Jul 4, 2015

தேர்த்துகன் - 1

கடலைக் காட்டில் காவலுக்குப் போடப்பட்டிருந்த கட்டில் பந்தலில் உட்டிகார்ந்திருந்தபடி பார்வைக்கு எட்டும் தொலைவில் நரிக்கு வலை கட்டிக்கொண்டிருந்த தாத்தாவின் வருகைக்காகக் காத்திருந்தான் செழியன். ஊரிலிருந்து ஒரு கல் தொலைவில் நடு காட்டில் அமைந்திருந்தது அவர்களின் கடலைக் காடு. நரிக்குக் காவல் காப்பதற்காக வந்திருந்த தாத்தாவுடன் செழியனும் அடம்பிடித்து வந்திருந்தான்.

இரவையும் பொருட்படுத்தாமல் செழியன் வந்ததற்கு காரணம், தாத்தா அவனைத் தோளில் போட்டு முதுகில் தட்டிக் கொடுத்தபடி இரவு முழுவதும் கூறப் போகும் கதைகள் தான்.


தேர்த்துகன், அறிவியல் புதினம், வெற்றிவேல், tamil fantasi novel, tamil fantasi fiction
இரவில் இறை தேடி பாம்பு மற்றும் பூச்சுகள் திறந்த வெளியில் மேயும் என்பதால் ‘கட்டிலை விட்டுக் கீழே இறங்கக் கூடாது’ எனக் கண்டிப்புடன் செழியனிடம் தெரிவித்திருந்தார் தாத்தா. ஆதலால் அவனும் கட்டிலை விட்டுக் கீழே இறங்காமல் தாத்தாவையே எதிர்பார்த்தபடி அமர்ந்துகொண்டிருந்தான். தாத்தாவும் அவரது வேலையை முடித்து வந்த அடுத்த கணமே, “தாத்தா... கதை!” எனக் கூறி அவரது தோளிற்குத் தாவிவிட்டான்.

அவரும் அவனைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தபடியே, “அந்தக் காலத்துல ஒரு ஏழை விவசாயிக்கு நாலு அண்ணன் தம்பியாம்...” எனக் கதையைக் கூறத் தொடங்கினார். “தாத்தா... தாத்தா... இந்தக் கதையதான் நீங்க போன மாசம் மாடு மேய்க்கும் போது சொன்னீங்க, வேற கதைய சொல்லுங்க!” எனத் தெரிவித்தான் செழியன்.

“சரி” எனக் கூறிய தாத்தா சிறிது நேரம் எந்தக் கதையைக் கூறலாம் எனச் சிந்தித்தார். பிறகு, “பீமன் கதைய உனக்கு சொல்லிட்டேனா?” என வினவினார்.

“பீமன், அர்ச்சுனன், கர்ணன், தர்மன் எல்லா கதையவும் நீங்க சொல்லிட்டீங்க தாத்தா. வேற கதை சொல்லுங்க”

“உனக்கு கரிகால ராசா’வோட கதைய சொல்லுறேன்” எனக் கூறிய தாத்தா, “அந்தக் காலத்துல காவேரி ஆறு கடல்ல கலக்குற எடத்துல காகந்தி’ன்னு ஒரு ஊரு இருந்தது.”

“என்ன ஊரு?”

“காகந்தி!”

“அப்டீன்னா?”

“இப்ப பூம்புகார்’னு சொல்லுராங்கள்ள. அததான் அந்தக் காலத்துல காகந்தி’ன்னு சொல்லுவாங்க!”

“தாத்தா இந்தக் கதையாவும் நீங்க ஏற்கெனவே சொல்லிட்டீங்க!”

“பனங்கொட்ட கதை?”

“மாடு மேய்க்க வந்தவன், மாட்ட தொலச்சிடுவான், ஒரு பேசற பனங்கொட்ட அவனுக்கு உதவி செய்யற கதை தானே?”

