Dec 1, 2015

தாவணி

வழக்கமாகப் புலரும் பொழுதைப் போன்று அன்று இல்லை. காலையில் எழும்போதே பெரும் உற்சாகமாக எழுந்தேன். காலையிலேயே துயில் களைந்து எழுந்துவிட்ட என்னை என் தம்பியும், அம்மாவும் விசித்திரமாக பார்த்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. விடுமுறைக்கு வீட்டிற்கு எப்போது வந்தாலும் அப்போதெல்லாம் ஒன்பது மணிக்கு எழுந்தே பழக்கப்பட்டவன் நான். என்னை எழுப்ப முயற்சித்துவிட்டு தம்பி தோற்று பள்ளிக்கூடம் சென்றுவிடுவான். அம்மா பருத்திக்காட்டுக்கு சென்றுவிடுவார். அவர்கள் பிறகே விழிப்பேன். கல்லூரியில் சேர்ந்த மூன்று வருடங்களாக நடந்துகொண்டிருப்பது இதுதான். நேற்று தீபாவளி. நேற்று கூட எட்டு மணிக்குத்தான் எழுந்தேன். அப்படிப்பட்ட சோம்பேறி நான். ஆனால், இன்று காலையில் ஆறு மணிக்கு முன்னரே கண் விழித்துக்கொண்டேன். மீண்டும் உறக்கத்தில் மூழ்க போர்வையை இழுத்துப் போர்த்தினேன். ஏனோ உறக்கமே வரவில்லை. படுக்கை பிடிக்காமல் எழுந்து அமர்ந்தேன். அப்போது தான் என்னை தம்பியும், அம்மாவும் விசித்திரமாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.

அவர்களிடம், “அம்மா.. சுடுதண்ணி போடு...” எனக் கூறிவிட்டு கட்டிலிலிருந்து எழுந்தேன்.

“வெளியே எங்கியாவது போறியா என்ன?”

“ம்ம்ம்...”

“..........”

“பொன்பரப்பி வரைக்கும் போறேன்...”

“ஏதாவது வேலையா?”

“எதுவும் இல்லம்மா... ப்ரண்ட பார்க்கப் போறேன்...”

“நீ மட்டும் பொங்கல் தீபாவளின்னு எப்ப வந்தாலும் கெளம்பி போயிடு. உன்னப் பார்க்க யாராவது இதுவரைக்கும் வந்துருக்காங்களா?” என அம்மா சற்றே கோபத்துடன் திருப்பிக்கேட்டார்.

‘ப்ரண்ட் பையனா இருந்தா கூப்டதும் வந்துடுவான். பொண்ண எப்டிம்மா அவ்ளோ தூரம் கெளம்பி வர சொல்லுவேன்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே, “நான் போனா எல்லாத்தையும் பார்த்துட்டு வந்துடுவேன்ல. என்ன ஓரத்துடன் பார்க்க அத்தனைப் பெரும் கெளம்பி வரணுமா...” என அவசர அவசரமாகப் பதிலளித்துவிட்டு அதற்கு மேல் அங்கு நிற்காமல் உடனே மேற்கு நோக்கி ஓடையை நோக்கிக் கிளம்பிச்சென்றுவிட்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மணி ஒன்பது இருக்கும். மருவத்தூர் கடந்து பொன்பரப்பியை நோக்கி எனது ஹோண்டா பறந்துகொண்டிருந்தது. வேகம் கிட்டத்தட்ட என்பதை நெருங்கியிருந்தது. எப்போதும் இந்த வேகத்தில் நான் வண்டி ஓட்டுவதில்லை. ஆனால், மனதில் தோன்றியிருந்த அதீத கிளர்ச்சியினாலும், உற்சாகத்தினாலும் வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்க முறுக்க வண்டி பறந்துகொண்டிருந்தது. அதே வேகத்தில் செல்ல அடுத்த சில நிமிடங்களில் பொன்குடிக்காடு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை அடைந்திருந்தேன்.

