Jan 20, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் மூன்று மணி நேரம்...

வானவல்லி எழுதிய பிறகு எடிட்டர் சுந்தர் அண்ணன், "வெற்றி வானவல்லிய புத்தகக் காட்சிக்கு வெளியிடலாம்னு வானதி'ல சொல்லிட்டாங்க"ன்னு சொல்லும் வரை சென்னையில் புத்தகக் காட்சி என்ற ஒன்று நடக்கும் என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன் எந்தவொரு புத்தகக் காட்சிக்கும் நான் சென்றது இல்லை. எனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது. வாசிக்க வேண்டும் எனும் ஆவல் மிகுந்தால் அம்மா துணி எடுத்துக்கண்ணு கொடுக்கற முன்னூறு, நானூறு ரூபாய எடுத்துகிட்டு பக்கத்துல இருக்கற புத்தகக் கடைக்குப் போயிடுவேன். அங்கப் போயும் எனக்கு புத்தகங்கள வாங்கத் தெரியாது.
கண்ணுல எது படுதோ அந்தப் புத்தகத்தை வாங்கிவிடுவேன். அப்படி நான் வாங்கிய ஒரு புத்தகத்தின் பெயர், 'பிளீஸ் இந்தப் புத்தகத்த யாரும் வாங்காதீங்க' (அப்போ என்னோட வாசிப்பு ஞானம் அவ்வளவுதான்). அதன் பிறகு கடைக்குச் செல்லும்போதெல்லாம் உலகத் தலைவர்கள் பெயரில் வெளிவரும் புத்தகங்களாகப் பார்த்து வாங்கிவிடுவேன். உ.தா பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய சிம்ம சொப்பனம், பிரபாகரன், சே இன்னும் நிறைய தலைவர்களின் புத்தகங்களைப் பற்றிக் கூறலாம். அதிலும் தமிழீழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகங்களை ஏராளமாக வாங்கிப் படித்திருக்கிறேன்.


இப்படி எனது வாசிப்புகள் சென்று கொண்டிருந்த வேளையில் தான் கரை சேரா அலை அரசன் அண்ணனுடைய நட்பு எனது வாசிப்புப் பாதையை ஓரளவு விசாலமாக மாற்றியது. அதன் பிறகு கடற்கரை விஜயன் துரை ராஜின் நட்பு என் வாசிப்பையே முற்றிலும் மாற்றியது என்றே கூறலாம். அரசன் மற்றும் விஜயன் துரைராஜின் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கிருக்கும் புத்தகங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். ஏனென்றால் இதுவரை புத்தகங்களை நூலகத்தில் மட்டுமே மொத்தமாகப் பார்த்திருக்கிறேன். தனிப்பட யார் வீட்டிலும் பார்த்தது இல்லை.

மற்ற படி எனது வாசிப்பு அனுபவங்கள் எல்லாம் எனது லாப்டாப்பில் தான். கல்கியின் வரலாற்றுப் புதினங்கள், சாண்டில்யனின் வரலாற்றுப் புதினங்கள், அகிலனின் படைப்புகள் என நான் வாசித்த பெரும் புதினங்கள் அனைத்தும் பல்கலைக்கழக வைபை இணைப்பின் மூலம் தரவிறக்கம் செய்து வாசித்தவையே!

வேலைக்குச் சேர்ந்ததும் முதல் காரியமாக செய்த வேலை 'இரவின் புன்னகை' எழுத ஆரம்பித்தது தான். அதன் பிறகுதான் எழுத்தின் போக்கு மெல்ல மெல்ல மாறி கடைசியில் வானவல்லியில் வந்து நின்றது. இரவின் புன்னகையில் எழுத ஆரம்பத்த தொடக்கத்திலேயே 'வானவல்லி'யை பிளாக்கில் வாசித்துவிட்டு என்னைத் தொடர்புகொண்டு 'புத்தகத்தை வெளியிடுவதைப் பற்றி கவலைப்படாதீங்க வெற்றி. நல்லபடியா எழுதி முடிங்க. சென்னை புத்தகக் காட்சிக்கு ஜனவரி'ல வெளியாகர மாதிரி வேகமா எழுதுங்க' எனக் கூறியிருந்தார் சுந்தர் அண்ணன். அதன் பிறகு என் எதிர்பார்ப்புகள் அனைத்துமே புத்தகத் திருவிழாவை நோக்கியதாகவே இருந்தது.