“ஆமாம்...!”

“அந்தக் கதையவும் நீங்க சொல்லிட்டீங்களே!”

“எந்தக் கதைய ஆரம்பிச்சாலும் சொல்லிட்டேன்னு சொன்னா தாத்தா கதைக்கு எங்க ராசா போவேன்?”

“யோசிச்சி நல்ல கதையா சொல்லுங்க தாத்தா... உங்க கதை கேட்க தானே இருட்டுன்னும் பாக்காம உங்ககூட வந்துருக்கேன். என்ன ஏமாத்தாதீங்க!” கண் கலங்கினான் செழியன்.

“சரி... சரி... தாத்தா யோசிச்சி உனக்கு நல்ல கதையா சொல்லுறேன்!” எனக் கூறியவர் கயிற்றுக் கட்டிலுக்கு வந்தவர் செழியனை மார்மீது போட்டு படுத்துக் கொண்டார்.

“‘தேர்த்துகன்’ கதைய நானு உனக்கு இதுக்கு முன்னாடி சொல்லிருக்கேனா?”

“தேர்த்துகனா?”

“ஆமாம்...”

“இல்லையே!”

தாத்தா எதையும் மேற்கொண்டு கூறாமல் அமைதியாகப் படுத்திருந்தார். செழியனும் அவர் கூறத் தொடங்குவார் என சிறிது நேரம் எதிர்பார்த்தவன், “தாத்தா... யோசிச்சது போதும். கதைய சொல்லுங்க!” என அவசரப் படுத்தினான்.

“இந்தக் கதையதான் எனக்கு என் தாத்தா கடைசியா சொன்னாரு. அன்னைக்கும் நாங்க ரெண்டுபேரும் கடல கொல்லைக்கு காவல் இருக்கத்தான் வந்தோம். அவரு, என்ன அவரோட தோள்ள போட்டுக்கிட்டு இந்த தேர்த்துகன் கதைய சொன்னாரு. காலைல அவரு கண் முழிக்கவே இல்ல!”

“ஏன் தாத்தா அவருக்கு என்ன ஆச்சி!”

“தெரியலையேடா கண்ணா!”

“நீங்க கதைய சொல்லுங்க தாத்தா... உங்களுக்கு எதுவும் ஆகாது. நான் கூட இருக்கேன்ல!”

“எனக்கு என்ன ஆனா என்னடா கண்ணா, இன்னும் கொஞ்ச நாளு உனக்கு துணையா இருந்துட்டு போகணும்னு ஆசைப்படறேன். நீ பெரியவனா வளர்ற வரைக்கும் நான் துணை இருக்கணும் இல்லையா!” எனக் கூறிய தாத்தா சிரித்தபடியே கதை கூறத் தொடங்கினார்.

“நம்ம இந்த உலகத்துல இருக்குற மாதிரியே, இன்னொரு உலகத்துலயும் மக்கள் இருக்காங்க!”

“இன்னொரு உலகத்துலயும் நம்மள மாதியி மாதிரியே இருப்பாங்களா தாத்தா?”

“இல்லடா கண்ணு. அவுங்க நம்மளவிட கம்பீரமா இருப்பாங்க! பலசாலிங்க, புத்திசாலிங்க!”

“நீங்க நேர்ல பாத்துருக்கீங்களா?”

“இல்ல. எனக்கு என் தாத்தா சொன்னதுதான்.”

“சரி... சரி... சொல்லுங்க!”

“அந்த கிரகம் நம்ம பூமியைவிட ஆயிரம், லட்சம் மடங்கு வளர்ச்சி பெற்றது.”

“நம்மூர்ல இருக்கற காருல்லாம் அங்க ஓடுமா?”

“அங்க காரு தண்ணில போகும், காத்துல பறக்கும், இன்னும் நெறைய...”

“அங்க மலை, கடல், ஆறுல்லாம் இருக்குமா தாத்தா?”

