Dec 30, 2015

திறந்த மடல் - 1

அன்பு தோழர் சீனு அவர்களுக்கு,

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அப்பா சென்னையில் இருக்கும்போது அவர் மாதாமாதம் வீட்டிற்கு கடிதம் எழுதுவார். அதை நான்தான் வாசித்துக்காட்டுவேன். அப்போதெல்லாம் நான் சிறு பையன். அப்பா எழுதும் கடிதத்தை என்னால் வாசிக்க மட்டும் முடியும். பதில் எழுத தெரியாது. மாமா தான் பதில் எழுதுவார். நான் பதில் எழுதுகிறேன் என்று கூறிக்கொண்டு எழுதினாலும் அதில் ஊறுபட்ட பிழை மண்டிக்கிடக்கும். மாமா அதைக் கிழித்துவிட்டு அவர்தான் எழுதி அனுப்புவார். இருந்தாலும் எனக்குள் கடிதம் எழுத வேண்டும் எனும் ஆவல் மட்டும் நீடித்துக்கொண்டே இருந்தது.நான் அடம்பிடிக்கும்போதெல்லாம் 'அப்பா தான் சிங்கப்பூர் போராருள்ள அப்போ நீ அவருக்கு எழுதலாம்!' என்று கூறி மாமாவை எழுத வைத்துவிடுவார். எனக்கும் சிங்கப்பூர் கடிதம் என்று கூறியதும் அதில் பெருமிதமும் வந்துவிடும். அப்பா எப்போது சிங்கப்பூர் செல்வார் எப்போது கடிதம் எழுதலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் சிங்கப்பூர் பயணம் ரத்தாகிவிட்டது. கட்டிய பணம் பற்றி அம்மா, அப்பா என அனைவரும் வருத்தப்பட்டாலும் 'சிங்கப்பூருக்கு கடிதம் எழுத முடியாதே' என்று தான் நான் கவலைப்பட்டேன். வளர்ந்து கல்லூரி சேர்ந்த காலத்தில் என் காதலிக்கு (அப்போது தோழி) ஒரு மின்மடல் அனுப்பி வைத்தேன். அதற்கு பதிலே இல்லை. அதன்பிறகு இரண்டு வருடம் கழித்து எழுதிய நீண்ட மடலுக்கும் பதில் இல்லை. என்ன மடலில் கேட்டாலும் போனில் பதில் வந்துவிடும்.

இப்போது தாங்கள் எனது கடிதத் தாகம் எப்படிப்பட்டது என்று தாங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் நான். இனி யார் பதில் எழுதினாலும், எழுதாவிட்டாலும் கடிதம் மட்டும் எழுதலாம் எனும் நிலைக்கு வந்துவிட்டேன். இல்லை இல்லை தள்ளப்பட்டுவிட்டேன் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அதிலும் கடந்த இரண்டு வருட காலமாக வானவல்லி புதினத்தை தினமும் எழுதி பழக்கப்பட்டுப் போன எனது பத்து விரல்களும் எப்போதுமே எழுதிக்கொண்டு இருக்கவே பிரயப்படுகின்றன. வார்த்தைகள் குன்றி, எண்ணங்கள் வற்றிப்போய் எழுத்துகள் என்னை நிராதவராக தள்ளிவிட்டு சூழலில் கூட என் கரங்கள் எழுதவேண்டும் என நச்சரிப்பதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் கூறுங்களேன்!

