Jul 9, 2015

தேர்த்துகன் - 2

ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. கரையில் அமர்ந்திருந்தபடியே தாத்தா சுட்டிக் காட்டிய நட்சத்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் செழியன். அந்த நட்சத்திரத்தையும் அதில் வாழ்ந்ததாகக் கூறப்பட்ட தேர்த்துகனின் நினைவும் மனதிற்குள் தோன்றத் தோன்ற அவனுடைய தாத்தாவின் நினைவும் அவனுக்கு சேர்ந்து வந்துகொண்டிருந்தது.


தேர்த்துகன், அறிவியல் புதினம், வெற்றிவேல், tamil fantasi novel, tamil fantasi fiction

தேர்த்துகனைப் பற்றி முதல் முதலில் அறிந்துகொண்ட அந்த இரவுப் பொழுதை மீண்டும் நினைத்துகொண்டான் செழியன். அவனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த கடைசி நாள் அன்றுதான். அவனது தாத்தா கடைசியாகக் கூறியதை நினைத்துப் பார்த்தான்,

'இந்தக் கதையதான் எனக்கு என் தாத்தா கடைசியா சொன்னாரு. அன்னைக்கும் நாங்க ரெண்டுபேரும் கடல கொல்லைக்கு காவல் இருக்கத்தான் வந்தோம். அவரு, என்ன அவரோட தோள்ள போட்டுக்கிட்டு இந்த தேர்த்துகன் கதைய சொன்னாரு. காலைல அவரு கண் முழிக்கவே இல்ல!' என்பதை நினைத்துப் பார்த்தவன் "தாத்தா தேர்த்துகன் கதைய சொல்லாமலே இருந்துருக்கலாம்!" எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
 
'தாத்தா, அவருடைய தாத்தாவைப் போன்று தேர்த்துகன் கதையைக் கூறிய அடுத்த நாள் எதற்காகக் கண் விழிக்கவில்லை?' என்று பல நாள் சிந்தித்துப் பார்த்திருக்கிறான். ஆனால், அவனுக்கு விடைதான் கிடைத்தபாடில்லை. தேர்த்துகன் பற்றிய மர்மத்தைத் தேடி அவன் பல நூல்களை வாசித்துப் பார்த்துவிட்டான். ஏமாற்றமே மிஞ்சியது அவனுக்கு. பல பேராசிரியர்களை சந்தித்தும் பேசி விட்டான். சில நூல்கள் 'பூமியைப் போன்றே உயிர்க்கோளம் இருக்கிறது' என்று அவனுடைய தாத்தா கூறிய கதைக்கு ஆதாரத்தைத் தந்தாலும் விண்ணிலிருந்து கொட்டும் நதி, நடுக் கடலில் தோன்றியிருக்கும் அருவி, மிதக்கும் மலைகள் ஆகியவை இயற்பியல் விதிகளை மீறுபவையாகே இருந்தன. தாத்தா கூறிய கதை அழகான கற்பனை எனக் கொண்டாலும் தலைமுறை தலைமுறையாக தேர்த்துகன் கதையைக் கூறியவர்கள் அன்றைய இரவே இறந்து போனது அவனுக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்து அந்த மர்மத்தை அறிந்துகொள்ள வேண்டும் எனும் ஆவல் அவனுக்குள் அதிகமாகிக் கொண்டிருந்தது.
'இந்த மர்மம் என்னோடு முடிய வேண்டும்' எனும் நினைப்பில் தான் அவனது தாத்தா கூறிய கதையை வெறும் கதை என்று மட்டும் நினைக்காமல் அதன் ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.
தாத்தாவை எண்ணி வருத்தத்துடன் அமர்ந்திருந்த வேளையில் அவனது நண்பன், "செழியா... எனது நண்பர்கள் வந்து விட்டார்கள் வா!" என அழைத்த போதுதான் சிந்தனையிலிருந்து மீண்டான்.
விழியன் ஓரம் வழிந்திருந்த கண்ணீர்த் துளிகளை அவனுடைய நண்பனுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டு நடந்துச் செல்லலானான். 

ஏரிக்கரையில் சிலர் அவனுக்காகக் காத்திருந்தார்கள். வருத்தத்துடன் நின்றிருந்த செழியனைப் பார்த்து காரணத்தை வினவினான் ஒருவன்.
"நாளை செழியனின் தாத்தாவின் நினைவு தினம். அதான் வருத்தத்துல இருக்கான்!"
"எப்போ, போன வருஷம் எறந்து போனாரா?"
"இல்ல !"
"எப்போ?"
"இருவது வருசத்துக்கு முன்னாடி!"
"கம்மான் மை பிரண்ட். இருபது வருசத்து முன்னாடி ஏறந்தவர பத்தியா இன்னும் கவலப்  பட்டுக்கிட்டு இருக்க ? வாட் எ ****** நான்சென்ஸ் திஸ் ஈஸ்?"

"விமல், வேண்டாம், அவனோட தாத்தானா அவனுக்கு உசுரு. எதுவும் தப்பா பேசாம . அவனுக்கு கோபம் வரும்!"