“அங்க இருக்கற மலைங்க காத்துல மெதக்கும். அந்தரத்துலேருந்து நதி பாயும், நடு கடல்ல நீர் வீழ்ச்சி இருக்கும்!”

“கேட்கவே பிரமிப்பா இருக்கு தாத்தா...”

“இதுக்கே பிரமிச்சா எப்படி? அங்க வாழுறவங்க எல்லாரும் அமரர்கள்!

“அமரர்கள்???”

“அப்படின்னா?”

“மரணத்த வென்றவங்க!”

“அப்டின்னா அவங்களுக்கு சாவே வராதா தாத்தா?”

“ஆமாம்!”

“அப்டீன்னா நாம ரெண்டு பேரும் அந்த கிரகத்துக்கு போயிடலாமா?”

“நாம ரெண்டு பேரும் மட்டும் எதுக்கு?”

“அப்பதானே நீங்க சாகாம எனக்கு நெறைய கதை சொல்லலாம்!”

சிரித்துவிட்டார் தாத்தா.

“கதைய மேல சொல்லுங்க தாத்தா”

“அந்தக் கிரகத்துல இருக்குறவங்க தான் நம்மள படச்சி இந்தப் பூமிக்கு அனுப்பி வைச்சவங்க! அந்த கிரகத்துலையே பெரிய தலைவன் ஒருத்தான் இருக்கான்!”

“யாரு தாத்தா அவன்?”

“அவன் தான் அந்த கிரகத்த அவுங்களோட எதிரிங்ககிட்டேருந்து காப்பாத்துனான். ரொம்ப புத்திசாலி. பெரிய வீரன். அவனோட மந்திரக் கோல எடுத்துகிட்டு நடந்தான்னா அவன்கிட்ட யாராலையும் நெருங்க முடியாது.”

“மந்திரக் கோல்னா?”

“முருகன் கைல இருக்கற வேலு, சிவபெருமான் கைல இருக்கற சூலாயுதம், பெருமாள் கைல இருக்கற சுதர்சன சக்கரம் மாதிரி அந்த மந்திரக் கோலு அவனோட பலம். அதுக்கு பெரிய சக்தி உண்டு.”

“அவனோட பேரு என்ன தாத்தா?”

“தேர்த்துகன்!”

“மேல சொல்லுங்க தாத்தா...”

“ஒருநாள் அவனோட எதிரிங்க அவன புடிச்சி சிறை வச்சிட்டாங்க!”

“அவன்ட்ட தான் மந்திரக்கோல் இருக்குமே! அப்புறம் எப்படி தாத்தா அவன சிறை புடிச்சாங்க?”

“தந்திரமா அவனோட மந்திரக் கோல அவன்ட்டேருந்து பிரிச்சி அவனை புச்சிட்டாங்க!”

“எப்புடி தாத்தா தந்திரமா பிரிச்சாங்க?”

“தெரியலையே கண்ணா, எனக்கு என் தாத்தா எப்படின்னுலாம் சொல்லல!”

“புடிச்சதுக்கு அப்புறம் அவன கொன்னுட்டாங்களா?”

“இல்ல, அவன யாராலையும் கொள்ள முடியாது!”

“அப்புறம் என்ன பண்ணுனாங்க?”

“அவன சிறை வச்சிட்டாங்க!”

“எங்க தாத்தா?”

“சொன்னா, நீ நம்ப மாட்ட!”

“பரவால்ல சொல்லுங்க!”

“அவன நாம வாழற பூமியோட நடுவுல அடைச்சி சிறை வச்சிட்டாங்க!”

“தாத்தா பூமியோட நடுவுல பாறைங்க தான் அதிக சூட்டுல உருகிப் போயி இருக்கும்னு அன்னைக்கு டீச்சர் சொல்லிட்டு இருந்தாங்க?”

