Feb 26, 2016

கடிதம் - 2: நண்பன் கடற்கரை விஜயனுக்கு...

நண்பன் கடற்கரை விஜயனுக்கு,

வணக்கம்...

மன்னித்துக்கொள் கடல். நேற்று உன்னுடன் பேசும்வரை நீ அனுப்பிய கடிதம் பற்றி நான் மறந்தே போனேன். நீ பேசிய பிறகுதான் உனக்கு பதில் எழுத வேண்டும் என்ற நினைப்பே எனக்கு வந்து சென்றது. ஒரு மாதத்திற்கு முன் நான் எழுதிய கடிதத்தின் சில வரிகளை நீ மணப்பாடமாக தெரிவித்தாய். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன் நீ எழுதிய உனது கடிதத்தில் சில வரிகளைக் கூட என்னால் ஞாபகம் வைத்துக்கொண்டு உன்னுடன் கடிதம் பற்றி விவாதிக்க முடியவில்லை. நீ மனதில் என்னவெல்லாம் நினைத்து வருந்தியிருப்பாய் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது. பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன் கடல்.


எனது நிலைமை இப்போது அப்படித்தான் இருக்கிறது கடல். காதல் பீடித்து பசலை நோய் உச்சத்தில் இருக்கும்போது ஒரு வித வெறுமை ஏற்படும் அல்லவா. அப்படித்தான் இப்போது நானும் உழன்றுகொண்டிருக்கிறேன். இப்போதிருக்கும் எனது நிலைக்குக் காரணம் பசலை இல்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் இங்கே. அந்த நிலையைக் கடந்துவிட்டேன்.

பசி உயிரைக் கொல்லும். வட்டி நிறைய சோற்றினைப் போட்டுவிட்டு வாயில் எடுத்து வைத்தால் பசி பறந்து போய் விடுமே. அப்படிப்பட்ட வெறுமை தான் இப்பொது என்னை ஆட்கொண்டிருக்கிறது. அந்த வெறுமைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. உச்சந்தலையில் தோன்றி உள்ளங்கால் வரை ஒரு வித வெறுமை படர்ந்திருப்பதைப் போன்று உணர்கிறேன். அதை வெறுமை என்று கூறுவதை விடவும் வறுமை என்று கூறினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய எழுத வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், எழுத அமர்ந்தால் நான்கு வரிகளுக்கு மேல் தொடர முடியவில்லை. அந்த நிலையை மாற்றிக்கொள்ள விரும்பியே இந்த இரவினை எழுதாமல் கழிக்கக் கூடாது என முடிவெடுத்து உனக்கு இன்றே பதில் கடிதத்தை எழுதிவிட வேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கடிதம் கூட ஒரு விதத்தில் சுயநலம் தான். பொறுத்துக்கொள்வாயாக...

நீண்ட நாட்கள் கழித்து எழுதினாலும் உனது எழுத்தின் வசீகரம் இன்னும் குறையாமல் அப்படியே தான் இருக்கிறது கடல். என்ன, தொடர்ந்து எழுதத்தான் மாட்டேன் என்கிறாய். ‘உன்னிடம் பேசும்போதெல்லாம் எதையாவது எழுதிக்கொண்டே இரு’ எனக் கூறிக்கொண்டே இருப்பேன். நீயும் ‘சரி...’ என்றே கூறிக்கொண்டிருக்கிறாய். சமீபத்தில் எனக்கு எழுதிய கடிதத்தைத் தவிர நீ வேறு எதையும் எழுதவில்லை. எனக்கு பதில் மட்டுமே எழுதுவேன் என்று நீ உனக்குள் முடிவெடுத்திருந்தால், உனக்கு இனி நான் தொடர்ந்து கடிதத்தை எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கிறேன். நீயும் பதில் எழுதிக்கொண்டே இரு. எனது நண்பனின் எழுத்தினைத் தொடர்ந்து நான் வாசிக்க வேண்டும்; அதற்காக உன்னைத் தொடர்ந்து எழுதவைக்க வேண்டும் என்பதற்காகவாவது இனி தொடர்ந்து நான் உனக்கு கடிதம் எழுதுகிறேன்.

