Aug 1, 2015

பாகுபலி - இயக்குனர் திரு.ராஜமௌலி'யிடம் சில கேள்விகள்???

Baahubali poster.jpgஇயக்குனர் திரு.ராஜமௌலிக்கு அன்பான வணக்கம்.
  
நான் ஈ வெற்றிப் படத்திற்குப் பிறகு பாகுபலி எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். திரைப்படத்தின் தொடக்கத்தில் சிவகாமி தேவியாரின் தியாகம், சிவா லிங்கத்தைத் தூக்கிக்கொண்டு நீர் வீழ்ச்சியில் வைத்த காட்சி, கட்டப்பர் சிவாவைக் கொலை செய்ய ஈட்டியை எடுத்துக்கொண்டு ஓடி செல்லும்போது திடீரென்று திரும்பும் சிவாவைப் பார்த்து பாகுபலி என எண்ணி அவனது காலினைத் தனது தலைமேல் வைக்கும் காட்சிகள் உடலைச் சிலிர்க்கவைத்தன. தேவசேனா சுள்ளிகளைப் பொறுக்கும் போது கட்டப்பா அவளிடம், தாயே, "நான் உங்களை விடுவிக்கப் பாடுபடுகிறேன். தாங்கள் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?" என்று தட்டிவிடும்போது ஆக்ரோசமான தேவசேனாவின் வசனங்கள் அருமை.


காலக்கீயர்களுக்கும் மகிமதி படைக்கும் நடைபெற்ற யுத்தம் பிரமிப்பாக இருந்தது. உங்களது உழைப்பு படத்தில் நன்கு பிரதிபலித்தது. வாழ்த்துகள். படமும் வெற்றிப் படமாக திரையில் நன்கு ஓடிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மசாலா திரைப் படங்களுக்கே இருந்த சினி டிரண்டை சரித்திரத்திற்கு மாற்றியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இருந்தாலும் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. 

Baahubali poster.jpg

1. தமிழ் (வரலாற்றில் தமிழ் மற்றும் ஆந்திரா) மற்றும் பாரத தேசத்தில் அரசர்களுக்கும், கதைகளுக்கும் பஞ்சம் என்றா தாங்கள் ஒரு கற்பனை நாட்டை உருவாக்கி கற்பனையான மசாலா கதையை உருவாக்கியிருக்கிறீர்கள். ஏன்? மௌரியப் பேரரசன் அசோகன் ஒட்டுமொத்த பாரதத்தையும் கைப்பற்றி தென்னகம் நோக்கி வருகையில் மௌரியப் பெரும்படையைத் தடுத்து நிறுத்திய மாமன்னன் இளஞ்சேட்சென்னி, அப்போரில் துளு நாட்டு மன்னன் நன்னனின் தியாகம். சிறு வயதிலேயே தந்தையை இழந்து, நாட்டையும் இழந்து பிறகு வெண்ணிக் களத்தில் தன்னை எதிர்த்த பாண்டியர், சேரர் மற்றும் பன்னிரண்டு வேளிர்களையும் தோற்கடித்து வடக்கே படையெடுத்து வெற்றி பெற்ற கரிகாலனின் வீர வரலாறு, பிற்காலத்திய சோழர்கள், வேங்கியின் சாளுக்கிய சோழனான குலோத்துங்க சோழன், பாண்டியர்கள், பல்லவர்கள், சேரர்கள் என வீரத்திற்கும் காதலுக்கும் பஞ்சம் இல்லாத நமது சரித்திரத்தைக் கைவிட்டு கற்பனைக் கதையை உருவாக்கியது மட்டும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை? உங்கள் படத்தைப் பார்த்தபிறகு ஒரு பிரமாண்டம் தெரிந்தது. ஆனால், அதில் உண்மையும் இல்லை. வரலாறும் இல்லை. இந்த வகையில் முதல் படம் கொச்சடையான், இரண்டாவது பாகுபலி. பாகுபலி உண்மையான சரித்திரமாக இருந்திருந்தால் வரலாறு அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்த்திருக்கும். ஆனால், பாகுபலியைப் பார்த்தபோது இருந்த பிரமாண்டம் ஏனோ திரையரங்கை விட்டு வெளி வந்தபோது மனதில் இருக்கவில்லை.

2. மேலை நாடுகளில் எடுக்கப்படும் சரித்திரக் கதைகள் பெரும்பாலும் உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டு வெற்றி பெரும் வேலையில் தென்னிந்திய திரைப்படங்கள் மட்டும் ஏன்  மசாலா கலந்த கற்பனைக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்? என்ற வினாவிற்கு என்னால் இதுவரை விடை தேட இயலவில்லை.