வானவல்லி முதல் பாகத்தை பத்து மாதங்கள் கடந்து செப்டம்பரில் இறுதியில் எழுதி முடித்தேன். வாசித்துப் புரூப் ரீடிங்'கை முடித்தவர், "நவம்பர்ல வானவல்லி முதல் பாகம்  வெளியாகிடும். இரண்டாவது பாகத்தை கேட்கறாங்க. சீக்கிரம் எழுதி முடிங்க. ரெண்டு பாகத்தை புத்தகக் காட்சிக்கு வெளியாகர மாதிரி தயார் பண்ணுங்க!" என்றார் சுந்தர் அண்ணன்.

எனக்கு பெரும் மகிழ்ச்சி. உற்சாகம் அதிகமாக எழ முதல் பாகத்தைப் பத்து மாதங்கள் எழுதியவன் அடுத்த பாகத்தை கிட்டத்தட்ட நாற்பது நாளில் எழுதி முடித்திருந்தேன். வானதி பதிப்பகத்திலும் படித்துவிட்டு வெளியிட சம்மதித்திருந்தார்கள்.

இந்தச் சூழலில் தான் ஒரு நாள், "வெற்றி, புத்தகத்து வேலை தொடங்கிடுச்சி. ரெண்டு பாகமும் சென்னை புத்தகக் காட்சிக்கு ரெடி ஆகிடும். வானதி'ல வெளியாகர பத்து புத்தகத்தோட இந்த வருஷம் உங்களுதும் வெளியாகுது. ஆக்டர் கமல்' சார்கிட்ட தேதி கேட்ருக்காங்க. அவரு தேதி கொடுத்ததும் உங்களுக்கு தகவல் சொல்லறேன். பத்திரிக்கை அனுப்பறேன்" என்றார். உற்சாகம் கரை புரளும் என்பார்களே அப்படித்தான். நெருங்கிய நண்பர்கள் அனைவர்க்கும் தகவலைத் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்தியில் சாயும் பொழுதும், விடியும் பொழுதும் வானவல்லி புத்தக வெளியீட்டைப் பற்றியதாகவே இருந்தது. ஆவலோடு புத்தகக் காட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரே நேரத்துல ரெண்டு புத்தகம் வெளியாகப் போகுது'ங்கற சந்தோசம் தாங்க முடியல. சந்தோசம்னு சொல்லுறத விட பெருமைன்னு சொல்லலாம். அதுவும் முதல் புத்தகம்!

டிசம்பர் கடைசி வாரத்துல ஒரு நாள் பேசிய சுந்தர் அண்ணன், "வெற்றி உங்க புத்தகம் பிப்ரவரி'ல தான் வெளியாகுது. சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகல." என்றபோது என் எதிர்பார்ப்பிற்கு புள் ஸ்டாப் வைக்கப்பட்டது.

என் புத்தகம் வெளியாகல'ன்னு தெரிஞ்சதும் உற்சாகம் முழுக்க ஓடிப்போச்சு! ஒரு பெரிய எதிர்பாராத ஏமாற்றம் இது. இதே வருசத்துலதான் வேலை விஷயமாகவும் பெருத்த ஏமாற்றம் ஒன்றைச் சந்தித்திருந்தேன். இது இரண்டாவது.

இந்த மாதத்தில் கிராமத்தில் என் நாட்களை காவல் காத்துக்கொண்டு குரங்குகளுடன் கழித்துக்கொண்டிருந்தேன். இந்த நிலையில் தான் சென்னைக்கு இன்டர்வியூ ஒன்றை அட்டென்ட் செய்ய செல்லும்போது அரசன் அண்ணா ரூமில் தங்க நேர்ந்தது. புத்தகக் காட்சித் தொடங்கிய அன்று காலையில் இண்டர்வியூ'வை வெற்றிகரமாக முடித்துவிட்டு அன்று மாலையில் ஆவி'யுடன் புத்தகக் காட்சிக்கு செல்ல நேர்ந்தது எதிர்பாராத விபத்து. அரசன் அண்ணா ரூம் சாவி ஆவி கொண்டுகிட்டு போயிட்டாரு. சாவி இருந்திருந்தா நான் புத்தகக் காட்சிக்கு சென்றிருக்க மாட்டேன். 

ஏதோ அன்று மனதில் ஒரு பெரும் இறுக்கம் சேர்ந்து கொண்டது. வானவல்லி இதே அரங்கில் வெளியாவதாக நினைத்து மகிழ்ந்த மனம் இந்த வெறுமையை ஏற்க மறுக்க எனக்கும் அதற்குமான போராட்டம் கணத்திற்கு கணம் அதிகரிக்கத் தொடங்கியது. உள்ளே செல்லவே விருப்பம் இல்லாமலே இருந்தது. ஒரு வழியாக ஆவியுடன் சென்றிருந்தேன். எங்களுடன் சீனு அவரது நண்பர் சூர்யா பிறகு ஸ்கூல் பையன் சரவணன் அண்ணாவும் எங்களுடன் இணைந்துகொண்டார்.

