Aug 17, 2013

நாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா? சில கேள்விகள்...!


அனைவருக்கும் வணக்கம், எனக்குள் பல நாட்களாக தோன்றிக்கொண்டிருந்த கேள்விகளின் பதில் தான் இந்த பதிவு. அனைவரும் கூறுகிறார்கள் தமிழ் மொழி தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று. இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழின் தடமே அழிந்துவிடும். அதாவது தமிழ் பேச்சு வழக்கிலிருந்து அழிந்து, அது தற்போதுள்ள சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் லத்தீன் போன்று ஏட்டளவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அது தன் சுய மதிப்பை இழந்துவிடும் என இன்னும் பலவாறு வதந்திகள் நீண்டுகொண்டே இருக்கிறது... ஆனால் எனக்கு இவற்றில் உடன்பாடு என்பது சிறிதும் இல்லை...

நீங்களே யோசித்துப் பாருங்கள், அதாவது நமது தாத்தா பாட்டி காலத்தில் தமிழ் அனைவருக்கும் பேசத் தெரியும். ஆனால், எத்தனை பேருக்கு எழுத படிக்க தெரியும்? உங்கள் தாய், தந்தையர், தாத்தா பாட்டி இவற்றில் எத்தனை பேருக்கு கையொப்பம் இடத் தெரியும். ஊரில் அதாவது ஒரு சிலருக்கு மட்டுமே தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். எங்கிருந்தோ தூரத்து சொந்தத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தாலும், படிக்கத் தெரிந்த அந்த ஓரிருவரைத் தேடி காடு மலையெல்லாம் அலைந்த காலங்களை நம் தாத்தாமார்கள் கூறும்போது வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் கேட்டிருக்கிறேன்... ஆனால் தற்போதுள்ள நிலைமையை சற்று எண்ணிப் பாருங்கள்.


தமிழ் பேச, எழுத, படிக்க தெரியாமல் நம்மில் யாரையாவது அடையாளம் காண இயலுமா? பார்ப்பனர்களுக்கும், ஊரில் ஜமீன் தார்களுக்கும் படிக்க எழுதத் தெரிந்த மொழி இன்று அனைத்து மக்களும் அறியும் வண்ணம் வளர்ந்துள்ளது. மொழிக் கலப்பு என்பது ஆண்டாண்டு காலமாகவே இருந்து வருவது, அதனை நம்மால் முழுவதுமாக தடுத்து நிறுத்த முடியும், போதிய விழிப்புணர்வு என்பது தற்போது நம்மில் பலருக்கும் வந்துள்ளது. ஆக மொழிக்கலப்பு என்பது தற்போது பிரச்சனை இல்லை. ஏனெனில் ஒரு மொழி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கலப்பை அனுமதிக்கும், பிறகு அதுவே தனது நிலையை சரி செய்து கொள்ளும்...




அடுத்து தமிழ் தனது அடுத்த பரிமாணமான இணையத்-தமிழாக உருவெடுத்துள்ளது. மற்ற மொழிகள் போல் அல்லாது தமிழ் தன்னை ஒவ்வொரு கட்டத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பை தமிழ் இயற்கையாகவே கொண்டுள்ளது. ஒருகாலத்தில் இயல் தமிழ், பிறகு இசைத் தமிழ், பிறகு நாடகத் தமிழ் தற்போது இணையத் தமிழ். 


தேர்ந்த பண்டிதர்கள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த கவிதை, கட்டுரை, இலக்கியம் எல்லாம் தற்போது பாமர மக்களும் அறியும் வண்ணம் அனைவராலும் எழுதப் படுகிறது... தற்பொழுது இணையத்தினால் அடுப்படியில் முடங்கிக்கிடந்த, வயல் வரப்பில் தேங்கிக் கிடந்த கவிதைகள் நாட்டுப் புறப் பாடல்கள் அனைத்தும் அனைவரும் அறியும் வண்ணம் அரங்கேற்றப் படுகிறது... இன்னும் பலவாறு தமிழ் தன்னை காலத்திற்கு ஏற்ப தனது இயல்பை, தானாக மாற்றிக் கொண்டே இருக்கும் வரை தமிழ் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்...