வண்டியை நிறுத்தி விடுதியை நோக்கினேன். தீபாவளி முடிந்த அடுத்த நாள் என்பதால் விடுதி பூட்டப்பட்டிருந்தது. விடுதிக்கு இடப்புறத்தில் காணப்பட்ட ஏரி முழுவதும் நீர் நிரம்பியிருந்தது. மீன் வளர்க்க எரி குத்தகை விடப்பட்டிருந்ததால் கோழிக் கழிவுகளையும், மேலும் பல சாக்குகளில் மருந்துப் பொருட்களையும் ஏரியின் தென் கரையில் யாரோ ஒருவர் கொட்டிக்கொண்டிருந்தார். செம்மண் காடாகையால் அந்த ஏரியானது நல்ல நாளிலே சிவந்து போய்தான் காணப்படும். கோழிக் கழிவுகள் வேறு தொடந்து கொட்டப்படுவதால் ஏரியின் நீர்ப்பரப்பு முழுவதுமே பாசி பிடித்துப்போய் ஒருவித சாம்பல் வண்ணத்திலும், நீல நிறத்திலும் மிதந்துகொண்டிருந்தது. நீரில் மிதந்துகொண்டிருந்த பாசிகளையும், கழிவுகளையும் தள்ளிவிட்டு தாத்தா ஒருவர் நீரில் மூழ்கினார். தொலைவில் சிறுவர்கள் சிலர் ஏரியில் தொப்பென்று விழ ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சியைக் கண்ட நான் ஒரு கணம் வண்டியை நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். அதே விடுதியில்தான் மூன்று வருடத்திற்கு முன் நான்கு வருடங்கள் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தேன். நான்கு வருடங்கள் எப்படி ஓடியது என்று சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தேன்.

எங்கள் கிராமம் சாளையக்குறிச்சியில் அப்போது எட்டாவது வரை தான் இருந்தது. உள்ளூரிலேயே அப்போது அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்ததால் உள்ளூர் பள்ளிக்கூடம் முடிந்ததுமே ஊரிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள பொய்யாதநல்லூரில் படி அல்லது சென்னை ஹோட்டலுக்கு வேலைக்கு செல் எனப் பல நிர்பந்தங்களுக்கும், பல கடினமான வாழ்க்கைச் சூழலுக்கும் மத்தியில் இந்தப் பள்ளியில்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து சேர்ந்திருந்தேன்.

பொன்பரப்பியில்தான் படிக்க வேண்டும் என நான் முடிவு செய்ததற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். ‘இந்தப் பள்ளியில் சேர்ந்தால் பென்சில், பேனா, நோட்டு, புத்தகம் என சகட்டு மேனிக்கு கப்சா (திருட்டு) அடிக்கலாம்’ என்ற ஒரே காரணம்தான் என்னை இந்தப் பள்ளியை நோக்கி இழுத்து சேர வைத்திருந்தது. அப்போது எனக்கு திருடுவது என்பது விருப்பப்பட்ட பழக்கம்.

ஆனால், பள்ளியில் சேர்ந்தபிறகு ஒரு பென்சிலைக் கூட நான் களவாண்டதில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் இந்தப் பள்ளியில் எனக்குக் கிடைத்த சில அரிய நண்பர்களான கோடி, ரே.மணி, மகேஷ் தான். இந்த நல்லவர்களால்தான் அன்று எப்படியோ செல்ல இருந்த என் பாதை தடம் மாறாமல் நேராக சென்றது. இந்த மண் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த மண் இந்தப் பொன்பரப்பி. அதன்பிறகு இந்த விடுதியில் தங்கிப் படித்து பத்தாவது வகுப்பில் பள்ளிக்கே முதல் மதிப்பெண் பெற்றது. பன்னிரெண்டாவது படித்தபோது முளை விட்ட அரும்புக் காதல் என அனைத்தும் மனதில் நிழலாடி ஆட்டோகிராப் சேரன் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நின்றுகொண்டிருந்த வேளையில் ஓடிவந்த சிறுவர்கள் ஏரியில் குதித்து நீர் தெறித்து எழுந்த சத்தத்தில் எனது கடந்தகால சிந்தனைகள் களைந்து நிஜ உலகிற்கு வந்தவன் உடனே அங்கிருந்து கிளம்பினேன்.