"சாரி, டியர். எக்ஸ்ட்ரீம்லி!" என வருந்திய விமல் வருத்தத்துடன் சென்றுகொண்டிருந்த செழியனின் தோளில் கையைப் போட்டு, "தாத்தானா ரொம்ப பிரியமா உனக்கு?" என வினவினான்.

"ஆமாம் !"

"எனக்கும் ஒரு தாத்தா இருந்தார். எப்போதும் தோளுல என்ன தூக்கி கிட்டுதான் அவரு நடப்பாரு! நிறைய கதை சொல்லிருக்காரு. எல்லாமே மாயாஜாலம், மந்திரம், தந்திரமான கதைங்க. இப்ப கதை சொல்றதுக்கே ஆளுங்க இல்ல !
".......!"

"உங்க தாத்தா எப்படி இறந்தாரு?"

"........!"

அமைதியாகவே நடந்து சென்ற செழியனைப் பார்த்த விமல், "நான் முன்னாடியே என்னோட தப்புக்கு சாரி கேட்டுட்டேன். இன்னும் கோபம் போகலன்னா சொல்லுங்க, ஐ வில் லீவ்" என்ற படி நகர்ந்தான்.

"விமல்!"

"சொல்லுங்க செழியன் !"

"என்ன கேட்டிங்க?"
"உங்க தாத்தா எப்படி எறந்தார்னு கேட்டேன்!"
"ஒரு கதைய சொன்னாரு. காலைல எழுந்திரிக்கவே இல்ல."
"சோ சேட் . என்ன கதை அது?"
"அத சொன்னா நானும் செத்துடுவேனோன்னு  எனக்கு பயமா இருக்கு?"
"எப்படிப்பட்ட கதை அது?"
"தேர்த்துகன் கதை!"
"தேர்த்துகன் ???"
"ஆமாம்."
"அப்படின்னா???"
"தெரியல !"

"கொஞ்ச நேரம் இருங்க" எனத் தெரிவித்தவன் அவனது ஆண்டிராய்ட்  போனில் சிறிது நேரம் தேடினான். பிறகு, "செழியன் நீங்க சொன்ன வார்த்தைக்கு ஒரே ஒரு வார்த்தை தான் ஒத்துப் போகுது?" என்றான்.

"என்ன வார்த்தை அது?"

"தேர்த்துகள்!"

"அப்படின்னா?"

"எட்டு அணுக்கள் சேர்ந்தது தான் ஒரு தேர்த்துகள்."

வியப்புடன் அவனை நோக்கினான் செழியன்.

"இன்னும் தெளிவா உனக்கு வேணும்னா, 1/2,323,824,530,227,200,000,000 இந்த எண்ண குறிக்கத்தான் நம்ம முன்னோர்கள் இந்த வார்த்தைய பயன்படுத்தியிருக்காங்க!"
"இதுக்கு என்ன அர்த்தம்?"
"4.30 X 10 ^ -22"
"நான் சொன்ன 'தேர்த்துகன்' பேருக்கும் தேர்த்துகளுக்கும் என்ன சம்பந்தம்?"

"தொடர்பு இருக்கலாம்? யார் கண்டது?"

"இவ்வளவு சின்ன பின்னத்த எதுக்கு பயன்படுத்திருப்பாங்க ?"

"இப்போ மாடர்ன் உலகத்துல அல்ட்ரான் , நானொன்  அப்படின்னு சொல்லுராங்கள்ள அதே மாதிரி தேர்த்துகள், தேர்த்துகன்னு ஏதாவது ஒரு தொடர்பு இருக்கலாம். பெரும்பாலும் நம்ம ஆளுங்க இந்த மாதிரி பின்ன எண்கள பிரபஞ்சத்தோட இருப்பிடம், கோள்களுக்கு இடைப்பட்ட தொலைவு, அதோட நகர்வு பற்றி குறிப்பிட பயன்படுத்தியிருக்காங்க... திருமூலர் தன்னோட பாடல்கள்ள இந்த மாதிரி ரொம்ப சின்ன எண்கள பயன்படுத்திருப்பாரு! அப்புறம் சித்தர்கள். இந்த பின்னக் கணக்கு பத்தி பழைய பாடல் கூட ஒன்னு படிச்சிருக்கேன் !"

"என்ன அது?"

"கொஞ்சம் பொறு!" எனக் கூறியவன்  மீண்டும் தனது போனில் சிறிது நேரம் தேடினான். பிறகு
"அணுத் தேர்த் துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணர் கடுகு நெல் விரலென்றேற—வணுத் தொடங்க
யெட்டோடு மண்ணு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்." எனத் தெரிவித்தான்.

அவன் அப்பழம்பாடலை வாசிக்கத் தொடங்கியதுமே செழியன் ஆகாயத்தில் அந்த நட்சத்திரத்தைப் பார்க்கத் தொடங்கினான். அதைக் கவனித்துவிட்ட விமல், "தாத்தா எந்த வின்மீனையாவது காட்டுனாரா?"