கடந்த கடிதத்தில் என்றோ நான் கேட்ட, ‘கடிதத்திற்கு இலக்கியத் தன்மை இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு மிக அழகாக பதில் எழுதியிருக்கிறாய். கடிதத்திற்கு இலக்கியத்தன்மை என்பது தேவையில்லை தான். நான் எழுதியதை நீயும், நீ எழுதுவதை நானும் படித்தால் போதுமானது. கடிதத்தின் பங்கே அதுதான். அடுத்தவரின் அந்தரங்கக் கடிதங்களை புத்தகங்களாக வெளியிடுவது பற்றி வன்மையாக கண்டித்திருந்தாய். இதில் எனது நிலையும் ஒன்று தான். ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக, அதிலும் அவர் பிரபலம் என்பதற்காக நாம் அவர்களுடைய கடிதங்களை புத்தகங்களாக வெளியிடுவதை எந்த வகையில் நியாயப் படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.

கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி கடிதம் எழுதியிருப்பாளே, எவ்வளவு அழகாக எழுதியிருப்பாள்? ‘வாரத்துக்கு ஒரு முறையாவது குளி... சாக்ச தொவச்சி போடு..” என்ற வரிகள் எத்தனை அற்புதமானவை. எத்தனை அன்பு மனதினில் தேங்கிக் கிடந்தால் இத்தனை அழகான வரிகள் வெளிப்படும்? இப்படிப்பட்ட ஒரு கடிதமாவது உனக்கு வந்ததுண்டா? காதல் நிரம்பி கடிதத்தில் எழுத்துகளாய் வழிய, அதை வாசித்தபடியே அதனுள் மூழ்கியதுண்டா??? அப்படி உனக்கு கடிதம் ஏதாவது வந்திருந்தால் நீ பெரும் பாக்கியசாலி. அப்படி ஏதாவது கடிதம் வந்திருந்தால் நிச்சயம் என்னுடன் பகிர்வாயாக J.

கடந்த ஞாயிறு அன்று மிருதன் படம் பார்த்தேன். படத்தின் கிளைமாக்சில் நம்ம ஹீரோ சோம்பிக்களிடமிருந்து காதலியைக் காக்க தனது உயிரையே பணயம் வைப்பான். அப்போது ஒரு பாட்டு பின்புலமாக ஒலிக்கும். “மிருதா... மிருதா...” என்றாரு பாடல். ஏனோ தெரியவில்லை, அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. காலங்கள் மாறினாலும் காதலிக்கு ஒரு ஆபத்தென்றால் உயிரைப் பணயம் வைக்கக் கூட தயங்காத அச்சு அசல் தமிழ் காதலனின் பிம்பன் அந்த மிருதன். வாய்ப்பு கிடைத்தால் மிருதன் பார். அதிலும், அந்த கிளைமாக்ஸ் பாடலுக்காகவாவது ஒரு முறை படத்தினைப் பார். என்னை நெகிழச் செய்த பாடல் அது...

உனக்காக அந்தப் பாடலின் ஒரு வரி...

“உன் காதலை உயிருடன் கொல்வாயா?

இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா?

இவள் கண்களின் முன்னே சிதைவையா? மிருதா....”

“நான் அழுகை அல்ல...

நீ சிரிப்பும் அல்ல....

இரண்டுக்கும் நடுவில் கதறல் அது....”

ஒரு முறை இப்பாடலைப் கேட்டுப் பார். உனக்கும் பிடித்துப் போகலாம். முடிந்தால் அந்தப் பாடலை காட்சியுடன் கேட்க முயற்சி செய்.

