Sep 25, 2014

சிறுகதை: பேய்

என்றுமில்லாமல் திடீரென்று மாலையில் சிறப்பு வகுப்பு வைத்து தாமதப்படுத்திவிட்டதனால் பள்ளிக்கூடம் முடிந்து ஊருக்கு வரும் நகரப் பேருந்தைத் தவறவிட்டு, கடைசிப் பேருந்தை பிடித்து அப்போதுதான் ஆளரவமற்ற அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியிருந்தேன். இன்னும் இரண்டு கி.மீ சைக்கிள் மிதித்தால் தான் எனது ஊருக்குச் செல்ல முடியும். ஏழு மணியோடு கடைசி பேருந்தும் என் கிராமத்திற்குச் சென்று திரும்பிவிடும்! சந்தில் நிறுத்தியிருந்த சைக்கிளின் கேரியரில் கையிலிருந்த இரண்டு நோட்டுகளையும் வைத்துவிட்டு, சைக்கிளை வெளியே எடுத்தபிறகு, தனியாக எப்படிச் செல்வது என்ற யோசனையிலே தயக்கத்துடனே யாராவது துணைக்கு வருவார்கள் என்று பயத்துடன் நின்றுகொண்டிருந்தேன். வாட்சில் மணி பார்த்தேன். பெரிய முள் ஒன்பதைத் தாண்டியும் சிறிய முள் எட்டிற்கு அருகிலும் நின்றுகொண்டிருக்க நொடி முள் வேகவேகமாக ஓடிக்கொண்டு இருந்தது! ஊருக்குச் செல்பவர்கள் பேருந்தைத் தவறவிட்டு  என்னைப்போலவே யாராவது வருவார்கள் என்று காத்திருந்து பார்த்தேன். நேரம் நொடி முள்ளைப் போன்று வேக வேகமாக ஓட எனக்குள்ளும் பயம் அதிகமாகிக்கொண்டிருந்தது.
மீண்டும் மணியைப் பார்த்தேன். இப்போது பெரிய முள் பத்திலும், சிறிய முள் ஒன்றிலும் தஞ்சமடைந்திருந்தது.
இனியும் யாரும் துணைக்கு வரப்போவதில்லை என முடிவெடுத்துக்கொண்டு சைக்கிளை குரங்கு பெடலில் மிதிக்க ஆரம்பித்தேன். சைக்கிள் வெளிச்சமே இல்லாத இருள் அடர்ந்த இரண்டு கி.மீ இடைப்பட்ட காட்டிற்குள் செல்ல செல்ல என் மனதில் இருந்த தைரியங்களும் மெல்ல மெல்ல விலகி பயம் என்னை முழுவதும் ஆட்கொள்ளத் தொடங்கியது. பயத்தில் உடல் வியர்த்திருந்ததால் செருப்பணியாத பாதமும் நனைந்து பெடலிலிருந்து இரண்டு மூன்று முறை வழுக்கப் பார்த்தது! இன்னும் கொஞ்ச தூரம் தான் என்ற நம்பிக்கையில் வேக வேகமாக சென்றுகொண்டிருக்க தூரத்தில் திடீரென்று மரங்களின் இடைவெளியில் தீச்சுடர் தோன்றி கண்களிலிருந்து மறைந்தது! தூரத்தில் எழுந்த நாயின் ஊளைச் சத்தம் வேறு  காதுகளை ரணமாக்கியது.
“அந்தப் பக்கம் தானே ஓடையோரமாக சுடுகாடு உள்ளது, சுடுகாட்டில் தான் பிணம் எரிந்துகொண்டிருக்கிறதா? அல்லது கொள்ளிவாய்ப் பிசாசு என்பார்களே அதுதான் இதுவா?” என்ற கேள்விகள் என்னுள் எழ வீசிய மார்கழி மாத குளிர்ந்த காற்றில் வியர்த்திருந்த உடல் சற்று நடுங்கவே செய்தது. அப்போது ஏற்பட்ட நடுக்கம் பயத்தினாலா அல்லது குளிர்ச்சியினாலா எனத் தெரியவில்லை! அங்கிருந்து வீடு சென்று சேர்ந்தால் போதும் என்ற நினைப்பில் பெடலை மிதித்துக் கொண்டிருந்தேன்.