‘கடவுளே... பொன்பரப்பி பஸ் ஸ்டேண்டுல எனக்குத் தெரிஞ்ச யாரும் என்ன பார்த்துடக் கூடாது. குறிப்பாக என்னோட அருமை பிரண்ட்ஸ்’ என ஏரிக்கு அந்தப் புறமாக இருந்த அய்யனாரிடம் வேண்டிக்கொண்டே வண்டியை மித வேகத்தில் செலுத்திக்கொண்டிருதேன்.

‘அப்படி யாராவது பார்த்துவிட்டால் இன்றைய பொழுது முழுவதும் அவர்களுடன் கழிக்கவேண்டிய நிலை வந்துவிடும். இந்த ஊரில் எனக்கு நண்பர்கள் மற்றும் தோழிகள் அதிகம். ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றுவிட்டுத் திரும்புவதற்குள் பொழுது இருட்டிவிடும்’

பொன்பரப்பி நீலேரியை அடைந்திருந்தேன். நீலேரி முழுவதும் அடர்ந்து வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை படர்ந்து மரகதப் பட்டைப் போன்று போர்த்தியிருந்தது. ஏரிக்கு மேலே சில நாரைகள் பறந்துகொண்டிருந்தன. தீபாவளி கடந்த அடுத்த நாள் என்பதால் சாலையானது எந்தவித பரபரப்புமின்றி வெறுமையாகக் காணப்பட்டதால் ஏரியைப் பார்த்துக்கொண்டே வண்டியை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

அப்போது எங்கிருந்தோ, “வெற்றி...” என அழைக்கும் குரல் கேட்க வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்.

மீண்டும் அதே, “வெற்றி...” என்ற குரல் கேட்டு சாலையின் ஓரமாகச் சென்றவன் திரும்பிப் பார்த்தேன்.

நான் யார் என்னைக் கண்டுவிடக் கூடாது என்று நினைத்து அய்யனாரிடம் வேண்டினேனோ அதே நண்பர்கள் ஆறுபேர் என்னை நோக்கி சிரிப்புடன் வந்துகொண்டிருந்தார்கள்.

என்னைக் கைவிட்டுவிட்ட அய்யனாரை எண்ணி வருந்தியபடியே வண்டியிலிருந்து இறங்கினேன்.

“டேய்... வால்டர். ஒருவார்த்த கூட சொல்லவே இல்ல. நீ பாட்டுக்கு இங்க வந்து நிக்கற!” எனக் கோடிதான் முதன் முதலில் சற்றே அதிர்ச்சியுடனும், முகம் முழுக்க சிரிப்புடனும் வினவினான.

“சின்ன இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு தாண்டா யார் கிட்டவும் சொல்லல!” என நானும் சிரித்தபடியே மழுப்பினேன்.

அப்போது வண்டியின் சீட் கவரில் நான் வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டான் கோடிக்கு அருகில் நின்ற மகேஷ். அதை என்னிடம் காட்டிக்கொள்ளாமலே, “டேய்... நீ போன வேகத்தைப் பார்த்தா பொன்பரப்பிக்கும் கெழக்கல்ல போற மாதிரி இருக்கு?” என முகத்தை சற்றே இறுக்கமாக வைத்துகொண்டு சிரித்தபடி கேட்டான்.

“உங்கள பார்க்கதாண்டா வந்துருக்கேன்” எனக் கூறிக்கொண்டே, “வாடா டீ சாப்டலாம்!” எனக் கூறிக்கொண்டு அருகில் இருந்த டீக்கடைக்கு ஆறுபேரையும் அழைத்துச் சென்றேன்.

சூடான டீ’யைக் குடித்துக்கொண்டே கோடி, “டேய்... நீ சிறுகளத்தூர் வரணும்னா இவளோ தூரம் வந்துருக்க வேண்டிய அவசியம் இல்லையே... யாரடா பார்க்க வந்துருக்க? அதுவும் முன்னாடி கவர்ல புத்தகம் வேற வச்சிருக்க?” எனக் கூறியபடியே கவரைப் பிரித்து உள்ளே வைத்திருந்த புத்தகங்களை வெளியே எடுத்தான்.

R.S அகர்வால் எழுதிய குவாண்டிடேடிவ் ஆப்டிடியூட் புத்தகம் ஒன்று. இன்னொன்றும் அதே வகையிலான நுழைவுத் தேர்வுக்குப் பயன்படும் புத்தகம் தான், பெயர் மறந்துபோய்விட்டேன். அவற்றைப் பார்த்த மகேஷ், “இந்த வேலைய எப்படா பார்க்க ஆரம்பிச்ச?” என்றான்.