மேலும் அக்காலத்தில் படிக்கத் தெரிந்த சிலரில் புலவர்களாகவும், அறிஞர்களாகவும் ஆகினர், ஆனால் இக்காலத்தில் அனைவருக்கும் படிக்கத் தெரிகிறது அவர்களில் பலர் பல்வேறு துறைகளுக்கு தமிழை அழைத்துச் செல்கின்றனர், உதாரணமாக தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மென் துறையை எடுத்துக்கொள்வோம். பல கலைச்சொற்கள், தொழில்நுட்ப பெயர்கள் தமிழிலும் தோன்றி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வழங்கி வரும் அகவி (கைத் தொலைபேசி), கணினி போன்ற பல மின்னணு சாதனங்கள் பலவற்றிலும் தமிழ் உள்ளீடு மொழியாகவும், செயல்பாட்டு மொழியாகவும் விளங்கி வருகிறது... இவை தற்பொழுது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது, ஆக தமிழ் தனது அடுத்த பரிமாணமான இணையத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகிறது...




ஆக தமிழ் கடந்த காலங்களை விட இக்காலத்தில் வளர்ச்சியையே அடைந்து வந்துகொண்டிருக்கிறது, தமிழ் தேய்ந்து வருகிறது என்பது மாயத் தோற்றமே... அதுவும், நமக்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் இடையில் ஏற்ப்பட்ட இடைவெளிதான் காரணம். 

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


56 comments:

  1. Anonymous10:02:00 PM

    உலகம் அழியும் வரை தமிழ் அழியாது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அசோக் குமார்,

      தாங்கள் கூறுவது உண்மைதான்... தமிழ் அழியவே அழியாது... உலகமே அழிந்தாலும், தமிழ் அழியாது...

      தங்கள் இனிய முதல், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....

      Delete
  2. //உதாரணமாக தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மென் துறையை எடுத்துக்கொள்வோம். பல கலைச்சொற்கள், தொழில்நுட்ப பெயர்கள் தமிழிலும் தோன்றி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வழங்கி வரும் அகவி (கைத் தொலைபேசி), கணினி போன்ற பல மின்னணு சாதனங்கள் பலவற்றிலும் தமிழ் உள்ளீடு மொழியாகவும், செயல்பாட்டு மொழியாகவும் விளங்கி வருகிறது... இவை தற்பொழுது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது, ஆக தமிழ் தனது அடுத்த பரிமாணமான இணையத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகிறது...//

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள். தமிழ் என்றும் அழியவே அழியாது.

    திரு. அசோக் குமார் அவர்கள் மேலே சொல்லியுள்ளது போல ’உலகம் அழியும் வரை தமிழ் அழியாது’.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      ஆமாம், உண்மைதான். தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. பாரதி சொன்னதை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். அவர் சொன்னது தமிழ் இனி மெல் லச்சாகும். அதாவது தமிழ் இனி மெல்ல அச்சாகும். எழுத்தறிவு புரட்சியே அவர் சொன்னது. அதையே இன்று நாம் காண்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. "தமிழ் இனி மெல் லச்சாகும்" நன்றி அண்ணா... உண்மையான அர்த்தத்தை அறிந்து கொண்டேன். ஆமாம் பாரதி கண்ட கனவு இப்போது நம் வாயிலாக மெய்யாகிக்கொண்டிருக்கிறது... மகிழ்ச்சியாக உள்ளது...

      மிக்க நன்றி அண்ணா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்... தங்கள் தகவல் அளப்பரியது...

      Delete
  4. அருமையா ஆய்வு செய்து எழுதி இருக்கீங்க நண்பா! தமிழ் அழியவே அழியாது...!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராஜீவன் அண்ணா...

      தமிழ் அழியாது தான்... இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. Anonymous11:49:00 PM

    உரைப்போர்க்கும் உணர்வோர்க்கும்
    அமுதச் சுவையதனை உய்யும்
    உயர்திணைச் செம்மொழியாம்!

    படைப்போர்க்கும் பகிர்வோர்க்கும்
    பண்பதனை பாங்குறவே
    பயிற்றுவிக்கும் பண்மொழியாம்!

    கற்பாறை மீதினிலும் தகட்டு ஓலையிலும்
    ஏட்டினிலும் கணினி யுகத்திலும்
    கலங்காமல் வீற்றிருக்கும் கன்னி மொழியாம்!

