரு பியூஸ் போன டியூப் லைட் ஒன்றை எடுத்தான். “இங்க குடு அதை நான் அடிக்கறேன்” என்று வாங்கி கீழே கிடந்த இன்னொரு குண்டு பல்பைத் தூக்கிப்போட்டு கையில் இருந்த டியூப் லைட்டால் அடிக்க சிதறியது இரண்டு பல்புகளும்.

கடைசியில் என் கையில் ஒருசாண் அளவிற்கு உடைந்த டியூப் லைட் எஞ்சியிருந்தது. அதை மண்ணில் புதைக்கலாம் என்று எண்ணி வேகமாக மணலில் குத்தினேன். அந்த லைட் உடைந்து கட்டை விரலை மாங்காயாக கிழித்திருந்தது. ரெத்தம் பெருக்கெடுத்து மணலில் சிந்தத் தொடங்கியது. கீழே கிடந்த மணலை அள்ளி என் காயத்தில் போட்டு ரெத்தப் பெருக்கை நிறுத்த முயன்றேன். மணல் கையில் போட்டதும் குருதி வழிவது நின்றிருந்தது.. உடனே கடல், “கடலில் கையை நனைடா. உன் நாவல்ல செங்குவீரன் மட்டும் காயத்திற்கு மருந்து போடாம கடல் தண்ணிய எறச்சி ஊத்திக்குவான்னு சொன்னீல. நீயும் கையை நனை” என அவன் கூற நான் உடனே அலையில் கையை நனைத்தேன். உப்புத்தண்ணீர் காயத்தில் பட சுர்ரென்று எரிய கையை எடுத்துக்கொண்டேன்

“வெற்றி, உப்புத்தண்ணீர் சிறந்த கிருமி நாசினி” என்றவன் சிரித்தபடியே, “நீ வானவல்லில சொன்ன அதே டைலாக் தாண்டா” என அவன் கூற நானும் எரிச்சலை மறந்து சிரித்துவிட்டேன்.

இருவரும் அரிச்சல் முனையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். நிலப் பரப்பு சுருங்கிக்கொண்டே வந்தது. இருபுறமும் கடல். திடீரென்று என் காதில், “யாராவது இருக்கீங்களா? என்ற பெண்ணின் குரல் ஒலித்தது.

உடனே நான் கடலிடம், “யாரோ ஒரு பொண்ணு ஆபத்துல இருக்காங்க! சீக்கிரம் வாடா!” எனப் பதறினேன் நான்.

“டேய், கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் இங்க இப்ப நாம ரெண்டு பேரும் மட்டும்தான் இருக்கோம்.”

மீண்டும், “காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்ற குரல் தொலைவிலிருந்து எழ நான் குரல் வந்த திசையை நோக்கி, “டேய், யாரோ பொண்ணு காப்பாத்துங்கன்னு சத்தம் போடுது, சீக்கிரம் வாடா” எனக்கூறிவிட்டு வேகமாக ஓட கடற்கரை துரை என் பின்னாலேயே ஓடி வந்தான்.

குரல் வந்த இடத்தில் யாரையும் காணவில்லை. மாறாக ஆண் கடலும், பெண் கடலும் கூடும் அந்தப் பேரின்ப இரைச்சல் சத்தமே காணப்பட்டது. அதிர்ச்சியில் வியர்க்க நின்றிருந்தேன் நான். “டேய் வெற்றி மண்டையா... இதுதான் அரிச்சல் முனை. இதுதான் இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் கூடுற இடம். இங்க எறங்கி இதுவரைக்கும் யாருமே பொழச்சது இல்ல. அவ்ளோ வேகமா அலை அடிக்கும். சுழி இருக்கும். எறங்குனா சங்குதான்”

“ஆமாம். ரெண்டு கடலு ரொமாண்டிக்கா சேருற இடத்துல கால உட்டா அது சும்மா விடுமா?” என நான் விளையாட்டுக்கு கேட்க சிரித்துவிட்டான் அவன். அவன் என்ன அர்த்தத்தை கொண்டானோ?