3. பல்வாழ் தேவனின் நூறு அடி சிலையின் சரிவை சிவா மட்டும் ஒற்றை ஆளாகத் தடுத்து நிறுத்திய போது கூட்டத்தினர் அனைவரும் பாகுபலி பாகுபலி என்று கத்தியபடியே சிலையைத் தூக்கி நிறுத்தும் காட்சி அபாரம். சிவாவின் பலத்தை அங்கு நன்கு சுட்டிக் காட்டியிருப்பீர்கள். அதே நேரம் பாகுபலி என்ற பெயருக்கு இருக்கும் கம்பீரத்தையும் சொல்லியிருப்பீர்கள். அபாரம். ஆனால், சிவா மட்டும் தனியொருவனாக சிலையின் கயிற்றைத் தாங்கி இழுத்து வரும்போது அந்தக் கயிறு முறுக்கு ஏறி இறுகி இருக்காமல் தொங்கிக்கொண்டு இருக்கும். கவனிக்க மறந்துவிட்டீர்கள்.

4. அரண்மனையிலிருந்து தேவசேனாவை சிவா காப்பாற்றி புரவி வண்டியில் அழைத்து வரும்போது காவலர்கள் நெருப்புப் பந்தையும், பாறைக் கற்களையும் (???) போட்டு பாதையை அடைப்பார்கள். ஆனால், சிவாவின் புரவித் தேர் அந்தப் பாறைக் கற்களை (???)உடைத்துவிட்டு தப்பிவிடுவார். (???) எனக்குத் தெரிந்தவரை எரி  கற்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால், அது புரவியின் குளம்புகள் பட்டு உடையுமா என்பது சந்தேகமே!

5.பிரமிக்க வைத்தது காலக்கேயர்களுடனான அந்தக் கடைசி கட்ட போர். ஆனால், அதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது எனது எண்ணம். போரில் அம்புகளை மொத்தமாக எரியும் இயந்திரத்திற்குப் பெயர் வலைவிற்பொறி. ஆனால், நீங்கள் வில் எறியும் எந்திரம் என்றே குறிப்பிட்டிருப்பீர்கள். 

6.திரி சூல  வியூகத்தின் மையத்தை காலக்கீயர்கள் தகர்க்கும் போது  கட்டப்பர் உட்பட மகிமதி வீரர்கள் பார்த்துக்கொண்டுதான்  இருப்பார்கள். உள்ளே வரும் சில வீரர்களை கட்டப்பர் ஈட்டியால் குத்தித் தூக்கி வெளியே எறிந்துகொண்டிருப்பார். அவர்கள் அரனை உடைக்கும் வரை இவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். முற்றுகையிடும் போது வீரர்கள் செய்யும் தற்காப்புப் போரைக் கூட அப்போது மகிமதியின் வீரர்கள் புரியாதது ஏன்? அந்த அரனை உடைக்க நான்கு யானைகள் போதாதா? என்னைக் கேட்டால் அந்த மகிமதியின் அரனை தகர்க்க இரண்டு எருமைக் கெடா மட்டும் போதும் என்பேன்.

7. யானைப்படை பாரத மன்னர்களுக்கே உரிய தனிச் சிறப்புப் படை. யானைப் படை உங்களது கவனத்திற்கு வராமல் விட்டது ஏன்?

8.கடைசிப் போரில் கல் எறியும்  எந்திரம் (இதற்குப் பெயர் கல்லுமிழ் கவண். இதையே சற்று மாற்றி அமைத்தால் அதற்குப் பெயர் இடங்கனி மற்றும் வலங்கனிப்  பொறி) மற்றும் அம்பு எரியும் எந்திரம் (வலைவிற்பொறி) மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள். முற்றுகைப் போரில் பயன்படுத்தப்படும் மற்ற கருவிகளான வலைவிர்பொறி, கருவிரலூகம், கல்லுமிழ் கவண், கல்லிடுகூடை, இடங்கணி, அரிநூற்பொறி, குருவித்தலை, தூண்டில், புலிப்பொறி, குடப்பாம்பு, ஆண்டலையடுப்பு, கவை, கழு, புதை, அயவித்துலாம், கைப்பெயர் ஊசி, எரிசிரல், சகடப்பொறி, தகர்ப்பொறி, பன்றி, பனை, எழு, தோமரம், நாராசம், சுழல்படை, மழு, சீப்பு, கணையம், சதக்களி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, சிறுசவளம், பெருஞ்சவளம், தாமணி, முசுண்டி, முசலம்விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி,   பிண்டிபாலம் போன்ற கருவிகள் உங்களது கவனத்திற்கு வராதது ஏனோ?

9. காலக்கீயர்கள்  என்ற சொல்லையே நீங்கள் காலக்கீயஸ் என்ற பழங்குடி அரச மரபின் பெயரை பயன்படுத்தியிருக்கிறீர்கள் . இது சரியா?