    இடர்கள் பல வந்தாலும் தோற்றம்
    மாற்றங்கள் பல கொண்டாலும் காலத்தை வென்று
    கொலு வீற்றிருக்கும் எங்கள் கவின் மொழியாம்!

    தமிழன் கொண்டது உயர் பண்பாடு
    எம் மொழிக்கில்லை ஏதும் கட்டுப்பாடு
    நித்தம் நித்தம் நீ இப்பண்ணைப் உரக்கப் பாடு.

    வாழ்க தமிழ்! வெல்க தமிழினம்!




    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தமிழ் பற்றிய தங்கள் கவி மிகவும் அழகாக உள்ளது.... வந்தவர் தங்கள் பெயரை மட்டுமாவது சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.

      உங்களுக்கு என் நன்றிகள், வருகைக்கும் கருத்துக்கும்...

      Delete
  6. Anonymous12:13:00 AM

    உலகமே அழிந்து புல் பூண்டற்றுப் போனாலும் ,பிரளயமே வந்து இப்பூவுலகைப் புரட்டிப் போட்டாலும் எம் பூட்டன பந்திந்த கல் ஏடுகள் இப் பிரபஞ்சத்தில் எங்கேனும் கண்டெடுக்கப்படும் ,அங்கு எம் தமிழ்த்தாய் மறுபிறவி எடுப்பாள்,தமிழ் நின்று நிலை பெற்று வாழும்.
    வாழ்க தமிழ்!வாழ்க வையகம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்... அழகான விளக்கம். நம் முன்னோர்கள் நம் தாய் மொழிக்கு நம்மை விட சிறப்பான அடித்தளத்தை அமைத்துவிட்டுச் சென்றுள்ளனர்... அந்த நிலையை அப்படியே நாமும் பின்பற்றி செல்வோமாக...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகைத் தொடரட்டும்... மிக்க மகிழ்ச்சி...

      Delete
  7. ஆழமான சிந்தனை
    அருமையான விளக்கம்
    நம்பிக்கையூட்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வருகைத் தொடரட்டும்.... மகிழ்ச்சி...

      Delete
  8. Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  9. இனிய வணக்கம் தம்பி வெற்றிவேல்...
    அருமையான ஆக்கம்..
    அழகான விளக்கம்..
    ==
    பிறமொழிக் கலப்பால் நம் மொழி ஒரு போதும்
    தேய்ந்து போய்விடாது..
    அதன்பொருட்டு கலக்கப்படும் மொழிகளே
    தன்னிலை இழக்கும்..
    சில மாதங்களுக்கு முன்னர் வந்த
    = why this kolaveri ..==
    பாடல் வந்தபோது இந்த அலசல் ஏகமாக இருந்தது..
    அன்பர் முனைவர் இரா.குணசீலன் ஒரு பதிவிட்டு இருந்தார்..
    இந்தப்பாடலால் ஒருபோதும் தமிழுக்கு இழுக்கில்லை
    ஆங்கிலம் தன்னிலை இழந்துவிட்டதென ..
    இதுவே உண்மை..
    ==
    இன்றைய இணையத் தமிழ் நம்மைப் போன்ற
    ஏனையோருக்கு ஒரு மந்தை கொடுத்திருக்கிறது
    கூடுவதற்கு..
    ==
    எம்மொழி சரிந்திடினும்
    நம்மொழி சரியாது
    எம்மொழி வீழ்ந்திடினும்
    நம்மொழி வீழாது..
    இனி மெல்லச் சாகாது தமிழ்
    இனி மெல்ல வாழும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      மிக அழகாக பிற மொழி கலப்பு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் அண்ணா. உண்மைதான், இணையத் தமிழால் தான் நாம் இன்று இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம். நமக்கு நல்ல சந்தையை அமைத்துள்ளது.

      தங்கள் இந்தக் கவிதை மிகவும் அழகாக உள்ளது..