அவனுக்கு சிரிப்பு வந்தாலும் எனக்கு வரவில்லை. ’காப்பாற்றுங்கள்’ என நன் கேட்ட குரல் உண்மை. அப்படியெனில் நாங்கள் இருவரும் வருவதற்குள் அவள் கடலில் மூழ்கியிருப்பாளோ? என்ற அச்சமும் எனக்குள் எழ அங்கேயே அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டேன் நான்.

“டேய், இங்க பாரு நாம வந்த அடி மட்டும்தான் இங்க புழங்கியிருக்கு. யாருமே இங்க வரல. வீணா மனச குழப்பிக்காத!”

“ம்ம்ம்... சரிடா” என நான் கூற, “இனி இங்க இருக்க வேண்டாம். வா கிளம்புவோம்” மீண்டும் இருவரும் அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நடக்க ஆரம்பித்தோம்.

நாங்கள் நடக்கும் போது எங்களுக்கு முன்னால் ஒரு பெண் நடந்து சென்றாள். எப்படியும் அவளது வயது இருபதைத் தாண்டாது. மரகத பச்சைக் கலரில் சுடி, கடலலையில் துணி பட்டும் படாமலும் நனைத்திருந்ததால் அவளது மேனி ஆங்காங்கு இலைமறைக் கையாய் தெரியவே செய்தது.

“டேய் கடல்...”

“சொல்லு வெற்றி!”

“நமக்கு முன்னாடி போற பொண்ணு ஒ.கேவா?”

“யாருடா?”

“நமக்கு முன்னாடி ஒருத்தி போறாளே!”

“டேய்... வாயமூடிகிட்டு வாடா, கடுப்பேத்தாம!”

“ம்ம்ம்” மட்டும் நான் கூறிக்கொண்டு எங்களுக்கு முன் நடந்த அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டு நடந்தேன். களைப்புத் தெரியவேயில்லை. கடைசி வரை திரும்புவாள் என்று எதிர்பார்த்தேன். அவளது பின்னழகைக் கண்டு முகம் எப்படியெல்லாம் இருக்கும் என நினைத்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தேன். தனுஷ்கோடி வந்து வேன் பிடித்து பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து ராமேசுவரம் கடற்கரை துரையின் வீட்டை அடைந்து மாலை மூன்று மணிக்கு இருவரும் காலை உணவை உண்டோம்.

இருவரும் தனி அறையில் அமர்ந்திருக்க கடற்கரை சுஜாதா’வின் விஞ்ஞான சிறுகதைத் தொகுப்பைப் படிக்க நான் படுத்துக்கொண்டேன். நல்ல உறக்கம் திடீரென்று உறக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்து அமர்ந்துகொண்டேன் நான். ஒரே படபடப்பு. மின் விசிறி முழு வேகத்தில் ஓட என் உடல் வியர்த்து ஆடை முழுவதும் நனைந்திருந்தது.

அதைக்கண்டு பதறியவன், “என்னடா ஆச்சு?” என்றான்.

“ஒன்னும் இல்ல கனவுடா” என்றேன் நான்.

“கனவா?” சந்தேகத்துடன் வினவினான் துரை.

“ஆமாம்டா”

“என்ன கனவு?”

“ரேபிங் ட்ரீம்டா?”

“யார டா?” சிரித்துவிட்டான் அவன்.

“டேய். நான் அப்பாவிடா. என்னை யாரோ ஒரு பொண்ணு....”

“டேய்” என்றவாறே பலவாறு சிரித்தான்.

“நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்.”

“அந்தப் பொண்ணு யாருடா?”

“அது பொண்ணு'ன்னுதான் உணர முடிஞ்சிது. மத்தபடி எதுவுமே தெரியல!”

“நல்லா யோசிடா?”

