Oct 7, 2012

எதிர்கால நினைவுகள்

அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து  உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக  என்னைக் கட்டிக் கொண்டாள்.

வயலுக்குச் சென்ற பாட்டி, ஆடு மேய்க்கச் சென்ற தாத்தா, களைப் பறிக்க சென்றவர்கள், நாற்று நட போனவர்கள் என யார் எதிரில் திரும்பினாலும் என்தன் கையை விட நான்மறுக்க, அவள் வெட்கத்துடன் கையை உதற ஆசைப்பட்டாலும், விடாத என்தன் கை. அந்த ஸ்பரிசத்தில் அவ்வளவு பேரானந்தம், அனுபவித்தால் தான் தெரியும். கடந்து சென்றவர்கள் எல்லாரும் பொறாமையுடன் சென்றது அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது. அழகாக பாடிக் கொண்டே இருந்தது எங்கள் இருவருக்கும் பிடித்த பாடல்கள்.

மாலை நேரம் வந்துவிட்டதால் ஓடை மணலின் சூடு குறைந்து பாதத்திற்கு அழகாக வெது வெதுவென்ற ஓர் உஷ்ணம், நடக்க நடக்க பாதத்திற்கு மிக இதமாக இருந்தது, வெயில் குறையக் குறைய இன்னும் நீரோடை மணல் ஏற்கெனவே தன் ஈரப் பதத்தை இழந்திருந்ததால் அது இன்னும் மாலைத் தென்றலில் குளிர்ச்சியாகிக் கொண்டே சென்றது. தேகத்தை வருடும் அழகிய இனியத் தென்றல், பாதங்களில் இதமான மணல், அருகில் என்னுடன் கைகொர்த்தப் படியே நடைபழகும் என்தன் வளர்ந்த குழந்தை (மனைவி). இந்த நிகழ்வுகள் என்னை வேறு உலகத்திற்கே கூட்டிச் செல்ல முயன்றுகொண்டிருந்தன. ஆனால் என்னவளின் இருப்பு, என் மனம் கூட எங்கும் அலையாமல் என்னை அவளையே சுற்றிவரச் செய்தது, அவளது விரல் தீண்டலின் ஸ்பரிசம், காற்றில் அசைந்தாடும் அவளது மெல்லிய கூந்தல், நான் அவளிடம் நடைப் பழகையில் உரசும் தோல். என இன்னும் ஏராளம்.

இருளுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த பெரும் போரில் இருள் மெல்ல மெல்ல வென்றுகொண்டே வந்தான், கதிரவன் இருட்டுக்காக விட்டுக் கொடுப்பவன் போல செங்கதிர்களை வீசி விலகிக் கொண்டும், சந்திரனோ தன் பங்கிற்கு அவனும் கீழை வானத்தில் உலாவ ஆரம்பித்தான். எனக்கோ இந்தக் காட்சிகள் எதுவும் பெரியதாகப் படவில்லை. இந்த இயற்கை காட்டும் பேரழகைவிட அவற்றின் சாயலில் என்னுடன் வரும் என்தன் தேவதையே எனக்குப் பெரியதாக  தெரிந்து கொண்டும் வந்தாள். அவளின் சிறு புன்னகையில் அந்த மாலை நேர வனப்பு எல்லாம் தோற்றுவிடும் போல இருந்தது.

அன்று நான் முதன் முதலில் கண்ட நாளில் எனக்கு எப்படித் தோன்றினாளோ, அப்படியேதான் இன்றும் இந்த மனம் மயங்கும் மாலைப் பொழுதிலும் எனக்கு என்தன் தேவதை எனக்கு காட்சியளித்துக் கொண்டிருந்தாள். ஆமாம் சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கூட மாலை நேரம், பள்ளி முடிந்து திரும்பும் பொழுதில் மாலைக் கதிரவனின் செங்கதிர்கள் இவள் குழல் மீதுப் பட்டு முத்துக்களாகவும், தங்கமாகவும் சிதறும். அதனை நான் அன்று தூரத்தில் இருந்து ஒளிந்திருந்து பார்ப்பேன், இன்று சிதறும் முத்துகள் அனைத்தும் என் மீதே தெரித்துக் கொண்டு இருக்கிறது அவள் கூந்தலின் செங்கதிர் ஸ்பரிசத்தால். நான் மாய உலகில் சங்கமமாக, கடந்த காலம் அப்படியே நினைவில் ஓடும் அற்ப்புத தருணம், அப்படியென்ன சிந்தனையாம் என்று கேட்ட குரலுடன் நிகழ்காலம் திரும்பினேன் அந்த கடந்தகாலத்திலிருந்து...