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  10. Anonymous5:15:00 AM

    வணக்கம்
    தம்பி

    எமதுமொழி தமிழ் 1தொடக்கம்3ம் நூற்றாண்டில் அதாவது சங்ககாலம் அந்த காலத்தில் தமிழ்மொழி மீது மோகம் கொண்ட காரணத்தால் முதல்ச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று மூன்று சங்கள் வளக்கப்பட்டு தமிழ் மொழி வாழ்ந்தது அப்போ
    இப்போ சொல்லவோ வேண்டும் நான் ஒரு கட்டுரை படித்த போது அதில் குறிப்பிட்ட விடயம் என்னவென்றால் உலகத்தில் வலைப்பூக்கள் ஆரம்பித்து அதிகமாக தமிழில் பல படைப்புகளை படைக்கும் நாடு இந்தியாதான் அதில் நான் பெருமைப்படுகிறேன் அதில் நீங்களும் ஒருவன்தான்

    உங்கள் ஆய்வு நன்றாக உள்ளது தமிழ்மொழி எப்போதும் அழியாது வாழ்த்துக்கள் தம்பி கவலை வேண்டாம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      ஆம் நம் முன்னோர்கள் சங்கம் அமைத்து நம் தமிழை வளர்த்தனர். உலகிலேயே வலைப்பூக்கள் அதிகம் தமிழில் தான் எழுதப் படுகிறது என்பது பெருமைக்குரிய செய்தி, அதில் ஒரு பங்களிப்பாக நாமும் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  11. உலகு உள்ளளவும் தமிழ் தொடரும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அய்யா... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  12. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  13. Anonymous7:05:00 AM

    தமிழ் மொழி வளர்ச்சியே கண்டுள்ளது. நம் மூதாதையர்கள் கெட்டிக்காரர்கள், ஏனைய மொழிகள் ஆரம்ப நிலை பேச்சு மொழியாக இருந்த போது, அதனை எழுதத் தொடங்கி, இலக்கண, இலக்கியங்கள் படைத்தனர். தமிழின் பழம் இலக்கண நூலான தொல்காப்பியம் திசைச் சொல், வட சொல்களை அனுமதித்தது. தமிழில் பிற மொழிக் கலப்பு அளவுக்கு ஏற்றார் போல உள்வாங்கப்பட்டுள்ளது. தமிழின் தனித்துவம் அழியாம இருப்பதன் காரணம் அதன் எழுத்துக்கள், ஒலிகள். தமிழின் ஒலியமைதிக் கெடுவது போல பிறமொழிச் சொற்களை இங்கு அவ்வளவு எளிதாய் அப்படியே குவிந்துவிடாது. அடுத்து நூறாண்டு முன் தமிழ் எழுதுவோர் அதீத வடமொழி சேர்த்து எழுதினர், இன்று நாம் நல்ல தமிழில், எழுதி, வாசித்து, உரை நிகழ்த்துகின்றோம். அத்தோடு அனைவரும், ஏன் தமிழ் தாய்மொழி இல்லாதோர் கூட தமிழில் கற்றுத் தெளிந்துள்ளனர். இன்றைய சூழலில் புதிய கலைச் சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகின்றோம். நன்கு கவனித்தால் தமிழின் இலக்கண முறை எளிமையானது, நேர்த்தியானது, தமிழ் ஒரு நவீன மொழிக்கு இணையான இலக்கணத்தை கொண்டுள்ளது. இங்கு நமக்கு உள்ள சிக்கல்களே பேச்சுத் தமிழில் அனாவசிய ஆங்கில கலப்பையும், ஊடகங்கள் - டிவி, வானொலிகளில் மொழிக்குற்றங்கள் உள்ள தமிழையும் குறைக்கவேண்டும். தமிழ் என்றும் வாழும், அதில் ஐயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நிரஞ்சன் அண்ணா...

      தங்கள் விளக்கம் மிக அழகாக உள்ளது. தமிழ் என்றும் வாழும்...

      தங்கள் கருத்துக்கும், இனிய வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  14. தமிழ் அழிய வழியே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  15. தமிழ் அழியாது பேண நம்மாளுகள் அக்கறை காட்டுகின்றனர்.
    தமிழ் இனி மெல்லச் சாகாது.
    தமிழிலிருந்து பிறமொழிகளை நீக்க வேண்டும். எழுதும் போது பிறமொழிச் சொல்களை அடைப்பிற்குள் பாவிக்கலாம்.

    தங்களது விழிப்பூட்டும் வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், முடிந்தவரை நாம் பிறமொழிகளை தவிர்த்து எழுதுவதே நல்லது...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  16. ///களப்பிரர்களின் காலத்தையே கடந்து வந்தது நம் தாய் மொழி... இந்த நவீன களப்பிரர்களை விரட்டாதா என்ன!!!////

    களப்பிரர்கள் காலத்தில்தான் ஐம்பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்டதாகக் கூறுகின்றார்கள்.