‘தீராக் காதலி’ பற்றி குறிப்பிடும்போது சுந்தராம்பாள் பற்றியும் எழுதியிருந்தாய். எத்தனை உயர்வான காதலாக இருந்திருந்தால் மூன்று ஆண்டுகள் மட்டுமே கந்தர்வனாக வாழ்ந்து மறைந்த கிட்டப்பாவுக்காக நாற்பத்து ஏழு ஆண்டுகள் விதவைக் கோலம் பூண்டிருப்பாள்? அவளது காதல் எத்தனை வலிமையானதாக இருக்கும்? இப்படிப்பட்ட காதலை நீ எங்காவது நேரில் கண்டதுண்டா கடல்?

நான் கண்டிருக்கிறேன்.

எனது தோழி ஒருவர் சுவிசில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால், தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர். அவளது காதலன் விடுதலைப் போராளி. விடுதலைப் போரில் அவர் இறந்துவிட்டார். இறந்து விட்டார் என்று கூறுவதை விடவும் அவர் காணாமல் போய் விட்டார் என்று கூறினால் சரியாக இருக்கும். தமிழ் ஈழப் போரில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான வீரர்களைப் போன்றே அவரைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. இவள் காத்துக் கொண்டிருந்தாள். காலங்கள் கடந்தும் அவன் திரும்பி வராததால் அவனது பாதையில் இவளும் ஆயுதத்தை எடுக்க ஆயத்தமானாள். மகளின் நிலையைப் பார்த்து பயந்த எனது தோழியின் பெற்றோர் அவளை பலவந்தமாக சுவிசுக்கு அனுப்பி விட்டார்கள். போரில் காணாமல் போன தனது காதலனுக்காக இன்னும் அவள் காத்துக்கொண்டிருக்கிறாள்.

என்னிடம் கடைசியாக தனது காதலன் பற்றி அவள் கூறியபோது கூறியது வார்த்தை இதுதான். “அவர் காணாமல் போனது கூட எனக்கு அதிகம் வருத்தம் இல்லை வெற்றி. எங்கட விடுதலைப் போரில் வீரர்கள் காணமல் போறது இயல்புதான். விடுதலைப் போரில் அவர் இறந்திருந்தால் அதற்காக நான் பெருமைப்படுகிறேன். போரில் இறந்துபோனார் என்பதற்காக நான் ஒருநாளும் கலங்க மாட்டேன். ஆனால் எனக்கு வருத்தம் என்பதெல்லாம் அவருக்குப் பிறகு அவருக்காக தமிழ் மண்ணில் விடுதலைப் போரில் பங்கு பெற ஒரு மகனை அவர் எனக்கு அளிக்காமல் சென்று விட்டாரே என்பதுதான்.”

எத்தனைப் பெரிய காதல் இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிவரும்? நான் பலமுறை நினைத்துக்கொள்வேன். மேலே கூறிய எனது சுவிஸ் தோழி போன்றவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று. வாழ்வில் ஒரு முறை காதல் சுவாசத்தை சுவாசிக்க நேர்ந்தாலும், இப்படிப்பட்ட காதலைத் தான் சுவாசிக்க வேண்டும் கடல்.

எதையோ எழுத நினைத்து எதற்கோ தாவி விட்டேன். இன்னும் தொடர்ந்தால் கடிதம் நீண்டும் விடும்.

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நண்பா...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

3 comments:

  1. வணக்கம்

    நன்றாக உள்ளது தொடருங்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான கடிதம் வெற்றி. உன்னதமான காதலைப் பற்றிச் சொல்லியவிதமும் செம. கடித இலக்கியம் என்பது இப்போது மறைந்து போயிருந்த ஒன்று அதை நீங்கள், மற்றும் மீரா செல்வகுமாரும் எழுதி வருகிறார். தொடருங்கள் வெற்றி...

    ReplyDelete
  3. அடுத்த தடவை நண்பர்க்கு உடனே பதில் எழுதிட வேண்டும்...

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...