“நாம அரிச்சல் முனைலேருந்து நடந்தப்ப நமக்கு முன்னால ஒரு பொண்ணு நடந்தாள்ள, அவதான்னு தோணுது!. இதுவரைக்கும் இப்படியொரு கனவு கண்டதே இல்ல. என்னைப் பாரு!” எனக் கூறியபடியே என் கையை போர்வையிலிருந்து நீட்டினேன். என் கைக் நடுங்கிக்கொண்டிருந்தது.

“எந்த பொண்ணுடா?”

“அதான், நமக்கு முன்னாடி ஒரு பொண்ணு நடந்து போனாளே!. நீகூட கடுப்ப கிளப்பாதன்னு சொன்னீல...” என நான் கூறிக்கொண்டிருந்த போது பதறிவிட்டான் கடல்.

“டேய் மண்டையா, நீ கைகாட்டுன எடத்துல எந்தப் பொண்ணுமே இல்ல. அதனாலதான் நான் கடுப்ப கெளப்பாத வான்னு சொன்னேன்”

“நான் பார்த்தேன் டா.”

“டேய்... லூசு” என்றவாறே தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

‘நான் கண்டது பொய்யா அல்லது அவன் காணாதது உண்மையா’ என அறியாத நான் என்ன கூறுவதென்றுத் தெரியாமல் திகைத்து அமைதியாக வியர்வையுடன் அமர்ந்திருந்தேன்.

“வெற்றி.”

“சொல்லு கடல்?”

“அந்த குடிகாரர் சொன்னாரே உனக்கு ஞாபகம் இருக்கா?”

“என்ன?”

“அவரு சொன்னார்ல... வயசுப் பசங்களோட ரெத்தக்காவு வாங்கும்; அப்புறம் அவுங்களுக்கு மட்டும் கேட்கற மாதிரி பேசும், அப்புறம் அவுங்க பார்வைக்கு மட்டும் தெரியும். அப்புறம்....” எனக் கூறிக்கொண்டே என் கையிலிருந்த காயத்தை சுட்டிக் காட்டினான்.

“அப்புறம்?”

“அந்தப் பலான கனவு?”

“டேய்... நீ என்னதாண்டா சொல்ல வர?”

“உன்னை பேய் புடிக்கப் போகுதுடா?”

“விளையாடதடா” எனக் கூறியபடியே பார்வையை உயர்த்தினேன். துரைக்குப் பின்னால் அதே மரகதப் பச்சை வண்ண சுடிதாரில் கடற்கரையில் நான் பார்த்த அதே பெண் நின்றுகொண்டு என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பில் மந்தகாசப் புன்னகை மோகனத்துடன் வழிந்துகொண்டிருந்தது. அவளது பின்னழகைவிட அவளது முகம் இன்னும் அழகாகத்தான் இருந்தது!
சி.வெற்றிவேல்....
சாளையக்குறிச்சி...

பி.கு:
ஆவி டாக்கிஸ்'காகஎழுதப்பட்ட கதை இது. பெங்களூரில் சிக்கிக்கொண்டு விட்டதால் அனுப்ப இயலவில்லை. ஆவி அண்ணா... உங்களுக்கு கதை அனுப்ப இயலாமைக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



12 comments:

  1. வணக்கம்
    தம்பி..

    கதையை படிக்கும் போது சிரிப்பு பொங்கியது... ம்ம்....ம்ம்.. எம்புட்டு ஆசை... அந்த தேவதையின் முகம் அடிக்கடி கனவில் வருமே தம்பி..... எல்லாம் நல்லதாக நடக்கட்டும் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நான் கண்டது பொய்யா அல்லது அவன் காணாதது உண்மையா’ //

    அருமையான வரிகள்..
    அரிச்சல் முனை தேவதை ங்கற டைட்டில் பொருத்தமா இருக்குமோ? ;)


    அடுத்த முறை கரெக்ட் டைமுக்கு அனுப்பிடு தம்பி.. :)

    ReplyDelete
  3. //அடுத்த முறை கரெக்ட் டைமுக்கு அனுப்பிடு தம்பி..// என்னது அடுத்தமுறையா :-)

    ஆவி குறிப்பிட்ட அந்த வரிகள் என்னையும் வெகுவாக கவர்ந்த ஒன்று.