எதிர்கால நினைவுகள் தொடரும்...


...வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...


19 comments:

  1. ரசிக்க வைத்தது உங்களின் நிஜமாகப் போகும் எதிர்கால நினைவுகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  2. திரும்பிய நிகழ்காலத்துடன் அந்த எதிர்கால நினைவுகளுக்காக அடுத்தப் பதிவிற்கு காத்திருக்கிறேன்.
    அருமையான உணர்வைத் தருகிறது பதிவு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      தொடர்ந்து வாருங்கள்... விரைவில் அடுத்த பதிவும் வெளிவரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... தங்கள் முதல் வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. சூப்பர் நண்பா... என்ன ஒரு தினுசா ட்ரை பண்ணிருக்கீங்க போல. நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், ஆம் நண்பா, கொஞ்சம் புதுசா முயற்சி செய்யலாம் என்றுதான். அரைத்த மாவையே ஏன் அரைக்க வேண்டும் என்று தான். நமக்குள்ளும் உறைந்து கிடக்கும் அந்த எதிர்கால ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணரலாம் என்ற ஆசையும் தான் நண்பா...

      Delete
  4. தொடருங்கள் இரவின் புன்னகை...
    நானும் தொடருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தாங்கள் அனைவவரும் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் தொடர்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. கடந்தகாலத்திலிருந்து.

    எதிர்கால நினைவுகள் அருமை !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வருகை தாருங்கள்...

      Delete
  6. நன்றாக உள்ளது நண்பா... புது template அருமை . வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நண்பா, நீண்ட நாள்களாக ஆளையே காண வில்லையே? நலமா? நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி...

      Delete
  7. கண்டிப்பாக உங்கள் வலை திரட்டியில் இணைத்து விடுகிறேன் நண்பா...

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  8. நண்பா ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசம் உன்மையில் புதிய முயற்சிதான் இது வார்த்தைகளை எங்கெல்லாம் தேடித் தேடி கேர்த்தீர்களோ வியக்கிறேன் உங்கள் வார்த்தைக் கோர்ப்பில்...
    ரசித்து படித்தேன்

    அண்மைக்காலமான அதிகப்படியான வேலைகளினால் பலரின் தளங்களுக்கு செல்லமுடியாமல் போய்விட்டது அதில் உங்கள் தளமு அடங்கியதை எண்ணி வருந்துகிறேன் தற்பொழுது வேலைகள் குறைந்துள்ளன இனிமேலும் தொடரலாம் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாருங்கள் நண்பா. அதே சமயம் வேலையும் முக்கியம், அதிலும் கவனம் செலுத்துங்கள். புது முயற்சியாக மனக் கிடங்குகளை சிறு சிறு மாற்றங்களுடனும், சிறு சிறு பகுதிகளாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன். படித்து தொடர்ந்து ஊக்கம் அளியுங்கள்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  9. ஒருமுறைக்கு பல முறை எழுத்தினை சரிபாருங்கள் நாம் பதிவெழுதுவதனால் அதில் ஏற்படும் பிழைகளை எம்மால் உணரமுடியாமல் இருக்கும் ஆனால் சில எழுத்துப் பிழைகள் வாக்கியத்தையே பொய்ப்பித்துவிடும்....அடியேனின் சிறிய கருத்துத்தான் இது

    கலைப் = களை என நினைக்கிறேன்
    காட்சியலித்துக் = காட்சியளித்தல் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நண்பா, தாங்கள் கூறிய அனைத்து பிழைகளையும் சரிசெய்து விட்டேன். அப்படியே ஒரு முறை நானும் சரிபார்த்து விட்டேன்... மிக்க நன்றி நண்பா...

      நன்றி, வணக்கம்...

      Delete
  10. சூப்பர் சகோ.உங்க வர்ணனையைக்கூறுகின்றேன். ரெம்ப நன்றாக இருக்கிறது. முதல் வருகை, முதல் வாசிப்பே இதுதான். வித்தியாசமாக இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி. தொடர்ந்து வாருங்கள்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...