Sep 25, 2014

சிறுகதை: பேய்

என்றுமில்லாமல் திடீரென்று மாலையில் சிறப்பு வகுப்பு வைத்து தாமதப்படுத்திவிட்டதனால் பள்ளிக்கூடம் முடிந்து ஊருக்கு வரும் நகரப் பேருந்தைத் தவறவிட்டு, கடைசிப் பேருந்தை பிடித்து அப்போதுதான் ஆளரவமற்ற அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியிருந்தேன். இன்னும் இரண்டு கி.மீ சைக்கிள் மிதித்தால் தான் எனது ஊருக்குச் செல்ல முடியும். ஏழு மணியோடு கடைசி பேருந்தும் என் கிராமத்திற்குச் சென்று திரும்பிவிடும்! சந்தில் நிறுத்தியிருந்த சைக்கிளின் கேரியரில் கையிலிருந்த இரண்டு நோட்டுகளையும் வைத்துவிட்டு, சைக்கிளை வெளியே எடுத்தபிறகு, தனியாக எப்படிச் செல்வது என்ற யோசனையிலே தயக்கத்துடனே யாராவது துணைக்கு வருவார்கள் என்று பயத்துடன் நின்றுகொண்டிருந்தேன். வாட்சில் மணி பார்த்தேன். பெரிய முள் ஒன்பதைத் தாண்டியும் சிறிய முள் எட்டிற்கு அருகிலும் நின்றுகொண்டிருக்க நொடி முள் வேகவேகமாக ஓடிக்கொண்டு இருந்தது! ஊருக்குச் செல்பவர்கள் பேருந்தைத் தவறவிட்டு  என்னைப்போலவே யாராவது வருவார்கள் என்று காத்திருந்து பார்த்தேன். நேரம் நொடி முள்ளைப் போன்று வேக வேகமாக ஓட எனக்குள்ளும் பயம் அதிகமாகிக்கொண்டிருந்தது.