வழியினில் பெரிய புளியமரம் ஒன்று இருளில் அடர்ந்து கருத்துப் பெரிய பூதம் போன்று சாலை முழுவதும் படர்ந்து மிரட்டிக்கொண்டு நின்றது. தூரத்திலிருந்து அதனைப் பார்க்கும் போது என்னை விழுங்கக் காத்திருக்கும் பெரிய கருத்த பிசாசினைப் போன்றே எனக்குத் தோன்ற பயம் கணத்திற்கு கணம் தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்த ஒற்றைப் புளிய மரத்தைத் தாண்டிவிட்டால் போதும் அப்புறம் எந்த பயமும் இல்லை என்ற நினைப்பில் மேலும் வேக வேகமாக மிதிக்க முயன்றேன். குரங்கு பெடலில் மிதித்ததால் உடலும் களைத்திருந்தது. எவ்வளவு வேகமாகப் பெடலை மிதித்தாலும் எதிர்காற்றில் சைக்கிள் நகருவதைப் போன்றே தோன்றியது எனக்கு! புளிய மரம் நெருங்க நெருங்க அப்புளிய மரத்தைப் பற்றி நான் கேட்ட பல பேய்க் கதைகள் என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியன!
‘புளியம் பழம் பறிக்கும் போது தவறி விழுந்து செத்த மாரிமுத்து’ ‘வெள்ளையம்மாவுக்கு பேயி புடிச்சதால போன மாசம் தான இந்த மரத்துல ஆணி அடிச்சாங்க’ ‘ஐசு வித்துப்புட்டு வந்த கோணங்கி தாத்தாவும் இந்த மரத்துல தான பேய பாத்ததா சொல்லி யாரும் அந்தப் பக்கம் போகாதீங்கன்னு எச்சரிக்கை செய்தாரு’ ‘குடிகார புருஷன் அடிச்சுக் கொன்ன மாரியம்மா இப்ப இந்த புளிய மரத்துலதான் பிசாசா இருக்குன்னு அங்கனூரு மந்திரவாதி சொன்னாரே’னு பல கதைகள் ஞாபகம் வர அதிவேகமாக மிதிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அந்த பயங்கர சத்தம் காதுகளில் விழுந்தது. உயிரை உடலிலிருந்து பிரித்துவிடுவதுமான ஓர் கொடூரமான “பொத்”தென்ற சத்தம். எனக்குப் பின்னால் கேட்டது! அதே நேரத்தில் இடது புற வேலியில் சலசல என்ற சத்தம். உயிர் போய் திரும்பியது எனக்கு. உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிவிடலாமா எனக் கூட சிந்தித்தேன். சைக்கிளில் இருக்கும்போது பேயி புடிக்காதுன்னு தாத்தா சொன்ன தகவல் அந்நேரத்தில் நினைவிற்கு வர ஓடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். பதற்றத்தில் இதயம் துடிக்கும் சத்தம் எனக்குக் கேட்கவே செய்ய உடலிலிருந்த அனைத்து பலத்தையும் கால்களில் திரட்டி சைக்கிளை மிதிக்க விர்ரென்று செல்லத் தொடங்கியது. குரங்கு பெடலில் வேக வேகமாக மிதித்ததால் சைக்கிள் தட தடவென ஆடியது. மீண்டும் அதே ‘தொப்’பென்ற சத்தம். இந்த முறை உயிரை உறைய வைத்துவிட்டுச் சென்றது. பேய் அறைந்து பலர் இறந்துவிட்டதாக கூறுவார்களே? பேய் அறைந்தால் இப்படித் தான் அறையுமா என்ற கேள்வி அப்போது எனக்குள் எழுந்தது! திடீரென்று எனக்கொரு கேள்வி. ‘நான் உயிரோடு தான் இருக்கிறேனா?’ என்று! குரங்கு பெடலில் மிதிக்கும் போது சைக்கிளின் மர்க்காடு உரசும் சத்தம் கேட்க, ‘ஆமாம்! ஆமாம்! இது எனது சைக்கிள் சத்தம் தான். நான் இன்னும் இறக்கவில்லை. பேய் என்னை அறையவில்லை என்று உறுதிசெய்து கொண்ட நான் நடுக்கத்துடனே வந்துகொண்டிருந்த போது சற்றுத் தொலைவில் தெரு விளக்கு தெரிய ஆரம்பித்தது! சாலை ஓரத்தில் பீடி குடித்துக்கொண்டு ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போதுதான் போன உயிர் எனக்கு மெல்லத் திரும்பி வர ஆரம்பித்தது. பயமும் விலக ஆரம்பித்து, தைரியம் வரத் தொடங்கியது. ‘நாளைக்கு ஊரு பசங்ககிட்ட நம்மள அடிச்ச பேயி கதைய சொல்லிட வேண்டியதான்னு’ நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்த்தேன். 

பேயிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சியுடனே சைக்கிளை நிறுத்திவிட்டு இரண்டு நோட்டுகளை எடுக்கலாம் என நினைத்து கேரியரைப் பார்த்தேன். அங்கே இரண்டு நோட்டுகளையும் காணவில்லை!10 comments:

 1. வணக்கம்
  தம்பி

  கதையின் கற்பனையோட்டம் நன்றாக உள்ளது இறுதியில் திகிலாக முடிந்துள்ளது பேய் கதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. விருவிருப்பு அதிகம். சுவாரஷ்யமாக இருந்தாலும் முடிவு எதிர்பார்த்ததுதான்.
  சேமம் எப்படி பாஸ் :)

  ReplyDelete
 3. ஹா....ஹா...ஹா... நன்று. (முதல் 'பொத்' திலேயே யூகிக்க முடிந்தது)

  ReplyDelete
 4. சுவாரஸ்யம் குறையவில்லை. மனதில் எழும் பயத்திற்குத் தான் பேய் என்று பெயர் என்கிற உளவியல் உண்மையை அழகாகத் தொட்டுக் கதை சொல்லியிருக்கீங்க வெற்றி.... தொடர்ந்து இதுபோன்ற சிறுகதை முயற்சிகளில் தாராளமாக இறங்கலாம் நீங்க...

  ReplyDelete
 5. அட...
  வெற்றி..
  சிறுகதை தொடக்கமா...!!
  கலக்கு பா...
  நன்றாக இருக்கிறது..
  நடை மற்றும் எழுத்துக் கோர்வையில்
  எழுந்துள்ள மாற்றங்கள் அதிசயிக்க வைக்கிறது..
  வானவல்லி கொடுத்த பரிசு...
  ==
  நமக்கு நாம் தான் பேய் என்று உரைக்கும்
  அருமையான கதை..

  ReplyDelete
 6. அருமையாவே எழுதறீங்க! தொடருங்கள்!

  ReplyDelete
 7. அருமையான பதிவு
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
 8. அருமை தம்பி! அப்போ விழுந்தது நோட்டுதான்னு எங்களுக்குச் தொரிஞ்சு போச்சு அரண்டவன் கண்ணுக்கு இருண்ட்தெலாம் பேய் நு சைக்கிள ஓட்டின அப்படித்தான் ஹாஹஹஹ்

  ReplyDelete
 9. அருமையான சிறுகதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 10. வரலாற்று நீள் கதை ..... பேய்க் கதை .... அடுத்து என்னவோ?

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...