    களப்பிரர்கள் தமிழுக்கு எதிரானவர்களா? ஏதாவது ஆதாரம் உள்ளதா?

    களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என பிராமண ஆய்வாளர்கள் மட்டுமே கூறுவார்கள்.பிராமணர்களுக்கு அது இருண்டகாலமே....!

    ReplyDelete
    Replies
    1. தமிழிற்கு களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என படித்திருக்கிறேன், அதாவது அவர்கள் வந்த பிறகுதான் தமிழர்களின் நல்ல பழக்க வழக்கங்கள் மாறி கெட்டுப் போனதாகவும், அதன் நிலை மாறவே தமிழில் நன்னெறி நூல்கள் தோன்றியது என்றும் படித்துள்ளேன், அதனால் தான் அப்படி கூறினேன்... நானும் இது பற்றி தேடுகிறேன் நண்பா,,, கவனத்தில் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி...

      Delete
  17. மிக சிறப்பாய் சொன்னீர்கள்... தமிழ் என்றுமே அழியாது அதை அழிக்கவும் முடியாது.. இந்த களப்பிரர்களைப் பற்றி உரைத்ததில் மட்டும் இன்னும் விளக்கம் தேவை எனத் தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி, களப்பிரர்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை, நான் தேடி கிடைத்ததை விரைவில் தனிப் பதிவாக எழுதுகிறேன்,

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழி... வருகை தொடரட்டும்...

      Delete
  18. வணக்கம் உலகம் அழிந்த பின்பு கூட தமிழ் அழியாது மனிதனை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழுக்கு அழிவில்லை தமிழை பற்றிய கேள்விகளும் பதில்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்களைப் போன்றோரால் தான் தமிழ் இன்னும் அதன் தன்னிலை மாறாமல் உள்ளது, நாம் தான் அதனைப் பாதுகாக்க வேண்டும்... தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா... தங்கள் வருகைத் தொடரட்டும்...

      Delete
  19. மிக அருமையான என்ன ஓட்டத்திற்கு பின் எழுதி இருக்கிறாய் வெற்றி.. பதிவில் அந்த உழைப்பு தெரிகிறது...

    தமிழ் வளருகிறது வளரும் எல்லாம் சரி

    என்னுள் இருக்கும் ஐயம்

    எழுத்துத் தமிழ் மெல்ல அழிந்து வருகிறது, ஒரு மொழியின் அழிவும் அதன் ஆளுமையும் அதன் வடிவத்தை இழக்கும் நேரத்தில் இருந்து தொடங்குகிறது என்று நினைக்கிறன்...

    ஆங்கில வழி கல்வி மூலமாக பயின்ற பெரும்பாலானவர்களுக்கு தமிழ் எழுத தெரியவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்... எழுதும் பழக்கம் மிக மிக குறைந்து வருகிறது...

    பேஸ்புக், வலைபூவில் எழுதவில்லையா என்ற கேள்வி எழலாம் சதவீதம் என்று பார்த்தால் மிகக் குறைவு...

    எழுத்துத் தமிழை முறையாக ஒழுங்காக கல்வி மூலம் அதுவும் பாலர் வகுப்பில் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்...

    இது பற்றிய விழிப்புணர்வு வளர்க்கப்பட வேண்டியது மிக அவசியம்... அதனால் தமிழகத்தில் தமிழ் மொழிப்பாடமாக கட்டாயம் இடம் பெற வேண்டியது அவசியம்

    (மேற்கூறிய அத்தனை விசயங்களையும் என் அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களை கவனித்ததன் மூலம் கற்றுக் கொண்டது)

    மற்றபடி தமிழ் வாழும் வளரும் வளரச் செய்வோம்

    ReplyDelete
    Replies
    1. தமிழ் வாழும் வளரும் வளரச் செய்வோம்.../// கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா... நாளும் வளரச் செய்வோம் நம் தாய் மொழியை...