தாங்கள் தென்காசியில் பெண் பார்க்க சென்றிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். அந்த சூழலிலிலும் தாங்கள் FBல் கடமை ஆற்றுவதைக் கண்டு அடியேன் மிரண்டுபோய் இருக்கின்றேன். அதிலும் தங்களை 18% பெண்கள் தான் பின்தொடர்கிறார்கள் என்பதை பார்த்ததிலிருந்து நான் சொல்லொனாத் துயரில் ஆழ்ந்துகிடக்கிறேன். ஷைனிங் ஸ்டார் சீனுவிற்கே இந்த நிலை என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

சரி, இனி எழுத வந்த கடிதத்திற்கு வரலாம் என்று இருக்கிறேன். தோழரே, பத்து நாள் பணி நிமித்தமாக முதூல் என்னும் இடத்திற்கு வந்திருக்கிறேன். கிருஷ்ணை நதிக்கரையின் தென் பகுதியில் பாகல்கோட்டை என்னும் மாவட்டத்தில் மகாராஷ்டிரா எல்லைக்கு அருகில் கருநாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் வளமான பகுதி. நிலம் மட்டுமே வளமானது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரும்பு பயிர் தான். இருந்தாலும், கோதுமை, மக்காச்சோளம், சாமந்திப் பூவையும் அறுவடை செய்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு எருமை, சில ஆடுகள், அவற்றுடன் பல பன்றிகள் என்று வளர்க்கிறார்கள். நம் ஊரில் எப்படி வீட்டிற்கு வீடு ஆடு வளர்க்கிறார்களோ அப்படித்தான் இங்கு வீட்டிற்கு வீடு பன்றி வளர்க்கிறார்கள். நிலம் மட்டுமே வளமானது மற்றபடி இங்கு வாழும் மக்கள் அவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மட்டமாகவே இருக்கிறது. அருகில் இருக்கும் சில தொழிற்சாலைகளால் எப்போதும் பறந்துகொண்டிருக்கும் தூசிகள், நிலம் முழுவதும் படிந்துகிடக்கும் தூசி மற்றும் கருந்துகள், நேரடியாக குடிக்க முடியாத நிலத்தடி நீர் என நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசுபட்டு கிடக்கும் பசுஞ்சோலை இது. பன்றிகளை வளர்ப்பதாலோ இங்கு காணப்படும் வீடுகளில் பெரும்பாலும் கழிவறை வசதி இருக்கவில்லை. அனைவரும் காலையில் கையில் ஒரு பிளாஸ்டிக் சொம்புடன் கருவேல மர மறைவிடத்தை நோக்கி செல்கிறார்கள். அவர்களுடன் அவர்கள் வளர்க்கும் பன்றிகளும் பின்தொடர்ந்து செல்கின்றன.

நிலம் வளமானதாக இருப்பதால் தஞ்சையைப் போன்று இந்த ஊர் கன்னிகளும் வனப்பு மிக்கவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அது நிச்சயம் நமக்கு பெரும் ஏமாற்றத்தையே அளிக்கும். நான் அப்படித்தான் நினைத்து ஏமாந்துபோனேன்.

கன்னிகளைப் பற்றி கூறும்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. ஒரு முறை சீன நாடோடி யுவான் சுவாங் பாரத தேசத்திற்கு வரும்போது ஒருவன் தன் உடலெங்கும் இரும்புப் பட்டைகளைக் கட்டிக்கொண்டு நடந்துகொண்டிருந்தானாம். அவனிடம் அதன் காரணத்தைப் பற்றி கேட்கும்போது, "மற்றவர்களை விடவும் எனக்கு அறிவு அதிகம். அறிவு மிகுதியால் எனது உடல் வெடித்துவிடாமல் இருக்கத்தான் இந்தப் பட்டைகளை எனது உடலில் நான் கட்டியிருக்கிறேன்" என்று பதில் அளித்தானாம்.

