என்தன் இறைவா
நான் வணங்கும் ஈசா!!!
எனக்கும் அருள்புரியேன்...
அன்று பரவையிடம்
இருமுறை தூது சென்றாய்
சுந்தரனுக்காக.
அவன் காதலை அவளிடம் உரைக்க.
எனக்கும் தூது செல்லேன்
ஒரே ஒரு முறை.
உன் நெற்றிக் கண்ணில் வெந்தால்
என் உயிர் ஒரு முறை மட்டுமே போகும் -ஆனால்
இவளின் அழகிய தண்பார்வைத் தீயில்
என் உயிர் நித்தமும் எரிந்து
அது என் உடலையும் வாட்டுகிறதே!!!
அவள் நினைவே மீண்டும்
உயிரையும்
கொடுத்துவிடுகிறதே...
நினைவில் இருக்கையில் கண்களில்
மின்னலென பாய்கிறாள்....
கனவிலும் அழகிய ராட்சசியாய்
முன் வந்து கனவையும் அவளே பறித்துக் கொள்கிறாள்...
நினைவு, தூக்கம் இரண்டிலும்
அவளே சங்கமித்து என்னுள்
என்னை விரட்டி ஓயாது திரிகிறாள்
என் மனத் தீயில்.
என் இறைவா அவளிடம் சென்று கூறேன்,
இப்படியே சென்றால்
என் உயிர் எனைப் பிரிந்து
உனையும் சேராமல்
அவளிடம் தஞ்சமடைந்து விடும்
என்பதை ஒரு முறைக் கூறேன்.
காலம் கடந்து போகுமுன்னே
ஞாலம் விட்டுப் பிரியுமுன்னே
அவள் நினைவில் நான் வாடுவதை
அவளிடம் சொல்லி
எனை வந்து சேரச் சொல்லேன்.
என்தன் இறைவா.
எனக்காக செல்லேன் அவளிடம்.
என் அன்பை அவளிடம் கூறி ஏற்கச் சொல்லேன்.
நீ மட்டும் ஏற்கச் செய்தால்
நான் விரதம் இருந்து விளக்கேற்றி
தேங்காய் உடைப்பேனே, அவளுடன்!!!
என்தன் அன்பைக் கூறிவிடேன்...
உன் பக்தன் என்னை வாடச் செய்து
நீ மட்டும் உன் தேவியுடன் நித்தமும்
மகிழ்ச்சியில் திளைக்கிறாயே?
இது நியாயமா! நீயே கூறேன்...
........................................................வெற்றிவேல்