எனக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியவில்லை. நானும் முடிந்தவரை மழுப்பலுடன், “ஆறு பேரும் மொத்தமா நிக்கிறீங்களே? என்னடா பிளான்? எந்த படத்துக்குப் போகப்போறீங்க?” என வினவினேன்.

“டேய்... நீ மழுப்ப வேணாம். எங்க போய்கிட்டு இருந்த, அத முதல்ல சொல்லு?” எனக் கோடி சட்டையைப் பிடிக்காத குறையாக வினவினான்.

“........”

“அவனோட ஆள பாக்க போய்கிட்டு இருந்துருப்பான்! ஏண்டா இப்படி படுத்துறீங்க?” என கோடிக்கு சற்றே பின்னால் நின்றுகொண்டிருந்தவன் தெரிவித்தான். ஏறெடுத்து நோக்கினேன். அவன் G.M குரூப் என்று மட்டுமே என்னால் அடையாளம் காண முடிந்தது. ஆனால், பெயர் தெரியவில்லை.

“ஏய்...... ஜஸ்ட் பிரண்டு தான். எதுக்கு இப்போ இப்டி கெளப்பி விடற...” என நான் கேட்க அவன் அமைதியானான்.

“எங்கடா மொத்தமா கெளம்பிட்டீங்க? அதுவும் பைக்ல வந்து பஸ் ஸ்டேண்டுல நிக்கிறீங்க? போற வர பொண்ணுங்கள சைட் அடிக்கிறீங்களா?”

“இல்லடா... கங்கை கொண்ட சோழபுரம் போகலாம்னு பிளான். அதான். கிருபா, பரிதி, பாலுலாம் வரேன்னு சொல்லிருக்கானுங்க. அவுனுங்களுக்குதான் வெயிட்டிங்!”

“ஓ... என்ஜாய் பண்றீங்க....”

“நீயும் வாயேன்!”

“நானா?”

“ம்ம்ம்...”

“நான் வரலடா!”

“ஏன்?”

“சாயங்காலம் திருச்சி கெளம்பனும். நெறைய வேல இருக்கு! நீங்க போயிட்டு வாங்க!”

“டேய்... இப்போ செமஸ்டர் ஸ்டடி ஹாலிடே. இந்த ஒரு வாரம் முழுக்க லீவுதான். ரெண்டு பேருக்கும் ஒரே யுனிவர்சிட்டிதான். என்ன நான் காலேஜுல படிக்கறேன். நீ யுனிவர்சிட்டில படிக்கற. டிப்பரென்ட் அதான்.” என கோபத்துடன் வினவினான் மகேஷ்.

“இல்லடா... எனக்கு மத்த வேல நெறைய இருக்குடா... நான் கிளம்பனும்!”

“அவன்தான் அவனோட பிரண்டுக்கு புத்தகம் கொடுக்க வேகமா போயிட்டு இருக்கான்ல. அவன் போகட்டும், விடுடா...” என அப்போது என் நிலைமையை புரிந்துகொண்ட கோடி சற்றே எனக்கு ஆதரவாக பேசியவன், உடனே, “நானும் பல வருசமா திருமூலர் எழுதுன திருமந்திரம், லெனின் எழுதன பொருளாதாரம் பத்துன புத்தகத்த கேட்டுகிட்டே இருக்கேன். எப்போ வாங்கிட்டு வந்து கொடுக்கேறேன்னு பார்க்கறேன்.” என சற்றே சிரித்தபடி தெரிவித்தபடி தெரிவித்து என்னை வாரிவிட்டான். அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று வரை எனக்கு புரியவில்லை. அவன் கேட்டுக்கொண்டிருந்த அந்த இரண்டு புத்தகங்களையும் இன்று வரை நான் வாங்கிக் கொடுக்கவில்லை என்பது வேறு விஷயம்.

“சரிடா... நான் கெளம்பறேன்! பாத்து போயிட்டு வாங்க. போயிட்டு போன் பண்ணு!” எனக் கூறிக்கொண்டே வண்டியில் தாவினேன்.

