May 20, 2016

வானவல்லி – சரித்திரப் புதினம்: முன்னோட்டம்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் பருத்திக் காட்டிற்கு குரங்குக் கூட்டம் வந்துவிட்டது. காலையில் பொழுது விடிவதற்கு முன்பு காட்டிற்கு சென்றால் இருட்டியதும் தான் வீட்டிற்கு திரும்புவேன். சாப்பாடு தேடி வந்துவிடும். குரங்குகளை ஓட்டிவிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் தனிமை என்னைப் பீடித்துக் கொள்ளும்.

தனிமைப் படுத்தப்படும் சமயத்தில் தான் மனதின் ஆழத்தினுள் பூட்டி வைத்திருக்கும் பல நினைவுகளும் கிளர்ந்து எழுந்து பாடுபடுத்தும். அந்தத் தனிமையை இப்போது நினைத்தாலும் என்னை நினைத்து நானே பரிதாபப் படுவேன். அந்த அளவிற்குக் கொடூரமான தனிமை அது. வேலை கிடைக்காத விரக்தி, கடன், ஏமாற்றம், காதல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை ரணமாக்கத் தொடங்க அவற்றிலிருந்து விடுபட்டுக் கொள்ளவே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன்.காலையிலிருந்து மாலை வரை வெறுமனே குரங்குகளின் சேட்டைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் பொழுது போக்கு புத்தகங்கள் மட்டுமே. மரத்திலிருந்து குரங்குக் கூட்டம் பருத்திக் காட்டிற்கு வர கீழிறங்கும் போதெல்லாம் அவற்றை விரட்டி மீண்டும் மரத்திற்கு ஏற்றிவிட்டு புத்தகம் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். காலையிலிருந்து மாலை வரை குரங்குகளை விரட்டி விடும் சமயம் தவிர மற்ற சமயங்களில் வாசிப்பு மட்டுமே தீனி எனக்கு. பொழுது முழுவதும் புத்தகங்களுக்குள்ளே மூழ்கிக் கிடக்க ஒரு கட்டத்தில் வாசிப்பு திகட்டத் தொடங்கியது. ஏற்கனவே இரவின் புன்னகை வலைப்பூவில் எழுதிய அனுபவம் இருப்பதால் ஏதேனும் நாவல் எழுதலாமா என்று சிந்திக்கத் தொடங்கினேன். எழுதலாமா என சிந்திக்கத் தொடங்கிய முதல் கணமே எனக்குத் தோன்றியது வரலாற்றுப் புதினம் தான். நிறைய வரலாற்றுப் புதினங்கள் படித்திருக்கிறேன். சாண்டியன், கல்கி, அகிலன், நா.ப என்று நிறைய ஆசிரியர்களின் புதினங்களை வாசித்த அனுபவம் இருக்கிறது. வாசிப்பு அனுபவம் மட்டும் நாவல் எழுதுவதற்கு போதாது என்பதை நானும் அறிவேன். இருந்தாலும், சக குரங்குக் கூட்டங்களுடன் பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த குரங்குக் கூட்டங்களுக்கு மத்தியில் நான் மட்டும் தனிமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க ஏதேனும் செய்தாக வேண்டும். வாசிப்பு கைகொடுக்க வில்லை. எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

அதிலும் எதற்கு நான் வரலாற்றுப் புதினம் எழுதத் தொடங்கினேன் என்ற காரணம் எனக்கு இன்று வரைத் தெரியவில்லை. எனக்கு வரலாறு பிடிக்கும், குறிப்பாக சோழர்களை மிகவும் பிடிக்கும். நான் சோழ நாட்டான் என்பதும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். நிகழ்காலக் கதைகளை எழுதுவதை விடவும் வரலாற்றுக் கதைகளில் நிறைய பொய் கூறலாம். குறிப்பாக ஹீரோயிசம், வில்லத் தனம், காதல், ஊடல், போர் என்று நினைத்ததை எழுதலாம். எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. அப்போது எழுதத் தொடங்கியதுதான் வானவல்லி புதினம். இன்று நான்கு பாகங்கள் அடங்கிய பெரும் புத்தகமாகி வானதி பதிப்பகத்தார் வெளியிடவிருக்கிறார்கள்.

சம்பாபதி வனத்திலிருந்து பயணத்தைத் தொடங்கினேன். பயணம் புகார், உறைந்தை, வஞ்சி, கொற்கை, எரித்திரியன் கடல், எகிப்து, யவனம், மீண்டும் புகார், வெண்ணிக் களம், அவந்தி, இமயம் எனப் பயணம் நீண்டு கொண்டே சென்றது.


எனது வாழ்வில் மிகவும் உன்னதமான, மிகவும் மகிழ்ச்சிகரமான, குதூகலமான காலம் என்று ஏதேனும் இருந்தால் அது வானவல்லி எழுதிய இரண்டு வருடங்களாகத் தான் இருக்கும். சோழப் பேரரசன் கரிகாலனின் வீர வரலாறு வானவல்லி. இதுவரை யாராலும் எழுதப்படாத கரிகாலனின் இமயப் படையெடுப்பையும் உள்ளடக்கியது.


வானவல்லி எனது முதல் புதினம். அதில் நிச்சயம் இதற்கு முன் நான் படித்த புதினங்களின் தாக்கம் இருக்கலாம். குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த சாண்டில்யனின் தாக்கத்தை ஆங்காங்கே கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கருதுகிறேன் நான். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டிக் குறிப்பிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானவல்லியை வானதி பதிக்கத்தார் வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

8 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ... அருமையான முயற்சி

  ReplyDelete
 3. Anonymous12:22:00 PM

  நானும் சாண்டில்யனின் தீவீர வாசகன்தான்.. தங்கள் வானவல்லியையும் நிச்சயம் வாசிக்கிறேன். வாசித்து என் கருத்துக்களை தெரிவிக்கிறேன். சரித்திர நாவல்களை வெளியிடுவதில் வானதியின் பங்கு அளப்பரியது. தங்கள் நாவலும் வானதியில் வெளிவாவது மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 4. மனம் நிறைந்த பாராட்டுகள் வெற்றிவேல். மேலும் பல புதினங்களை நீங்கள் எழுதிட வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. சென்றவருடமே வெளிவந்திருக்க வேண்டியது என்று நினைக்கிறேன்! உங்களின் தளராத முயற்சியை ஓரளவுக்கு அறிவேன். வாழ்த்துக்கள்! மென்மேலும் பல நாவல்கள் எழுதி சாண்டில்யன் புகழை எட்ட பிரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 6. மனம் நிறைந்த வாழ்த்துகள்... பாராட்டுகள்...

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சகோ நூல் பலரிடம் சேர்ந்து பதிப்பிள் வெற்றிவாகை சூடட்டும்

  ReplyDelete
 8. Congragulation..
  www.thirupress.com

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...