“அந்த நெருப்புக் குழம்புலதான் அவன் தப்பிச்சி வர முடியாத அளவுக்கு அடைச்சி வச்சிருக்காங்க!”

“பயங்கரமா இருக்கு தாத்தா?”

“இது பயங்கரம் இல்ல. அவன் தன்ன விடுவிச்சிக்க போராடிக்கிட்டு இருக்கான். அவனோட போராட்டம் தான் பூமியோட மேற்பரப்புல பூகம்பம், பேரலை, அப்றமா எரிமலைன்னு ஏற்படுது!”

“அவன் வெளிய வந்தா என்ன தாத்தா ஆகும்?”

“அது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல. அவன் தப்பிக்க அவனோட எதிரிங்க உடமாட்டாங்க! பூமிய மொத்தமா எரிச்சி உருக்கி அவன திரும்பவும் சிறை புடிச்சிடுவாங்க”

“அப்டீன்னா எல்லாரும் செத்துப் போவோமா?”

“ஆமாம்!”

“இதுக்கு முன்னாடி அவன் தப்பிக்கப் பாத்துருக்கானா?”

“ஆமாம். இதுக்கு முன்னாடி அவன் தப்பிச்சி வெளிய வர பாத்தப்ப அவனோட எதிரிங்க தாக்கும்போது பூமியே ஊருகிடுசி.”

“அப்பதான் டைனோசர் எல்லாம் அழிஞ்சி போச்சா?”

“ஆமாம்!”

“வானத்துல பறக்கற பெரிய விண் கல் பூமி மேல விழுந்ததால தான் டைனோசர் அப்புறம் இன்னும் நெறைய விலங்கு இனங்கள் அழிஞ்சி போச்சுன்னு சொன்னாங்க!”

“அதுலாம, சும்மா... ரெண்டு பேருக்கும் நடந்த சண்டையினாலதான் பூமி அப்போ மொத்தமா அழிஞ்சிது!”

“அப்புறம் என்ன தாத்தா ஆச்சி!”

“எனக்கு என் தாத்தா அதுக்கு மேல எதையும் சொல்லலையே!”

“அவன் எப்ப தப்பிப்பான்?”

“அவன் தப்பிக்க கூடாதுன்னு வேண்டிக்க!”

“ஏன் தாத்தா?”

“அவன் வெளிய வந்தா பூமி மேல பெரிய சண்டையே நடக்கும். பூமி இன்னொரு முறை அழிஞ்சி போகும்!”

“கடவுளே!”

“அவன் வெளிய வராம இருக்கறதுதான் எல்லாருக்கும் நல்லது!”

“அந்த கிரகம் எங்க தாத்தா இருக்கு?”

நட்சத்திரங்களையே கூரையாகக் கொண்ட அந்த கட்டில் பந்தலில் படுத்தபடியே, வானத்தில் மங்கியபடி ஒளியை வீசிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் செழியனுக்கு சுட்டிக் காட்டிய தாத்தா, “அந்த நட்சத்திரத்துல தான் அவனோட கிரகம் இருக்கு!” என்றார்.

செழியன் அதற்கு மேல் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. அந்த நட்சத்திரையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சந்தேகம் தோன்ற தாத்தாவை அழைத்தான். தாத்தா உறங்கி விட்டிருந்தார். தாத்தாவின் மார்பில் படுத்து அவரது இதயத் துடிப்பு எழுப்பிய தாலாட்டு ஓசையிலேயே செழியனும் தேர்த்துகன் பற்றிய பல வித கற்பனையிலேயே உறங்கி விட்டிருந்தான்.

தொடரும்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

10 comments:

 1. வாசித்தேன்.
  பயணம் தொடரட்டும் வெற்றிகரமாக.

  ReplyDelete
 2. வணக்கம்
  தம்பி.

  அருமையாக உள்ளது கதை தொடருங்கள் அடுத்த பதிவில் சந்திப்போம் த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. //நட்சத்திரையே// (அந்த நட்சத்திரையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.)