அப்போது அந்த பெயரை மறந்த G.M நண்பன், “நீ, இன்னக்கி வந்ததுக்கு பதிலா நேத்து வந்துருக்கலாம்...” எனத் தெரிவித்தான்.

நான் சற்றே குழப்பத்துடன் எனக்கு முன்னால் நின்ற ஆறுபேரையும் மாறி மாறி நோக்கினேன். அப்போது அவன், “நேத்து நீங்க வந்துருந்தா உங்க ஆள... சாரி, உங்க தோழிய தாவணில பாத்துருக்கலாம்” என எனது கண்களைப் பார்த்தபடியே தெரிவித்தான்.

“உண்மையாவா?” எனக் கூறிக்கொண்டே கோடியை நோக்கினேன்.

“ஆமாம் டா...”

அப்போது மனதில் ஒரு இறுக்கம் சட்டென்று தோன்றி மறைந்தது. அதற்கான காரணம் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. உடனே அவன், “நேத்து நம்ம செட்டு பொண்ணுங்க எல்லாரும் இங்கதான் தாவணி, சேரி’ன்னு ஒண்ணா சுத்திகிட்டு இருந்தாங்க. ஒரு நாள் லேட்டா வந்துட்டீங்களே???” என வருத்தத்துடன் வினவினான்.

காலேஜ் கவுன்செலிங் அப்போ 0.25 கட் ஆப் டிப்பரெண்டுல சென்னை பல்கலைக் கழகத்த தவறவிட்டேன். அப்போதெல்லாம் நான் அதை இழப்பாகவே பொருட்படுத்தவில்லை. அதற்கு முன் பத்தாவது வகுப்பில் 3 மதிப்பெண் வித்தியாசத்தில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெரும் வாய்ப்பினை இழந்திருக்கிறேன். அதையும் நான் இழப்பாகவே இதுவரை எண்ணியதில்லை. ஆனால், ‘அன்று மட்டும் ஒரு நாளினை நான் தவறவிட்டுவிட்டேனோ?’ என எண்ணி வாழ்வில் முதல் முறையாகத் தவறவிட்டதை எண்ணி வருந்தினேன்.

திடீரென்று முகத்தில் சூழ்ந்துவிட்ட வருத்தத்தைக் கண்ட கோடி, “ரொம்ப பீல் பண்ணாம? சீக்ரம் வந்த வேலைய பாரு!” எனக்கூறி அனுப்பி வைத்தான்.

நானும் எனது நண்பர்கள் அனைவரிடமும் விடைகொடுத்துவிட்டு அங்கிருந்து அப்போதே கிளம்பினேன்.

தீபாவளிக்கு உடுத்திய ஆடையை நம்மவர்கள் அடுத்த நாள் குளிக்கும் வரை பெரும்பாலும் கழட்டி வைக்காத காரணத்தால் எப்படியும் இன்று தாவணியில் பார்த்துவிடலாம் (தரிசனம் கிட்டிவிடும்) எனும் நம்பிக்கையில் வண்டியை முறுக்கினேன். வண்டி குறுகிய நேரத்தில் தொண்ணூறைக் கடந்திருந்தது. பொன்பரப்பியிலிருந்து நான் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர் தான் இருக்கும். அந்த குறுகிய தொலைவிற்குள் எனது வண்டி இரு முறை தொண்ணூறைக் கடந்திருந்தது.

எப்போதுமே எனக்கு தாவணி என்றால் ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், அன்று எனது நண்பர்கள் கூறியதைக் கேட்டபிறகு, ‘வாழ்வில் முக்கியமான நிகழ்வைக் காண முடியாமல் இழந்துவிட்டதைப் போன்ற உணர்வே எனக்குத் தோன்றியது. கடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் மனதில் வருத்தமானது அதிகமாகிக்கொண்டிருந்தது. அவசியமே இல்லாமல் தோன்றும் இந்த வருத்தத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என நான் சிந்தித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தபோதே என் தோழியின் வீட்டை அடைந்திருந்தேன் நான்.

