Jan 26, 2016

மோகப் புயல்

என் உள்ளக்கிடங்கினுள்
மறைத்து வைத்திருக்கும் காதலெல்லாம்
மோகத்தீயாய் என்னுள்
சுடர்விடத் தொடங்கிவிட்டது...

காதல் மழையில் நனைந்துகொண்டிருந்த என்னை
உணர்சிகளால் ஆன
நரம்புகளுக்கிடையில் புறப்பட்ட
மோகப் புயல் சூழ்ந்து
சூறையாடுவதேனடி...

ஒளியினைப் பற்றிக்கொண்ட
நிலவினைப் போல
என் உயிரும் உனைப்பற்றிக்கொள்ள
துடித்துக்கொண்டிருக்கிறது...

என் மோகத்தீயை
நீயும் உணர்ந்தால்,
என்னை அணைத்துக்கொள்...

தோட்டாவைப்போல் உன் பார்வை
என்னைத் துளைக்கட்டும்...
வாளினைப் போல என்னைக்
கிழித்தெறியட்டும்...
இதழ்களால் எனை
இதமாகத் தீண்டு...
முத்தத்தினால் எனை
மூழ்கடிக்கச் செய்...
உடல் சிவந்து கண்ணும் அளவிற்கு கடி...
தீண்டலினால் எனை
கொழுந்துவிட்டெரியச் செய்...

உன்னைத் தீண்ட
உன்னை நேசிக்க
உன்னை அணைக்க
உனக்காகவே நான் பிறந்திருப்பதைப் போல
எனக்காகவே நீயும் பிறந்திருக்கிறாய் எனில்
உன்னிடம் இருப்பவையனைத்தையும்
பாரபட்சமின்றி
எனக்காகக் கொடுத்துவிடு...

அஸ்தமனத் தொடுவானில்
மறைந்துபோகும் வெளிச்சத்தைப் போல
நானும் கரைந்துவிடுகிறேன்
உன் மார்புகளுக்கிடையில்...

சி.வெற்றிவேல்.
சாளையக்குறிச்சி...

Jan 22, 2016

திறந்த மடல் - 2: கடிதங்களின் சுவாரஸ்யங்கள்

அன்புள்ள தோழர் சீனு அவர்களுக்கு,

வணக்கம்...

நான் நலமாகவே இருக்கிறேன். தாங்களும் நலமாக இருக்கிறீர்கள் எனும் நம்பிக்கையில் கடிதத்தைத் தொடர்கிறேன்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பே எழுத நினைத்த கடிதம் இது. கடந்த வருடம் எழுதிய எனது முதல் கடிதம் சென்னை வெள்ளத்தில் சிக்கி சிதைந்ததைப் போல அல்லாமல், இந்தக் கடிதத்தைக் காப்பாற்றவே சற்றுப் பொறுத்து பொங்கல் களிப்பு அடங்கியபிறகு எழுதுகிறேன்.

Jan 19, 2016

உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்


என் தேடல்
உனக்காகத்தான்...
என் பயணம்
உனக்காகத்தான்...
என் இலக்கும்
உனக்காகத்தான்...

யுகம் யுகங்களாக இறந்து
மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்கிறேன்
உனக்காக...

இருவரும் சந்திக்கும்போது
காதல் மொழி வேண்டாம்...
விழிகள் இணைந்து
நேரத்தைக் கடக்க வேண்டாம்..
உதட்டோரம் சிறு சிரிப்பு,
கடைக்கண் பார்வை என
எதுவும் தேவையில்லை...

பெருஞ்சிந்தனையில் பேனாவைக் கடிக்கும்
சமயத்திலோ...
உறக்கம் வராமல் புரண்டு படுக்கும்
பொழுதிலோ – அல்லது
தனிமையை விரும்பி
அமர்ந்திருக்கும் காலத்திலோ
என் நினைப்பு உன்னுள் தோன்றி
மறைந்தால் போதும்...

உனக்கும் சேர்த்து
நான் ஒருவன் காதல் செய்வேன்...


சி.வெற்றிவேல்...

சாளையக்குறிச்சி

Jan 17, 2016

பயணங்கள் முடிவதில்லை...

தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அக்கா'வின் பயணம் குறித்த கேள்விகளுக்கு பதில்கள்...
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இரயில் பயணம் என்றாலே ஏனோ எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. பெரும்பாலும் இரயில் பயணங்களை தவிர்த்து பேருந்தில் தான் பயணம் செய்வேன். இரயிலில் பயணம் செய்வது பேரின்பம் தான். ஆனால், சிக்னல்களில் நிற்கும் சில நிமிடங்கள் எனக்கு பல மணி நேரங்களாக நீண்டு என்னை வதைப்பதுண்டு. எனக்கு எப்போதுமே காத்திருக்கப் பிடிக்காது. குறிப்பாக இரயில் மற்றும் பேருந்திற்காக. ஓரிடத்தில் நிற்காமல் எப்போதுமே நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இந்த வகையில் தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டுமே இரயில் பயணத்தைத் தேர்ந்தெடுப்பேன். எனக்கு நினைவில் தெரிந்த முதல் இரயில் பயணம் கல்லூரி காலத்தில்  பள்ளித் தோழியுடன் திருச்சியிலிருந்து அரியலூர் வந்த பயணம் தான். அதிலும் தோழியின் தம்பியும் உடன் வந்ததாலோ  என்னமோ அந்தப் பயணம் பெரிய அளவில் குதூகலத்தை ஏற்படுத்தவில்லை.