அந்த நிகழ்வைப் போன்றே இங்கு நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளைப் பெண் என்று அழைப்பதை விடவும் மோகினி அல்லது ஏந்திழை என்று கூறினால் தகும் என்று நினைக்கிறேன். வயது கிட்டத்தட்ட இருபது இருக்கலாம் (???). சற்றே வெளிறிய சாமந்திப்பூவின் சிவப்பு நிறம். அவளது மெல்லிய இடையில் தொப்புளுக்கும் கீழே இறங்கிக் கட்டிய மெல்லிய பாவாடை, அவளது செழித்த மார்புகளை மறைத்தும் மறைக்காமலும் அணிந்திருந்த இருக்கமான ரவிக்கை. சற்றே நீண்ட தாவணி ஒன்றை இடையின் வலது பக்கத்தில் சொருகு முதுகு பக்கமாக கொண்டு சென்று கழுத்து வழியாக சுற்றி முகத்தை மட்டும் மறைத்திருந்தாள். (முகத்தைப் பார்த்திருந்தால் ஒரு வேலை அவளை நான் கன்னி என்றோ அல்லது மோகினி என்றோ அல்லது ஏந்திழை என்றோ கூறியிருப்பேனா என்பது சந்தேகமே!). அழகு என்பது முகம் மட்டும்தான், செழித்து வளர்ந்த மற்ற பேரழகுகளை விடுத்து முகத்தை மட்டும் மறைத்தால் போதும் என்று அவளுக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் என்னை சில வினாடிகளில் கடந்து சென்று விட்டாள். ஆனால், நான் இன்னும் அந்த இடத்தைக் கடக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறேன். அவளைப் போன்றே சில பெண்களை உத்ராகாண்டிலும், சிலரை மும்பையிலும் பார்த்திருக்கிறேன். உடலில் எது தெரிந்தாலும் முகத்தை மட்டும் மற்ற ஆடவர்கள் கண்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த சிரத்தையுடன் இருக்கிறார்கள் என்பதை ஒருவாறு சிந்தித்து அறிந்துகொண்டேன். ஒருவேளை இந்த பழக்கம் அவர்களது கலாச்சாரமாகக் கூட இருக்கலாம். அதைப்பற்றி நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. அவர்கள் இதற்குப் பெயர் தான் கற்பு என்று கூட பெயர் வைத்திருக்கலாம்.

தோழரே, கற்பு என்று கூறும்போது தான் எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது. கற்பு என்ற சொல்லுக்கு கற்றுக்கொள்ளுதல் என்று தானே பொருள். அதிலும் சங்க இலக்கியத்தில் காதலை களவு-கற்பு என்று தானே வகைப்படுத்தியிருக்கிறார்கள். களவு என்பது திருமணத்திற்கு முன்பு காதலர்களின் வாழ்க்கை நெறியும், கற்பு என்பது திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை முறை என்று தானே தொல்காப்பியர் வகுத்திருக்கிறார். அதைத் தானே நமது தாத்தா திருவள்ளுவரும் பின்பற்றியிருக்கிறார். இதற்கு மேலும் நான் 'கற்பு' என்ற சொல்லை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
- என்று வள்ளுவன் கூறிய இன்ப வதையைப் பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள். அந்தப் பேரின்பத்தை மருந்தே இல்லாமல் நோயுடன் மட்டும் கடந்த அனுபவம் இருக்கிறதா???

கடந்த கடிதத்திற்கு பதில் இல்லை. இந்தக் கடிதத்திற்கு தாங்கள் பதில் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் இனி தொடர்ந்து கடிதங்கள் உங்களுக்கு வந்துகொண்டிருக்கும் என்பதை இங்கு கூறிக்கொள்ள விழைகிறேன்.

அன்புடன்

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

3 comments:

 1. இது ஏதோ பூடகமா ஒரு செய்தி சொல்லுவது போல இருக்கே உங்க தோழருக்கு!!!

  ReplyDelete
 2. நான் அடுத்தவங்க லெட்டரை எல்லாம் படிக்கமாட்டேன் ப்பா! கலைஞருக்குப் போட்டியாக இம்புட்டு கடிதம் எழுதும் புலியை தூண்டிஇருக்கிறீர்களே !! ரெண்டுபேருமா தெறிக்க விடுங்க !

  ReplyDelete
 3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...