    பரிசுப் போட்டிக்கு அனுப்பி இருந்திருக்கலாம்...

    தனுஸ்கோடி ஆயிரம் வருடத்திற்கு பின்தங்கிய, வளர்ச்சியையே கண்டிராத என்ற வசனம் இரு இடங்களில் வருகிறது. கதை என்பதால் எதுவும் கூறவில்லை, அது கதாசிரியரின் போக்கு. ஒருகால் இது கட்டுரையாக இருந்து இவ்வரிகள் இடம் பெற்றிருக்குமாயின் - தனுஸ்கோடி ஒருகாலத்தில் அதாவது புயலுக்கு முன் இந்தியாவிலேயே முக்கியமான, போக்குவரத்து நிறைந்த துறைமுக நகரம்...

    விஜயன் - அடுத்தமுறை நாமும் நடந்து சென்றே ஆகா வேண்டும்... பேய் - அது கவலை இல்லை ஆவி கூடவே வெற்றி இருக்க பயமேன் :-)

    ReplyDelete
    Replies
    1. டீல் , ஆனால் 8 கி.மீ. நடக்க உங்களுக்கு சம்மதமா !! ;) ஆவி ப்ரோ நடப்பாரா !!

      Delete
  4. தம்பி எதற்கும் ஜாக்கிரதையா இரு...!

    ReplyDelete
  5. கட்டாயமாக !!

    ReplyDelete
  6. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    ReplyDelete
  7. நான் கண்டது பொய்யா அல்லது அவன் காணாதது உண்மையா// அழகான வரிகள் வெற்றி! அப்படியே னீங்கள் சென்று வந்ததைத்தான் எழுதி யிருக்கின்றீர்கள் என்று எண்ணினோம்...ஹை னல்லாருந்துச்சு கதை...சே அனுப்பிருந்துருக்கலாமே வெற்றி! இப்படி லேட் பண்ணி அனுப்பாம போயிட்டீங்களே....

    உங்கள் விவரணம் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவலையும், ஆர்வத்தையும் தூண்டியிருக்கின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை. - துளசி, கீதா.

    கீதா: வெற்றி நானும் எனது மகனும் தனுஷ் கோடி போவதாக இருந்தோம். அங்கு டைவிங்க், நீர்மூழ்கி போட்டில் சென்று கடலுக்கடியில் பல பொக்கிஷங்களைப் பார்க்கலாம் என்று சுற்றுலாக் குறிப்பு சில வருடங்களுக்கு முன் ஹிந்துவில் வாசித்த நினைவு. எனவே திட்டம் இருந்தது. மட்டுமல்ல அந்த அரிச்சல் முனை வரை நடந்து செல்லவும்....பின்னர் அது சாத்தியப்படாமல் போய்விட்டது. இப்போது உங்கள் இந்தக் கதை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது...ம்ம்ம்

    ReplyDelete
  8. அந்த மரகதப் பச்சைகலர் ட்ரெஸ் போட்ட பொண்ணு இன்னமும் கனவுல வருதா?!! வந்துச்சுனா அந்த மப்பு ஆளு சொன்னது உண்மையோ..அஹஹஹஹ் ஆவிகிட்ட ஐடியா கேளுங்க....நம்ம நண்பர் ஆவிங்க...

    ReplyDelete
  9. அருமையான கதை வெற்றி. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. Anonymous4:59:00 AM

    Is merit casino a good idea? | XN - XN
    Is merit casino a good idea? | XN - XN 메리트카지노 - XN is an online casino that is licensed in Australia with a licence issued by the 메리트카지노총판 Government of the หาเงินออนไลน์ United

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...