  நட்சத்திரத்தையே?

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. கடலைக் காட்டில் இரவு நேரத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டே கதை கேட்ட ஓர் உணர்வு
  அருமை நண்பரே
  தொடருங்கள்

  ReplyDelete
 5. வித்தியாசமான கற்பனை... ஆவலுடன் அடுத்த பகுதியை காண காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 6. நல்லதோர் கற்பனை. அடுத்த பகுதிக்கான ஆவலான காத்திருப்புடன் நானும்.

  ReplyDelete
 7. வணக்கம் தம்பி ... கொஞ்சம் மாறுபட்ட களம் எடுத்திருக்கிறாய் என்று நம்புகிறேன் ,,, வாழ்த்துக்கள் ... கதையை படித்தேன் நன்றாக வந்திருக்கிறது , வாசிக்கையில் என் மனதில் பட்டதை உன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

  ஒன்று : இக்கதையில் வெறும் உரையாடல்கள் மட்டுமே நிரம்பி வழிகிறது, உரையாடல் வேண்டும் அதே நேரத்தில் இடையிடையில் எதையாவது போட்டு நிரப்ப முயற்சி செய்யுங்கள்(கட்டாயமில்லை என்னோட கருத்து மட்டுமே)

  இரண்டு: கடலைக்காட்டுக்கு காவல் எதற்காக என்பதை சொல்லி பின் கதையை துவங்கி நகர்த்தி இருக்கலாம், பெரும்பாலானவர்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பு, இன்னொன்று நமது மண்ணை அதன் வாழ்வியல் நெறிகளை பதிவு செய்தது போலாகும்!

  மூன்று: இருவருக்குமான உரையாடலில் செயற்கை இல்லை இயல்பான பேச்சு வழக்கிலே நகர்வது மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது, அதே வேளையில் மனதில் பதியவே இல்லாத உரையாடல்களாக இருக்கிறது, உணர்வை தைக்கும் பேச்சுக்களாக எழுத முற்படுங்கள்!

  அப்புறம் எழுத்துப் பிழைகளை கவனித்து வெளியிடுங்கள். உ. தா. //நரிக்குக் காவல் காப்பதற்காக வந்திருந்த தாத்தாவுடன் செழியனும் அடம்பிடித்து வந்திருந்தான். // காவல் நரிக்கா ? அல்லது கடலை காட்டுக்கா?

  எனக்கு கருணாகரசு அவர்கள் சொன்ன அதே மொழியை உன்னிடமும் சொல்ல ஆசை அதற்கு இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொள்ளனும் தம்பி ...

  மீண்டும் பேசுவோம் ....

  ReplyDelete
 8. அருமையான ஆரம்பம் வெற்றி.. இன்னும் சிறப்பான வார்த்தை கோர்வைகளுடன், பிழைகளின்றி இன்னும் இன்னும் சிறப்பாக அடுத்த பகுதியை நகர்த்தி செல்ல வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 9. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

  ReplyDelete
 10. அட! அடுத்து தொடர்கதை!! அமர்க்களம்தான் தம்பி! நல்ல ஆரம்பம்....தாத்தாவும் பேரனும் கதை சொல்லல் என்று களை கட்டுகிறது கதைக்களம். எழுத்துப் பிழைகளைச் சற்று கவனியுங்கள்...(எங்களுக்கும் வருவதுதான்...)

  மண் வாசனை இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாமோ என்று, உரையாடல்களுக்கு நடுவில் இன்னும் கொஞ்சம் உணர்வுகள் கலந்தால் சுவை கூடுமோ...தம்பி....

  ரசித்தோம் மிகவும்...வித்தியாசமாக இருக்கு...தொடர்கின்றோம் இதோ அ;டுத்த பகுதிக்குச் செல்கின்றோம்...

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...