      மேலும் தாங்கள் கூறுவது உண்மைதான், தற்பொழுது ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் தமிழை சரியாக எழுதுவதில்லை, பார்க்கும் போதே வருத்தமாக இருக்கிறது, நானும் பார்க்கும் குழந்தைகளை தமிழ் கற்றுக்கொள்ளும் படி வற்ப்புறுத்திக் கொண்டு தான் இருக்கிறேன்... நாம் தான் இது போன்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  20. Anonymous8:45:00 PM

    தமிழ் என்று சொன்னவுடன் எத்தனை பதில்கள். தமிழ் என்றும் சாகாது சாகவும் தமிழன் விடமாட்டான். உயிரினும் மேலாய் எம் மொழி காப்போம். உங்கள் பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      தங்கள் உறுதி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  21. அப்படி மறைந்து போகக் கூடிய மொழி இல்லை தமிழ். ஒரு பேப்பரில் பென்சிலில் தமிழ் என்று எழுதி அதை ரப்பரால் அழித்தால் 'தமிழ்' அழியும்! அவ்வளவுதான்! கவலை வேண்டாம் வெற்றி! :))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      அழகான விளக்கம் அளித்துள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி...

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  22. "தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !" - என்ற பாரதி இதுமட்டுமா? 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்றும்தான் பாடிச் சென்றிருக்கிறான். இதை கவித்துவ ஆழ் இரசனைக் கோட்பாடுகளால்தான் அலச முடியும்.
    -தமிழ் அழியும் எனப் பரவலாகும் அல்லது மேற்கொள்ளும் பரப்புரை யார்? யாரால்? ஏன்? எதற்காக? நிகழ்த்தப்படுகிறது. தமிழ்பேசுவோரது மனவுறுதியை 'இயலாமை' கருத்துருவுக்குள் சிக்க வைத்து 'தாழ்வு மனப்பான்மையை' உண்டுபண்ணிடும் நுண் அரசியல்களையும் நாம் இனம் காணத்தான் வேண்டும். 'இன்று வாழ்கிறான்! - நாளை சாவான்!' நாளை சாவான் என்பதற்காக 'சாகத்தானே போகிறேன்... அப்ப இப்போதே செத்துப்போவேமே! என்பதாக யாராலும் நினைப்பதுண்டா?'

    தமிழ் இன்று இணையவானில் பவனியாவதற்கு எந்த அரசுகள் அல்லது அரசு இயந்திரங்கள் கைகொடுத்திருக்கின்றன? இன்றுள்ள பல மொழிகள் அரச மான்னிய ஆதரவை இழந்தால் இணையத்திலிருந்து தானாகவே இல்லாது போய்விடுமே!
    இன்றைய உலகளாவிய கல்விப்போக்கும் பரவலாகக் கிட்டும் தொடர்பு சாதக் குவிப்படுத்தலும் வெற்று ஊகங்களால் சலனங்களை உண்டு பண்ணவிடாது.
    - மூலமொழிகளாக இருக்கும் மொழிகளில் அன்று தொடக்கம் இன்று வரை மக்களது உரையாடல் மொழிகளாகவும் தொடர்வது 'தமிழும் சீனமும் தான்!' இதை மிகப் பெரியதொரு தொன்மையான அரிய வளமெனப் போற்றி பெருமிதம் கொள்ளவேண்டியவர்கள் மூன்றாவது(படர்க்கை) நிலையிலிருந்தவாறு கருத்திடுவதுதான் கேலிக்குரியது.
    இயல் இசை நாடகம் என்றிருந்த தமிழ் இன்று இயல் -இசை -நாடகம் -இணையம் என நான்காம் தமிழாகி பரிணாமம் பெற்று கடந்து செல்கிறது.

    தன்னலமற்ற தமிழ் ஆர்வலர்களும் - தமிழுக்கான தொண்டர்களும் மௌனமாகத் தொண்டாற்றி வருவதால்தான் தமிழ் அடுத்தடுத்த தடைகளையும் தாண்டிப் பயணிக்கிறது.

    தங்களது கட்டுரையும் தளமும் எனக்குப் பிடித்திருக்கிறது.
    வாழ்க! வளமுடன்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் கருத்து அனைத்தும் உண்மையானதே. தமிழிற்கு உண்மையாக உழைப்பவர்களை நாம் கட்டாயம் அடையாளம் காண வேண்டும், உழைப்போம் அதற்காக...

      தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது... வருகைத் தொடரட்டும்...