அவளது வீட்டுக்கு முன்னே வண்டியை நிறுத்தி ஹாரனை இரண்டு முறை அழுத்தி நான் வந்திருப்பதை வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டு இரண்டு புத்தகங்களையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டு வாயிலை நோக்கி நடந்தேன். எனது வண்டி ஹாரன் சத்தத்தைக் கேட்டதும் எனது தோழியின் அம்மா வெளியே வந்தார்கள். என்னைப் பார்த்ததும் சிரிப்புடன், “வாப்பா வெற்றி...” எனக் கூறி கையிலிருந்த புத்தகத்தை வாங்கி டிவியின் மீது வைத்துவிட்டு மரக் கட்டிலில் என்னை அமரவைத்துவிட்டு சமையற்கட்டிற்குள் நுழைந்தார்.

அழகாகக் காணப்பட்ட அந்த வீட்டினைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தபோது நீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, “கொஞ்ச நேரம் உட்காரு வெற்றி. காபி எடுத்துகிட்டு வரேன்!” எனக் கூறிக்கொண்டே மீண்டும் சமையல் கூடத்திற்குள் நுழைந்தார்.

எனக்கு டீ, காபி குடிக்கும் பழக்கம் என்பது அப்போது சிறிதும் இல்லை. பால் மட்டும்தான். அதுவும் மாட்டிலிருந்து கறந்து சுடசுட இருக்கும் நுரையுடன் இருக்கும் பச்சைப் பாலை மட்டுமே பருகுவேன். எருமைப் பால் என்றால் இன்னும் பிடிக்கும். எப்போதாவது நண்பர்கள் வீட்டிற்கு செல்லும்போது வேண்டாம் என்று கூறக்கூடாது என்று வாங்கிக் குடித்துவிடுவேன்.

அவர் அளித்த காபி தம்ளரை வாங்கிக்கொண்டே, “அம்மா... எப்படி இருக்கீங்க?” என வினவினேன் நான்.

“நாங்க எல்லோரும் நல்லாருக்கோம் வெற்றி. நீ எப்படி இருக்க? அம்மா, தம்பி எல்லோரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா...”

“எப்போதும் போன்ல சொல்லிட்டுதான் கெளம்பி வருவ. நீ வரப்போறதா யாருமே சொல்லலையே?”

“இல்லம்மா... பொன்பரப்பி வரைக்கும் வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு தோணுச்சி, கிளம்பி வந்துட்டேன்!” எனக் கூறிக்கொண்டே அவர்கள் வீட்டின் வடக்கு வாசலை நோக்கி பார்வையைச் செலுத்தி அந்த வீட்டினை ஒருமுறை விழிகளால் தேடினேன்.

நான் தேடுவதைக் கண்டறிந்துவிட்டவர், “என்ன வெற்றி யார தேடுற?” என வினவினார்.

“வீட்டுல யாரையும் காணும்?”

“எல்லாரையும் தேடுறியா இல்ல உன் ப்ரண்ட தேடுறியா?”

“எங்கம்மா, வீட்ல இல்லையா?”

“உன்ட்ட ஏதும் சொல்லலையா?”

“இல்லையே...!”

“எல்லாரும் கங்கை கொண்ட சோழபுரம் போயிருக்காங்க!”

“எங்க?”

“கங்கைகொண்ட சோழபுரம்!!!”

“.........”

“நேத்து தாவணி கட்டி ஆச அடங்குலன்னு இன்னைக்கு அக்காவும் தங்கச்சியும் சேரி கட்டிக்கிட்டு கோயிலுக்குப் போயிருக்காங்க வெற்றி!”

“.......?!”

அபோது, வீட்டிற்கு முன்புறத் தாழ்வாரத்தில் துவைத்துக் உலரப் போடப்பட்டிருந்த ஈரமான தாவணியின் ஈரத்தை ஜன்னலின் வழியே கொண்டுவந்து முகத்தில் அப்பிவிட்டுச் சென்றது பெருங்காற்று ஒன்று.
 
சி.வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி

2 comments:

  1. கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டியது தான்...! (ஒரு பிரண்டு கூட இந்த விசயத்தை சொல்லவில்லையே...!..?)

    ReplyDelete
  2. ஹ்ஹாஹஹ் கொஞ்ச நேரம் முன்னாடி ஃப்ரெண்டுகள்கிட்ட வரலைனு சொன்னதுக்கு இப்ப செம பல்பு!!!!

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...