காலையில் அட்டென்ட் செய்த இன்டர்வியூவில் பெங்களூரில் வேலை என்றிருந்தார்கள். முதல் மாதத்தை நானே சமாளிக்க வேண்டிய நிலை. சில நூறு ரூபாய் நோட்டுகளே பாக்கெட்டில். இந்த நிலையில் தான் புத்தகக் காட்சி அரங்கத்திற்குள் நுழைந்தேன். முதல் முறையாக அவ்வளவு புத்தகங்களை ஒரே இடத்தில் கண்ட பிரமிப்பு. ஆரம்பத்தில் நுழைந்த அரங்கத்தில் காணப்பட்ட புத்தங்களை ஆவல் ஆவலோடு புரட்டிப் பார்த்தேன். புரட்டும் புத்தகங்கள் அனைத்தையும் வாங்க வேண்டும் போன்ற எண்ணம். பைக்குள் கை விட்டேன். 'இருக்கும் சில நோட்டுகளை புத்தகங்களாக மாற்றிக்கொண்டாள் பெங்களூருக்கு நடந்துதாண்டா போகணும் வெற்றி' என்று ஏதோ ஒரு அசரிரீ எச்சரிக்க ஆர்வத்தை அடக்கிக்கொண்டேன். 

திருவிழாவில் கண்களில் கண்ட அனைத்துப் பொருள்களையும் வாங்க வேண்டும் என்று குழந்தை அடம் பிடிக்கும் அல்லவா? அதே நிலையில் தான் என் மனம் என்னுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அதை வாங்கிக் கொடு என்று அடம்பிடிக்கும் குழந்தையை படாதபாடுபட்டு அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லும் தந்தையைப் போலவே மனதை அடக்கிக்கொண்டு சீனு, ஆவி, சூர்யா அண்ணாக்களுடன் நடந்துகொண்டிருந்தேன். என்னைப் பார்க்க வைத்துவிட்டு புத்தங்களாக வாங்கிக் குவித்த ஆவியையும், சீனுவையும் கண்டபோது எனக்குள் எழுந்த கோபத்தை இங்கு சொல்ல இயலாது. அவ்வளவு கோபம்...

வானவல்லி'யின் ஏமாற்றம், புத்தகங்கள் நிறைந்த அரங்கிற்குள் வெறுங்கையுடன் திரிந்த நிலை. ஜென் நிலை' என்பார்களே இப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டேன் நான்...



இந்த நிலையில் தான் புத்தகங்களை தேடித் தேடி வாங்கிக்கொண்டிருந்த சீனு அண்ணா'விடம், "அண்ணா எனக்கும் ஒரு புத்தகம் வாங்கிக்கொடுங்க" என்றேன் விளையாட்டாக. பிறகு அனைத்து அரங்குகளையும் சுற்றிவிட்டு வெளியே கிளம்பிக்கொண்டிருந்தோம்.   அப்போது, "வெற்றி புத்தகம் கேட்டீள! உன் கோட்டா 200 ரூபாய் எந்தப் புத்தகம் வாங்கிக்கற?" எனக் கேட்டார் சீனு.

எனக்கு அதிர்ச்சி கலந்த இன்பம்...

திருவிழாவில் 'இது வேணும் அது வேணும்' என்று கேட்டு அடம்பிடித்த பிறகு எதுவும் கிடைக்காது எனும் நிலையில் சோர்ந்து அமர்ந்திருக்கும் வேளையில் மாமா வந்து தேவை என்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பார் அல்லவா... அப்படித்தான் சீனு அண்ணா "சு.வெங்கடேசன் எழுதி சாகித்ய அகாடமி விருதினைப் பெற்ற காவல் கோட்டம்" நூலை வாங்கிக் கொடுத்தார்.

அரங்கிற்குள் நுழைபவர்கள் அனைவரும் பை பையாக சுமந்து செல்ல நான் மட்டும் வெறும் கையேடு சுமந்து செல்லும் நிலை வந்துவிடுமோ என எண்ணியிருந்த வேளையில் காவல் கோட்டம் பெரும் மகிழ்ச்சியை அளித்துவிட்டுச் சென்றது. பெரும் ஏமாற்றத்துடன் கடக்க வேண்டிய புத்தகக் கண்காட்சியை பெரும் மகிழ்ச்சியாக மாற்றியவர் "ஷைனிங் ஸ்டார் சீனு" 

நன்றி அண்ணா....


அதிலும் சீனு அண்ணா புத்தகத்தில் எழுதிக் கொடுத்த வாக்கியம் 'மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வானவல்லி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகாத குறையை நீக்கிவிட்டுச் சென்றது...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

16 comments:

  1. ஷைனிங் ஸ்டாருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்....