10. சிங்கபுரம் (சிங்கபுரி) என்பது சங்ககால கலிங்கத்தின் தலைநகரம். இந்த நகரிலிருந்துதான்  மகாமேகவாகன அரச மரபினர் கலிங்கத்தை அரசாண்டனர். இந்த மரபில்  நமக்குத் தெரிந்த ஒரே ஒரு மன்னன் காரவேலன். இவன் சிங்கபுரியிலிருந்து தான் சுங்கர்களையும், சாதவாகனர்களையும் கலங்கடித்தான். இப்பேற்பட்ட சிங்கபுரியை கள்வர்களின் நகரம் எனக் கூறியது சரியா? அக்காலத்தில் கள்வர்கலான கடற் கடம்பர்களின் நாடு உங்களுக்குத் தோன்றாதது ஏன்?

பாகுபலி என்பது பிரமாண்டப் படைப்புதான். ஆனால், அதில் உண்மையும் சரித்திரமும் கலந்து சிறு சிறு விஷயங்களில் இன்னும் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம் என்பது எண்ணம். 

பாகுபலி இரண்டாவது பாகத்திற்காக காத்திருக்கிறோம். பார்க்கலாம்... என்ன செய்யப் போகிறீர்கள் என்று .

பாகுபலி வெற்றி பெற்ற பிறகாவது உண்மை சரித்திரத்தைப் படமாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் திரையுலகைக் கேட்டுக் கொள்கிறேன்....


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி ...

12 comments:

  1. வசூல் ஒன்றே பிரதானம் தம்பி... வரலாறு எல்லாம் அப்புறம்... இரண்டாவது பாகத்தில் மாறி விடவாப் போகிறது...?

    ReplyDelete
  2. இப்படி எல்லாமா ஆராய்ச்சி பண்றது?
    சரித்திரக் கதை ஆசிரியர் ஆயிற்றே . ஏமாற்ற முடியுமா?

    ReplyDelete
  3. அருமையான பதிவு வெற்றி ...
    நிறைய பொறிகளின் பெயரை அறிந்தேன்.
    பாகுபலி என்பது ஒரு சமண தீர்த்தங்கரர் ஒருவரின் பெயர்.
    அவரது சகோதரரிடம் சாத்வீக முறையில் போராடி வெற்றிபெற்று கிடைத்த அரசை துறந்துவிட்டு துறவியாக போனார் என்று விக்கி சொல்கிறது ..
    படத்தின் ஒரே ஒரு விசயம் பெயர் மட்டுமே..
    டெக் வளர்ந்துட்டு கதை ஹும்..

    ReplyDelete
  4. Anonymous1:01:00 AM

    loosappa nee? tamil version done by Madhan Karki. Real story ny sonna, evanavathu poraattam nadathuvaan.. 250 crore budget la padam panravanukku theriyathu, 100 roova internet paakura ungalukku theriyuma? first, neenga sonthama ethavathu create pannunga, then criticize! (itha sonna vudane, enna personala thitta koodathu. I said no need to criticize without knowing the actual reasons behind, and a director is limited by various properties. For example, he might not have secured 100 elephants with in stipulated time for his shooting)

    ReplyDelete
  5. எத்தனைக் கருவிகள்!! சரித்திர நாவலாசிரியரின் வாசிப்பும் தேடலும் நன்கு தெரிகிறது. வாழ்த்துகள் வெற்றி

    ReplyDelete
  6. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்


    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    ReplyDelete
  7. உண்மையான வரலாற்றை எடுக்க விடுவீர்களா ?? அசோகன் படை எடுப்பை இளஞ்சேட்சென்னி தடுத்தாரா ஆதாரம் உள்ளதா ???

    ReplyDelete
  8. இருவரும் சம காலத்தவர்கள் இல்லை....

    ReplyDelete
  9. தம்பி, உன் பிரச்சினை தான் என்ன?

    இத்துணை கேள்வியையும் வைத்த உன்னிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், அவன் பணம் சம்பாதிக்க எடுத்த சினிமாவை ஏன் இப்படி எடுத்தாய் என்று எதற்கு கேட்க வேண்டும்? அது அவனது விருப்பம் அவனது சினிமா அவர் விரும்பியவாறு தான் எடுப்பார். நிகழ்ந்த வரலாறுகளை படமெடுத்தால் வரும் சிக்கல்களை எப்படி சமாளிப்பது? நியாயமாக இதையெல்லாம் நீங்கள் மதன் கார்க்கி இடம் தான் கேட்கவேண்டும், மௌலியிடம் அல்ல././.

    ReplyDelete
  10. ஆஹா நல்லதொரு பதிவு வெற்றி. நிறைய தகவல்கள் உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. நீங்கள் சரித்திர நாவல் ஆசிரியர்....நிறைய வாசிப்பு....ஆனால் பாருங்கள் வெற்றி படம் வணிகம் சார்ந்தது. அவர்கள் நம்புவது பிரம்மாண்டத்தைதான்...மக்கள் அ;தைத்தான் பார்க்கின்றார்கள்...உன்னிப்பாக இல்லையே...இப்படி ஆராய்வதும் இல்லையே..அதான்...

    ஆனால் உங்கள் பதிவு அருமை...

    ReplyDelete
  11. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...