"ம்ம்ம்..." எனத் தெரிவித்த செழியன் அந்த நட்சத்திரத்தை விமலுக்கும் சுட்டிக் காட்டினான். 

"ஒருவேளை, உங்க தாத்தா சொன்ன தேர்த்துகன் அந்த நட்சத்திரத்துக்கு போற பாதையா இருக்குமோ?"

"?!"

"காலப் பயணம், கால எந்திரம் மாதிரி ஏதாவது?"

"எனக்கு ஒன்னும் தெரியல!"

அப்போது அங்கு வந்த செழியனின் நண்பன், "செழியா... கல்யாண மாப்பிளையை தனியா அழச்சிகிட்டு வந்து என்னடா இங்க பண்ணிக்கிட்டு இருக்க?" என வினவியவன், "இவன்கிட்டையும் உன் தாத்தா கதைய சொல்ல ஆரம்பிச்சிட்டியா?" எனத் தெரிவித்து சிரிக்கலானான்.
அப்போது விமல் செழியனிடம், "உங்களுக்கு எப்போ பாஸ் கல்யாணம்?" என வினவினான்.

அதற்கு செழியனின் நண்பன், "இவன் தேடுற பொண்ணு இந்த உலகத்துல இருந்து கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்?" எனக் குறுக்கிட்டான்.

"அப்படி என்ன எதிர்பார்க்குராறு?"

"ரொம்ப நல்ல பொண்ணா இருக்கணுமாம் , தொர பெரிய படிப்பு படிச்சிருந்தாலும் அவனோட தாத்தா மாதிரி விவசாயம் செய்யறதுல தான் இவனுக்கு விருப்பம். அதனால படிச்ச பொன்னா விவசாயம் தெரிஞ்ச பொண்ணா வேணுமாம் !"

"சமைக்கத் தெரிஞ்ச பொண்ணு வேணும்னாலே இப்போ கிடைக்கறது கஷ்டம். இந்த லட்சணத்துல உங்களுக்கு விவசாயம் தெரிஞ்ச பொண்ணு வேற வேணுமா? ரொம்ப கஷ்டம்!" எனக் கூறியபடி சிரித்தான் விமல்.

"கண்டிசன் இத்தோட நிக்கல!"

"அப்புறம்?"

"இலக்கியத்துல நாட்டம் இருக்கற பொண்ணா வேற இருக்கணுமாம் !"

"எதுக்கு???"

"சார் எழுதற மொக்க கவிதைகள அவனோட வீட்டுக்கார அம்மாதான் படிச்சி பாத்துட்டு துப்பிட்டு கிழிச்சி போடணுமாம்! அப்படியொரு அலுப்ப  ஆச இவனுக்கு???"

"நீங்க கவலைப் படாதீங்க செழியன். நீங்க தேடுற பொண்ணு இந்த உலகத்துல இருப்பாங்களான்னு தெரியல, உங்க தாத்தா சொன்ன நட்சத்திரத்துலேருந்து நிச்சயம் பறந்து வருவாங்க!" எனச் சிரித்தபடியே கூறியவன் செழியனைத் தணித்துவிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

தனித்து விடப்பட்ட செழியன் மீண்டும் அந்த நட்சத்திரத்தையே நோக்கலானான். அதிலிருந்து ஒளிப் பிழம்பு ஒன்று அவனை நோக்கி வருவதைப் போன்று அவனுடைய உள்ளுணர்வு அவனுக்குத் தெரியப்படுத்தியது.

தொடரும்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி ...

6 comments:

 1. சிறிது திகிலுடன் ரொம்பவே சுவாரஸ்யமாக உள்ளது வெற்றிவேல்...

  நலம் தானே...?

  ReplyDelete
 2. மிகவும் சஸ்பென்ஸ் கதையாக உள்ளது போலத் தெரிகிறது...
  வல்லமையில் ஒரு தொடர் எழுதுகிறார் ஒரு பெரியவர் மிக அருமை வாசிக்கவும். இதோ தொடர் இணைப்பு.
  http://www.vallamai.com/?p=58325

  ReplyDelete
 3. புதிய தொடரா நண்பா! வலைச்சர பணியில் இருப்பதால் நேரம் கிடைக்கவில்லை! நேரம் கிடைக்கையில் படித்து கருத்திடுகின்றேன்!

  ReplyDelete
 4. தம்பி செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது...சஸ்பென்ஸ் வேற சும்மா புகுந்து விளையாடறீங்க என்னவெல்லாமோ பேசி....ஒரு ஃபிக்ஷன் போல போகுது இப்ப...செம...தொடர்கின்றோம்...

  ReplyDelete
 5. சரித்திரம் முடிஞ்சு (?) இப்போ விஞ்ஞானமா? கலக்குங்க வெற்றி.

  ReplyDelete
 6. அருமை. சுஜாதா பாணியிலான கதையோட்டம். அருமை. விறுவிறுப்பு. தொடருங்கள், தொடர்கிறோம். வாழ்த்துக்கள் வானவல்லியாரே!!!!! த.ம.2

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...