      Delete
  23. தம்பி வெற்றிவேலுக்கு வாழ்த்துக்கள். அருமையானதொரு கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி.என்னைப் பொறுத்தவரை கற்றுக் கொள்ள மிக எளிமையான மொழி தமிழ் மட்டுந்தான். "யாமறிந்த மொழிகளிலே" என்று பாரதி சொன்னது வெறும் பேச்சல்ல. கற்றுக் கொள்ள முயன்று பாருங்கள் தெரியும். தமிழ் எழுத்துக்களை கற்றுக் கொண்டாலே போதும்.எவருடைய துணையுமின்றி வாசிக்க முடியும். மற்ற மொழிகள் அப்படியல்ல. எழுத்துக்களை கற்றுக் கொண்டு விட்டு மற்றொருவரின் துணையுடன்தான் வாசிக்க முடியும். ஆங்கிலத்தில் வீண் பெருமை காட்டுவதுதான் வேதனை அளிக்கிறது. ஆங்கில வெறி எங்கு போய் முடியுமோ தெரியவில்லையே தம்பி !- அன்புடன் ஆதன் வடிவேலன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆதவன் அண்ணா...

      ஆங்கிலத்தில் மோகம் காட்டுவது வரும் காலத்தில் குறைந்துவிடும் என நம்புகிறேன்... உண்மைதான், தமிழ் எழுத்துகளை அறிந்தால் வாசிக்க யாருடைய உதவியும் தேவையில்லை என்பது உண்மைதான்...

      தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் வருகைத் தொடரட்டும்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப்பிழை காரணமாக முந்தைய கமென்டை டெலீட் செய்துவிட்டேன் :)
      //மற்ற மொழிகள் போல் அல்லாது தமிழ் தன்னை ஒவ்வொரு கட்டத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பை தமிழ் இயற்கையாகவே கொண்டுள்ளது.//

      உண்மைதான் சக்தி !, அதேபோல தமிழின் செம்மொழி வடிவம் எழுத்துலகில் உயிருடன் இருப்பது மிகவும் ஆச்சரியமான விசயம், எல்லா மொழிகளும் இந்த செம்மொழி வடிவத்தை இழந்து கொண்டு வருகின்றன...
      அதேசமயம் தமிழ் விரும்பிகள் மற்றும் தமிழ் வாசகர்கள் எண்ணிகை குறைவை மறுக்க முடியாது :(
      தமிழ் எழுத்துக்களின் சிறப்பையும் ,தமிழ் வாசிப்பின் சுவையையும் சிறு வயதிலேயே குழந்தைகட்கு கொடுக்க வேண்டும் !!. தமிழ் வாழும் என்றும் என்றென்றும்:)

      Delete
    2. பிழையில்லாமல் கருத்து வெளியிட வண்டும் என்ற தங்கள் எண்ணம் மிகவும் பிடித்துள்ளது நண்பா, பாராட்டுகள்.

      Delete
    3. உண்மைதான், நண்பா. தமிழின் வாசிப்பை நாம் அனைவருக்கும் குழந்தை பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டும்.

      தங்கள் வருகையும், தங்கள் கருத்தும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, வருகைத் தொடரட்டும்...

      Delete
  25. நன்றி நணபா.என் எண்ணம் தமிழ்தான் உலகின் பழைய மொழி என்பதே.நமது இலக்கணம் போல் வேறு எந்த மொழிலும் வொவொரு எழுத்துக்கும்,அந்த எழுத்து மற்ற எழுத்துடன் இணையும்போதும் ஓர் இலக்கண முறைக்கு உட்பட்டுத்தான் நிற்கிறது.தமிழ் வொவொரு எழுத்தும் ஒரு தனி இலக்கியமே.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா, தமிழ் இலக்கணம் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. பழமையானது, சிறப்பானது...

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  26. தமிழ் மேலான உங்கள் காதலுக்கு மகிழ்ச்சி! இப்படி உங்களைப் போல தமிழ் தேடல் கொண்டவர்கள் இருக்கும்பொழுது தமிழ் ஒளிந்து பிடித்துக் கூட விளையாடாது...அழிவதாவது...சில 'டமிலர்' தமிழ் பேசுவது இல்லையென்றால் தமிழ் அழிந்துவிடுமா என்ன? அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      தாங்கள் தேடி வந்து படித்ததில் மிக்க மகிழ்ச்சி...

      தமிழிற்கு ஏதும் ஆகாது... அழகா சொல்லியிருக்கீங்க... மிக்க நன்றி.

      திங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...