      தயவு செய்து இடுகையை முழுவதும் வாசித்துவிட்டு பிறகு தங்கள் வாழ்த்துகளைக் கூறவும்!

      Delete
  2. உங்கள் புத்தகம் விரைவில் வெளி வர வாழ்த்துகள் வெற்றிவேல்.....

    முதல் படம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      சீனு அண்ணா பிளாக்ல அந்தப் படத்த பார்த்திருப்பீங்க!

      Delete
  3. வணக்கம்
    எடுத்த காரியம் வெல்ல எனது வாழ்த்துக்கள் தம்பி.... நீண்ட நாள் வலைப்பக்கம் வந்து...

    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இணைய இணைப்பு பிரச்சனை. ஆதலால் தான் இந்தப்பக்கம் தலைகாட்ட இயலவில்லை.

      வாழ்த்துகளுக்கு நன்றி...

      Delete
  4. திருவிழாவில் கண்களில் கண்ட அனைத்துப் பொருள்களையும் வாங்க வேண்டும் என்று குழந்தை அடம் பிடிக்கும் அல்லவா? அதே நிலையில் தான் என் மனம் என்னுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அதை வாங்கிக் கொடு என்று அடம்பிடிக்கும் குழந்தையை படாதபாடுபட்டு அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லும் தந்தையைப் போலவே மனதை அடக்கிக்கொண்டு//

    வெற்றி நானும் கூட இம்முறை இதே மாதிரிதான் கண்காட்சிக்குள் அடியெடுத்து வைத்தேன். இதே மன னிலை..கை கொடுங்கள்....--கீதா

    சத்தியமாக மனம் கனத்து கண்ணில் நீர் வந்தது உண்மை வெற்றி. தங்கள் புத்தகம், வானவில்லி விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.வெளிவரும் போது தயவு செய்து எங்களை மறந்து விடாதீர்கள் அறிவியுங்கள்.

    சீனு வாழ்க. அவர் கொடுத்த அதே புத்தகம் எனக்கு உறவினர் ஒருவர் வாசிக்கக் கொடுத்துள்ளார். இன்னொரு புறம் மாதொருபாகன் மலர்தரு மது அவர்களின் வலைத்தளத்திலிருந்து தரவிரக்கம் செய்து போய்கொண்டிருக்கின்றது....--கீதா

    வாழ்த்துக்கள் வெற்றி தங்கள் கனவு எல்லாம் நிறைவேற....

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா...

      பதிவினைப் படித்துவிட்டு போனில் பேசியது மிகவும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக்க நன்றி...

      நிச்சயம் தங்களையும் அழைக்கின்றேன்...

      Delete
  5. தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டதே நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா... இணையப் பிரச்சனை. ஆதலால்தான் இங்கு அதிகம் தலைகாட்ட இயலவில்லை...

      Delete
  6. வெற்றி ! நான் அப்டி , நான் இப்டின்னு எழுதாம, இதுதான் நான் என எழுதிய விதம் really touching!!! you know, என் தம்பிக்கு சொல்வதை உங்களுக்கும் சொல்கிறேன். "நிலகரி எளிதாய் கிடைக்கும், வைரத்தை காத்திருந்துதான் பெறவேண்டும்" உங்கள் வானவல்லி என்னும் வைரம் கிடைக்க நாங்கள் இன்னும் கொஞ்சம் காத்திருக்கதானே வேண்டும். பின்னொரு நாளில் தமிழ் எழுத்துலகம் தவறாது முன்மொழியக் கூடிய பெயராக உங்கள் பெயர் இருக்கும். பெங்குளூரு சென்ற பிறகு தொடர்ந்து பதிவு எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அக்கா....

      இனி தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன்.

      Delete
  7. //வானதி'ல வெளியாகர பத்து புத்தகத்தோட இந்த வருஷம் உங்களுதும் வெளியாகுது. ஆக்டர் கமல்' சார்கிட்ட தேதி கேட்ருக்காங்க. அவரு தேதி கொடுத்ததும் உங்களுக்கு தகவல் சொல்லறேன். பத்திரிக்கை அனுப்பறேன்" என்றார்//

    இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்போது எவ்வளவு பெரிய எழுத்தாளரா இருந்தாலும் ஒரு திகைப்பு வரத்தான் செய்யும் வெற்றி.... கண்டிப்பாக உன் புத்தகமும் வெளியாகி சக்கை போடு போடும்.... என்னை அழைக்க மறக்கவேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. தங்களை எப்படி அண்ணா அழைக்க மறுப்பேன். நானும் நம்பிக்கையுடன்தான் காத்திருக்கிறேன்.

      நன்றி...

      Delete
  8. வாழ்த்துக்கள் வெற்றி

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...